search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.1.50 லட்சத்துக்கு ஆண் குழந்தையை விற்ற தம்பதி... 4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
    X

    ரூ.1.50 லட்சத்துக்கு ஆண் குழந்தையை விற்ற தம்பதி... 4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

    • பிறந்த குழந்தை எங்கே என்று கேட்டபோது, தங்களால் குழந்தையை பராமரிக்க இயலாது என்பதால் மதுரையில் உள்ள தனது அண்ணன் வீட்டில் கொடுத்து வளர்க்க வைத்துள்ளதாக சங்கர் கூறினார்.
    • 4 பேரையும் பிடித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள உப்புக்கோட்டை முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 35). இவருக்கு திருமணமாகி குழந்தை இல்லாததால் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனையடுத்து மனைவியின் தங்கை பாண்டீஸ்வரியை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை மதுரையைச் சேர்ந்த சிவக்குமார்-உமா மகேஸ்வரி தம்பதிக்கு விற்று விட்டதாக தகவல் பரவியது. மேலும் கடந்த 2 நாட்களாக குழந்தையை விற்ற பணத்தில் சங்கர் அளவுக்கு அதிகமாக மது குடித்து வீட்டிலேயே அலப்பறை செய்து வந்துள்ளார்.

    இது குறித்து சிறார் நலக்குழு மற்றும் வீரபாண்டி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் மற்றும் சிறார் நலக்குழு களப்பணியாளர் வனராஜ் ஆகியோர் சங்கர் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல் தெரிவித்தனர். பிறந்த குழந்தை எங்கே என்று கேட்டபோது, தங்களால் குழந்தையை பராமரிக்க இயலாது என்பதால் மதுரையில் உள்ள தனது அண்ணன் வீட்டில் கொடுத்து வளர்க்க வைத்துள்ளதாக சங்கர் கூறினார்.

    இருந்தபோதும் அவர்களது பேச்சில் நம்பிக்கை இல்லாமல் சங்கர் கூறிய விலாசத்தில் மதுரைக்கு விரைந்து சென்றனர். மதுரை அம்புஜம் நகரில் வசிக்கும் சிவக்குமார் (45) மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி (35) ஆகியோரை போலீசார் வரவழைத்து விசாரித்தனர். அவர்களும் முறையான பதில் அளிக்காததால் சந்தேகம் வலுத்தது. இதனைத் தொடர்ந்து 4 பேரையும் பிடித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    குழந்தை கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும், போலீசார் கைப்பற்றி கொண்டு வந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் குழந்தை ரூ.1.50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவக்குமார்- உமாமகேஸ்வரி தம்பதி வேறு யாரிடமாவது இது போல வறுமையில் உள்ள தம்பதியிடம் குழந்தையை வாங்கி விற்பனை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×