search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அதிகாரிகள் போல் நடித்து உடற்பயிற்சி கூடங்களில் லட்சக்கணக்கில் பணம் வசூல்- பெண் உள்பட 3 பேர் கைது
    X

    அதிகாரிகள் போல் நடித்து உடற்பயிற்சி கூடங்களில் லட்சக்கணக்கில் பணம் வசூல்- பெண் உள்பட 3 பேர் கைது

    • சிவகாசியில் சிவமுருகன் என்பவர் நடத்தும் உடற்பயிற்சி கூடத்துக்கு 3 பேர் வந்து அதிகாரிகள்போல் நடித்து பணம் கேட்டனர்.
    • அதிகாரிகள்போல் நடித்து உடற் பயிற்சி கூடங்களில் பணம் வசூல் செய்யப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் ஏராளமான உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அவைகளில் ஏராளமானோர் உறுப்பினர்களாக இருந்து உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.

    தனியார் உடற்பயிற்சி கூடங்களுக்கு கட்டணம் மூலம் அதிக வருமானம் வருவதால் அதிகாரிகள்போல் நடித்து ஒரு கும்பல் உடற்பயிற்சி கூடங்களில் அரசின் விதி முறைகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை. எனவே உரிமத்தை ரத்து செய்து விடுவோம் என மிரட்டி பண வசூலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் உடற்பயிற்சி கூடம் வைத்து நடத்தும் உரிமையாளர்களிடம் உரிமம் உள்ளதா? பயிற்சியாளர்கள் பயிற்சி அளிப்பதற்குண்டான சான்றிதழ் பெற்றுள்ளனரா? உடற் பயிற்சி எடுத்துக்கொள்ள வருபவர்களுக்கு சத்தான உணவு வகைகள் வழங்கப்படுகிறதா? முறையான கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி மோசடி கும்பல் அதிகாரிகள் போர்வையில் வசூல் வேட்டை நடத்தி உள்ளது.

    அந்த கும்பல் உடற்பயிற்சி கூடம் நடத்தும் உரிமையாளர்கள் முறையாக பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்போவதாக மிரட்டி ஒவ்வொரு உடற்பயிற்சி கூடம் நடத்தும் உரிமையாளர்களிடம் இருந்தும் பணம் வசூலித்து, கடந்த 2 மாதத்தில் மட்டும் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளது.

    இந்த மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் மீது உடற்பயிற்சி கூட உரிமையாளர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதற்கிடையே மோசடி நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த சில உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் மற்ற உடற்பயிற்சி கூட உரிமையாளர்களிடம் மோசடி கும்பல் குறித்து தெரிவித்தனர்.

    இதனால் மற்ற உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் மோசடி கும்பல் வந்தால் அவர்களை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். இந்த நிலையில் சிவகாசியில் சிவமுருகன் என்பவர் நடத்தும் உடற்பயிற்சி கூடத்துக்கு 3 பேர் வந்து அதிகாரிகள்போல் நடித்து பணம் கேட்டனர்.

    அவர்கள் மீது சந்தேகமடைந்த சிவமுருகன், சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் மதுரை திருவள்ளுவர் நகரைச்சேர்ந்த சாமி ராஜ் (வயது 30), தினமணி நகரை சேர்ந்த மார்க்கரெட் இன்சென்ட்ஜெனிபர் (28), வில்லாபுரத்தை சேர்ந்த ரங்கராஜ் (26) என்பது தெரியவந்தது.

    அவர்கள் அதிகாரிகள் போல் நடித்து உடற்பயிற்சி கூடங்களில் பணம் வசூலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதிகாரிகள்போல் நடித்து உடற் பயிற்சி கூடங்களில் பணம் வசூல் செய்யப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×