search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி நாளில் நாயை கட்டிப் போடாதீர்கள்: ஆதரவாக அருகில் இருக்க வேண்டுகோள்
    X

    தீபாவளி நாளில் நாயை கட்டிப் போடாதீர்கள்: ஆதரவாக அருகில் இருக்க வேண்டுகோள்

    • விலங்குகள் வெடி சத்தத்தை கேட்டு மிகவும் பயப்படும்.
    • செல்லப் பிராணிகளுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவ உதவி தேவைப்பட்டால் உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சென்னை:

    தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கும் போது மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வெடிசத்தம் உள்ளூர பயத்தையும் ஏற்படுத்தும். மனிதர்களே இப்படி என்றால் செல்லப் பிராணிகளின் நிலைமை எப்படி இருக்கும்?

    சென்னையில் நாய் வளர்ப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள். வெடி சத்தம் என்றாலே நாய்கள், பறவைகளுக்கு அலர்ஜி தான். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நாளில் நாய் ஓடிவிட்டது என்று தங்கள் விலை உயர்ந்த நாய்களை தொலைத்துவிட்டு பலர் புளூகிராசில் புகார் செய்கிறார்கள்.

    கடந்த ஆண்டில் மட்டும் 6 போன்கால் வந்ததாக இந்த நிறுவன நிர்வாகி சின்னி கிருஷ்ணா கூறினார்.

    விலங்குகள் வெடி சத்தத்தை கேட்டு மிகவும் பயப்படும். எனவே கவனம் தேவை என்கிறார்கள் விலங்குகள் நல ஆர்வலர்கள். பக்கத்து தெருவில் வெடி சத்தம் கேட்டாலே நாய்கள் பயந்து ஓடும். தீபாவளி நேரத்தில் எல்லா பகுதிகளிலும் பட்டாசு வெடிப்பார்கள்.

    இந்த நேரத்தில் நாய்களை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். பட்டாசு வெடிக்கும் நேரங்களில் உரிமையாளர்கள் நாயின் அருகில் இருந்தால் அதன் பயம் குறையும். எங்கேயும் ஓடிவிடக்கூடாது என்பதற்காக நாய்களை கட்டி போடக் கூடாது. வீட்டுக்குள் பாதுகாப்பாக அவிழ்த்து விட வேண்டும்.

    வீட்டுக்கு வெளியே அல்லது பால்கனிகளில் கட்டி வைக்க கூடாது. கழுத்தில் அடையாள அட்டையை கட்டி வைக்க வேண்டும். எதிர்பாராதவிதமாக தொலைந்து போக நேரிட்டால் அடையாளம் காண வசதியாக இருக்கும்.

    மரங்களின் அடியில் வைத்து அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு வெடித்தால் பறவைகள் பீதியில் அங்கும் இங்கும் பறக்கும்.

    வீட்டு உரிமையாளர்கள் இல்லாமல் நாயை தனி அறைக்குள் கட்டி போடுவதை தவிர்க்க வேண்டும். செல்லப் பிராணிகளுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவ உதவி தேவைப்பட்டால் உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சில ஆண்டுகளாக பட்டாசு பயன்பாடு குறைந்து வருகிறது. இதற்கு காரணம் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பட்டு இருக்கும் விழிப்புணர்வுதான் என்றார் சின்னிகிருஷ்ணா.

    Next Story
    ×