search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    6 வீடுகள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிய கும்பல்- தங்க தமிழ்செல்வன் வீடு அருகே பரபரப்பு
    X

    வெடிகுண்டு சம்பவம் குறித்து போலீசாருக்கு தங்கதமிழ்செல்வன் விளக்கமளித்த காட்சி.


    6 வீடுகள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிய கும்பல்- தங்க தமிழ்செல்வன் வீடு அருகே பரபரப்பு

    • வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளின் உதிரி பாகங்களை வைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
    • இதே பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணதேவன்பட்டி நேஷனல் கலாசாலை பள்ளித்தெருவில் நேற்று நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் அங்கிருந்த வீடுகளின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.

    அடுத்தடுத்து 6 வீடுகளின் மீது இந்த வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் வெடிகுண்டு வீசிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இந்த சம்பவத்தில் பலரது வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. சாலையில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டதுடன் கரும்புகையாக காணப்பட்டது. இப்பகுதியில்தான் தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வனின் வீடு உள்ளது. வெடிகுண்டு சத்தம் கேட்டு அவரும் குடும்பத்தினருடன் எழுந்து வெளியே வந்து விசாரித்தார்.

    மேலும் இது குறித்து ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு ஏ.எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

    மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளின் உதிரி பாகங்களை வைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதே பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக வெடிகுண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடைபெற்று வரும் நிலையில் இப்பகுதியில் வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இங்குள்ள தெருக்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசிய நபர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×