search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவொற்றியூர் ஓட்டலில் பரோட்டாவுக்கு பாயா கேட்டு ரகளை செய்த 2 போலீசார் சஸ்பெண்டு
    X

    திருவொற்றியூர் ஓட்டலில் பரோட்டாவுக்கு 'பாயா' கேட்டு ரகளை செய்த 2 போலீசார் சஸ்பெண்டு

    • போலீஸ்காரர்கள் கோட்டமுத்து, தனசேகர் ஆகிய 2 பேரையும் சஸ்பெண்டு செய்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
    • பொதுமக்களுக்கு காவலாக இருக்க வேண்டிய போலீசாரே ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், கணக்கர் தெருவில் ஒட்டல் உள்ளது. இங்கு இரவு திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றும் 5 போலீசார் பணி முடிந்து சாப்பிட சென்றனர்.

    அப்போது அவர்கள் பரோட்டாவுக்கு "பாயா" கேட்டு ஓட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டனர். இதனை கண்டித்த ஊழியர்களை அவர்கள் மிரட்டியதாகவும் தெரிகிறது.

    மேலும் ஓட்டலுக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவரை வழி விட மறுத்து தாக்கினர். அப்போது போலீசார் அனைவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    போலீசார் ஓட்டலில் ரகளை செய்யும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. மேலும் இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஏட்டு கோட்ட முத்து, காவலர் தனசேகர் உள்பட 5 போலீசாரும் ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டது தெரிந்தது.

    இதையடுத்து போலீஸ்காரர்கள் கோட்டமுத்து, தனசேகர் ஆகிய 2 பேரையும் சஸ்பெண்டு செய்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மேலும் 3 போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு காவலாக இருக்க வேண்டிய போலீசாரே ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×