search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் நடந்த கார் வெடிப்பு சதி வேலை பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
    X

    கோவையில் நடந்த கார் வெடிப்பு சதி வேலை பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

    • கார் குண்டு வெடிப்பு என்பது தற்செயலாக எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தா? அல்லது ஏதேனும் சதி வேலையா?.
    • காவல்துறை எந்தவித அரசியல் அழுத்தமுமின்றி, சுதந்திரமாக தீவிர விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளையும், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    23.10.2022 அன்று காலை கோவை நகரில் உக்கடம் கோட்டைமேடு பகுதியில், சங்கமேஷ்வரர் கோவில் அருகே அதிகாலை 4.10 மணியளவில் கார் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாகவும், காரில் இருந்த ஒரு நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன. மேலும், விசாரணைக்காக தமிழ்நாடு காவல்துறை தலைவர், உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவித்தன.

    காவல்துறை தலைவர் நேற்றைய பேட்டியின்போது, சம்பவ இடத்தை தடய அறிவியல்துறை நிபுணர்கள், மோப்ப நாய் பிரிவினர் மற்றும் வெடிகுண்டு பிரிவினரும் நேரில் ஆய்வு செய்து வருவதாகவும், காரின் உரிமையாளர் யார்? சிலிண்டர் வாங்கப்பட்டது பற்றிய விசாரணைகளை நடத்தி வருவதாகவும் கூறினார். மேலும் இச்சம்பவம் விபத்தா? தற்செயலா? அல்லது சதிவேலையா? என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக பேட்டி அளித்துள்ளார்.

    இறந்த நபரின் பெயர் ஜமேஷா முபின் என்றும், இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசிய பாதுகாப்பு படையினரால் விசாரணை செய்யப்பட்டவர் என்றும், அவரது வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் வெடிமருந்து பொருட்கள் இருந்ததாகவும் தெரிவித்தார்.

    கோவையில் கார் வெடிகுண்டு வெடித்துள்ளது. வெடிகுண்டு வைத்த காரை இயக்கி, மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் வெடிக்க வைத்து, பல உயிர்களை பலி வாங்க சதி செய்த நிகழ்வாகவும் இது கருதப்படுகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், விபத்து நடந்த இடத்தில் அபாயகரமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஆணிகள், கோலி குண்டுகள், இரும்பு குண்டுகள் (பால்ரஸ்) போன்றவை சிதறிக் கிடந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. இது உண்மையிலேயே மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது.

    எனவே, இந்த கார் குண்டு வெடிப்பு என்பது தற்செயலாக எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தா? அல்லது ஏதேனும் சதி வேலையா? என்றும், அப்படியெனில் இதன் பின்னணியில் சமூக விரோதிகள் எவரேனும் இருக்கின்றனரா என்று காவல்துறை எந்தவித அரசியல் அழுத்தமுமின்றி, சுதந்திரமாக தீவிர விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளையும், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×