search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    38 வயது பெண்ணுடன் காதல்- உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொள்ளையனாக மாறிய 18 வயது வாலிபர்
    X

    38 வயது பெண்ணுடன் காதல்- உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொள்ளையனாக மாறிய 18 வயது வாலிபர்

    • முதலில் யாரும் இல்லாத தெருக்களில் சந்தேகம் வராதபடி பிரவீன் பாத்திமா நோட்டமிட்டு காத்திருப்பார்.
    • மூதாட்டிகள் யாரேனும் நகை அணிந்து வந்தால் பார்த்து சொல்வதும் இதன் பிறகு அக்பர்பாட்ஷா செயினை பறித்துச் செல்வதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

    அறியா பருவத்தில் ஏற்படும் கண்மூடித்தனமான காதலால் 18 வயது வாலிபர் ஒருவர் செயின் பறிப்பு கொள்ளையனாக மாறி இருக்கிறார். தன்னை விட 20 வயது மூத்த பெண்ணுடன் ஏற்பட்ட வயதுக்கு மீறிய வில்லங்க காதலால் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் வாலிபரின் பெயர் அக்பர் பாஷா.

    பல்லாவரத்தை சேர்ந்த இவருக்கும் நெல்லையை சேர்ந்த பிரவின் பாத்திமா என்ற 38 வயது பெண்ணுக்கும் இடையே 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம் ஏற்பட்டது. பிரவின் பாத்திமா ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நேரில் சந்தித்து பேசி தங்களது வில்லங்க காதலை வளர்த்து கொண்டனர். அக்பர்பாட்ஷா, பிரவின் பாத்திமாவை பார்க்க நெல்லைக்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் ஒன்றாக சென்னை வந்து பழைய பல்லாவரம் அம்மன் நகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். அதே பகுதியில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் ஒன்றாக... ஒரே பிரிவில் வேலைக்கு சேர்ந்தனர்.

    இருவரும் வேலை முடிந்து ஒன்றாக ஊர் சுற்றுவது... உல்லாசமாக இருப்பது என கணவன்-மனைவியாகவே வாழ்ந்து வந்தனர். இவர்களது "கூடுதல்" செலவுக்கு சம்பாதிக்கும் பணம் போதுமானதாக இல்லை. அக்பர்பாட்ஷா பிரவின் பாத்திமாவுக்காக கொள்ளையனாக மாறினார். இவர் செயின் பறிப்பில் ஈடுபடும் இடங்களுக்கு கள்ளக்காதலியான பர்வின் பாத்திமா உடன் செல்வார்.

    ரெயில் நிலையங்களையொட்டி உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத சிறிய சந்து பகுதிகளை தேர்வு செய்து தனியாக நடந்து செல்லும் மூதாட்டிகளை குறி வைத்து செயின் பறிப்பதை இருவரும் வழக்கமாக வைத்திருந்தனர்.

    அந்த வகையில் கோடம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே காய்கறி வாங்கிக் கொண்டு தனியாக சென்ற கனிகா (58) என்ற பெண்ணிடம் நேற்று காலையில் அக்பர்பாட்ஷா செயினை பறித்தார். அப்போதுதான் இருவரும் போலீசில் சிக்கினர். செயினை பறிக்கும் இடங்களில் அக்பர்பாட்ஷா கைவரிசை காட்டிய பின்னர் பிரவின் பாத்திமா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஓடிச்சென்று உதவுவது போல நடிப்பார்.

    நேற்றைய செயின் பறிப்பு சம்பவத்தின் போதும் பிரவின் பாத்திமாவும், அக்பர் பாட்ஷாவும் அதே போன்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். ஆனால் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களுக்கு பிரவின் பாத்திமா மீது சந்தேகம் ஏற்பட்டது. செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய அக்பர் பாட்ஷாவை விரட்டிய போது அவர் அருகில் உள்ள வீட்டில் போய் பதுங்கினார்.

    இதையடுத்து கோடம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அக்பர் பாட்ஷாவை ஆட்டோ டிரைவர்கள் உதவியுடன் மடக்கி பிடித்தனர். பிரவின் பாத்திமாவையும் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போதுதான் இருவரது குற்றச்செயல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

    பிரவின் பாத்திமாவுக்கு நெல்லையில் 2 குழந்தைகள் உள்ளன. இந்த குழந்தைகளின் செலவுக்காகவும், அக்பர் பாட்ஷாவுடன் சென்னையில் குடும்பம் நடத்துவதற்கும் இது போன்ற செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக பிரவின் பாத்திமா வாக்குமூலம் அளித்துள்ளார். செயினை பறிக்கும் இடங்களில் அக்பர் பாட்ஷா இதற்கு முன்பும் பலமுறை சிக்கி உள்ளார். அப்போதெல்லாம், பிரவின் பாத்திமா தெரியாத ஆள் போல கூட்டத்தில் புகுந்து "பாவம் பையன் தெரியாமல் திருடி விட்டான்" என்று பேசி தப்பிக்கவும் வைத்துள்ளார்.

    முதலில் யாரும் இல்லாத தெருக்களில் சந்தேகம் வராதபடி பிரவீன் பாத்திமா நோட்டமிட்டு காத்திருப்பார். அதன் பின்னர் மூதாட்டிகள் யாரேனும் நகை அணிந்து வந்தால் பார்த்து சொல்வதும் இதன் பிறகு அக்பர்பாட்ஷா செயினை பறித்துச் செல்வதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

    அக்பர் பாட்ஷா தப்பி ஓடும் போது திருடனை பிடிப்பது போல் பிரவீன் பாத்திமா கூச்சலிட்டபடி ஓடுவதும், யாரேனும் பிடிக்க வந்தால் அவர்களை திசை திருப்பி, அக்பர் பாட்ஷாவை தப்ப வைப்பதிலும் கை தேர்ந்தவராக செயல்பட்டுள்ளார்.

    செயினை பறி கொடுத்தவர்களுக்கு ஆறுதல் கூறுவது போல நடித்து போலீசிடம் செல்லாமல் காலம் தாழ்த்தி அக்பர் பாட்ஷாவை தப்ப வைத்து தானும் தப்பிச் செல்வதும் அவரது வேலையாக இருந்துள்ளது.

    ரெயில் நிலையங்கள் அருகில் இருக்கும் தெருக்களில் மட்டுமே இது போன்று நாடகம் ஆடி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு ரெயிலில் ஏறிக்கொண்டு தப்பிச் செல்வதே தங்களது திட்டம் என அக்பர் பாட்ஷா வாக்குமூலம் அளித்துள்ளார்.

    கோடம்பாக்கம் போலீசார் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×