search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பழனி பிரசாதம் குறித்து அவதூறு- பா.ஜ.க. மாநில நிர்வாகி மீது போலீசில் புகார்
    X

    பழனி பிரசாதம் குறித்து அவதூறு- பா.ஜ.க. மாநில நிர்வாகி மீது போலீசில் புகார்

    • கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோவில் நிர்வாகம் எங்கு நெய் வாங்கியது எனவும், பஞ்சாமிர்தத்தின் உண்மை தன்மை குறித்து விளக்க வேண்டும் எனவும் செய்தி பரப்பினர்.
    • பழனி கோவில் பஞ்சாமிர்தத்திற்கு ஆவின் நிர்வாகத்திடம் இருந்தே நெய் சப்ளை செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    பழனி:

    திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகார் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனைத் தொடர்ந்து லட்டு தயாரிக்க பயன்படுத்திய பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி திருப்பதி தேவஸ்தானத்துக்கு திண்டுக்கல்லில் இயங்கி வரும் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் சார்பில் நெய் அனுப்பப்பட்டு வந்தது தெரிய வந்தது.

    அந்த நெய்யில் கொழுப்பு இருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து தங்களது நிறுவனம் சார்பில் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த நிறுவனத்தில் திண்டுக்கல் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் அனிதா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    நிறுவனத்தில் பால் பொருட்கள் தயாரிக்கப்படும்போது வெளியேறும் கழிவு நீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இதனை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வு செய்து அதில் உள்ள பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தனர். குறைபாடு இருப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

    நேற்று மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இன்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நெய் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆய்வுக்கு வந்தனர். அவர்கள் நெய் தயாரிக்க பயன்படுத்தப்படும் பால் மற்றும் மற்ற பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஏற்கனவே ஆலையின் உரிமையாளர் தங்கள் நிறுவனத்தில் தரமான பொருட்கள் மட்டுமே உற்பத்தி செய்வதாகவும், இது குறித்து தரக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் வழங்கிய சான்று உள்ளதாகவும் தெரிவித்த நிலையில் அடுத்தடுத்து சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே பழனி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திலும் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் இருந்து வாங்கிய நெய் பயன்படுத்தப்பட்டது என்றும், எனவே இது குறித்து கோவில் நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சமூக வலைதளங்களில் செய்தி பரப்பப்பட்டது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோவில் நிர்வாகம் எங்கு நெய் வாங்கியது எனவும், பஞ்சாமிர்தத்தின் உண்மை தன்மை குறித்து விளக்க வேண்டும் எனவும் செய்தி பரப்பினர்.

    ஆனால் பழனி கோவில் பஞ்சாமிர்தத்திற்கு ஆவின் நிர்வாகத்திடம் இருந்தே நெய் சப்ளை செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பின்பும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்பிய பா.ஜ.க.மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது கோவில் தேவஸ்தான நிர்வாகி பாண்டியராஜன் அடிவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×