search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்
    X

    எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: அ.தி.மு.க. தலைமை கழகத்தில் 'கேக்' வெட்டி கொண்டாட்டம்

    • ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கேக் வெட்டி எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை கொண்டாடினார்கள்.
    • ஒவ்வொரு பகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள் அன்னதானம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்த நாளை எளிமையுடன் கொண்டாடினார்.

    சேலத்தில் அவர் நிர்வாகிகளுடன் கேக் வெட்டினார். முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கூட்டணி கட்சித் தலைவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கேக் வெட்டி எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை கொண்டாடினார்கள். இதில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், பா.வளர்மதி, தாடி ம.ராசு, கமலக்கண்ணன், கோ.சமரசம், மகாலிங்கம், கோவிந்தராஜ், சங்கரலிங்கம் உள்பட முக்கிய பிரமுகர்களும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    சென்னை மேற்கு மாம்பலம் கல்கத்தா காளிபாரி கோவிலில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சுனில் மண்சோறு சாப்பிட்டு எடப்பாடி பழனிசாமி உடல் ஆரோக்கியத்துடன் திகழவும், மீண்டும் முதல்-அமைச்சராக வேண்டியும் அம்மனுக்கு விசேஷ பூஜையும் நடத்தினார்.

    இதை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தொடங்கி வைத்தார். இதில் 69 மகளிரணியினர் பங்கேற்றனர். டாக்டர் சுனிலுடன் தி.நகர் பகுதிச் செயலாளர் உதயா, இலக்கிய அணி டி.சிவராஜ், எம்.ஜி.ஜீவா, ஆலந்தூர் பகுதிச் செயலாளர் பரணி பிரசாத், ஜாகீர் உசேன், சூரியகலா, சுரேஷ்குமார், லோகநாதன், ராயல் வெங்கடேஷ் உள்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    ஆயிரம் விளக்கு பகுதி 117-வது வட்டச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் சின்னையன் (எ) ஆறுமுகம் தேனாம்பேட்டையில் 1000 பேருக்கு பிரியாணி வழங்கி எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை கொண்டாடினார்.

    ஆயிரம்விளக்கு தொகுதி 110-வது வார்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி வைகுண்டபுரம் தேவி கருமாரியம்மன் கோவிலில் 1001 பெண்கள் பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். பால்குட ஊர்வலத்தை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தொடங்கி வைத்தார்.

    இந்த சிறப்பு வழிபாட்டில் இலக்கிய அணி இணைச் செயலாளர் டி.சிவராஜ், பரணி பிரசாத், கே.எஸ்.மலர்மன்னன், புஷ்பா நகர் ஆறுமுகம், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெரும்பாக்கத்தில் அம்மா பேரவை துணைச் செயலாளரான பரங்கிமலை கிழக்கு ஒன்றியச் செயலாளர் பெரும்பாக்கம் எ.ராஜசேகர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி ஸ்ரீ பழண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி அன்னதானம், வேட்டி-சேலை வழங்கினார். இதில் ராஜாராம் உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

    வேளச்சேரியில் கழக வர்த்தக அணி இணைச் செயலாளரான காத்தான் குளம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஏ.எம்.ஆனந்தராஜா எடப்பாடி பழனிசாமி பெயரில் கோவிலில் விசேஷ பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்கினார்.

    இதே போல் ஒவ்வொரு பகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள் அன்னதானம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

    Next Story
    ×