search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பேன்- எடப்பாடி பழனிசாமி பேட்டி
    X

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பேன்- எடப்பாடி பழனிசாமி பேட்டி

    • ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறது.
    • பா.ஜ.க. எங்களுடன் தான் கூட்டணியில் உள்ளது.

    நெல்லை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று நெல்லை வந்தார்.

    அவருக்கு மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து பல்வேறு இடங்களில் மேள தாளங்கள், தாரை, தப்பட்டை முழங்க சாலை ஓரங்களில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் திரண்டு எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமியுடன் ஏராளமான பெண்கள் 'செல்பி' எடுத்துக்கொண்டனர்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி திருத்து கருப்பசாமி பாண்டியன்- கொம்பன்குளம் பி.ஏ. சாமிநாதன் ஆகியோரது இல்லத் திருமணவிழாவில் கலந்து கொண்டு மணமக்கள் அமச்சியார் என்ற அபி-கரண் ஆகியோரது திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் காவேரியில் இருந்து பாதுகாக்கப்பட்ட தண்ணீர் வழங்க அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.484 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிந்து சோதனை ஓட்டமும் முடிந்துள்ளது. ஆனால் கடந்த 21 மாத தி.மு.க. ஆட்சியில் அது செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் வழங்காத ஆட்சியாக தி.மு.க. ஆட்சி உள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி-சேலைகள் சரியாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இன்னும் பலருக்கு வேட்டி-சேலைகள் வழங்கப்படாமல் உள்ளது.

    டெல்டா மாவட்டங்கள் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் போது நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது.

    ஆனால் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தற்போது அவர்களுக்கு குறைந்தபட்ச இழப்பீடு தொகை கூட வழங்கவில்லை.

    ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறது. பா.ஜ.க. எங்களுடன் தான் கூட்டணியில் உள்ளது.

    அ.தி.மு.க. யாரையும் நம்பி இல்லை. பல கட்சிகளுக்கு அ.தி.மு.க. உதவிகரமாக இருப்பதோடு தாங்கி பிடித்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். இந்த வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தற்போது தொடர்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதில் தவறில்லை. எழுதாத பேனாவை ரூ.80 கோடி செலவில் கடலில் வைப்பதை தவிர்த்துவிட்டு கருணாநிதி நினைவு மண்டபத்தில் வைக்கலாம்.

    ரூ.1 கோடியில் பேனா நினைவு சின்னம் வைத்துவிட்டு மீதமுள்ள ரூ.79 கோடியில் மாணவர்களுக்கு எழுதக்கூடிய பேனா வழங்கலாம்.

    தி.மு.க. சார்பில் தேர்தல் வாக்குறுதியாக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. இதுவரை அதனை அவர்கள் செயல்படுத்தவில்லை.

    முக்கியமாக மகளிருக்கான மாத ரூ.1,000 உரிமைத்தொகை இதுவரை வழங்கவில்லை. இதனால் கடந்த 21 மாத காலத்தில் ஒவ்வொரு பெண்ணிற்கும் ரூ.21 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாததால் தி.மு.க. மீது மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் தற்போது கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஈரோடு இடைத்தேர்தலுக்கு பின்னர் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்ணார்பேட்டை-புதிய பஸ்நிலைய சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேனர்கள் மற்றும் சாலை இருபுறமும் கட்சிக்கொடிகள் வைக்கப்பட்டிருந்தது.

    Next Story
    ×