search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பொங்கல் பரிசு தொகையாக தி.மு.க. அரசு ரூ.5000 வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
    X

    பொங்கல் பரிசு தொகையாக தி.மு.க. அரசு ரூ.5000 வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

    • கொரோனா காலத்தில் இருந்து மீண்டு வந்த மக்களுக்கு மு.க.ஸ்டாலின் ரூ.5000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
    • என்றென்றும் ஏழை மக்களுக்கு அ.தி.மு.க. உறுதுணையாக இருக்கும்.

    திருவெண்ணைநல்லூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட விருத்தாச்சலம் மெயின் ரோட்டில் நரிக்குறவர் சமுதாய மக்கள் தங்குவதற்கு வீடு இல்லாமல் தவித்து வந்தனர். இதனை அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு தனது சொந்த செலவில் நரிக்குறவ மக்களுக்கு வீடு கட்டி முடித்துள்ளார். இந்த 20 வீடுகளை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

    2023-ம் ஆண்டின் சிறப்பான தொடக்கமாக இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன். அ.தி.மு.க சார்பில் சிறப்பான வீடுகளை கட்டிக் கொடுத்த மாவட்ட செயலாளர் குமரகுருவை நான் பாராட்டுகிறேன். அனைவருக்கும் வீடு வேண்டும். உடுத்த உடை வேணும். சாப்பிட உணவு வேண்டும். இந்த மூன்றையும் வழங்கியவர் எம்.ஜி.ஆர். அதற்குப் பிறகு ஜெயலலிதா தொடர்ந்து பணியாற்றினார்.

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம். 20 நரிக்குறவர்களின் குடும்பங்களில் நாம் சிரிப்பை காண்கிறோம். இதுதான் அ.தி.மு.க.. இந்தியாவிலேயே உயர் கல்வி படிப்பதில் முதலிடம் தமிழ்நாடு. இதை உருவாக்கி காட்டியது அதிமுக.

    அரசு பொங்கல் தொகுப்பு என்கிற பெயரில் தொகுப்பு பொருட்களை தற்போது அறிவித்தார்கள். ஆனால் அதில் கரும்பை தவிர்த்து விட்டார்கள். கரும்பு தான் நமது பாரம்பரிய பழக்கம். ஆனால் கரும்பை கூட வழங்காமல் நிராகரித்து விட்டார்கள். ஒட்டு மொத்த விவசாயிகளின் கோரிக்கையை அ.தி.மு.க. ஏற்று போராட்டத்தினை அறிவித்தது.

    அதன்பின்னர்தான் தற்போது கரும்பையும் பொங்கல் தொகுப்பில் சேர்த்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் பொங்கல் தொகுப்பு என்கிற திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2500 அதிமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என அறிக்கை கொடுத்தார். ஆனால் தற்போது 1,000 ரூபாய் தான் வழங்குகிறார்.

    கொரோனா காலத்தில் இருந்து மீண்டு வந்த மக்களுக்கு மு.க.ஸ்டாலின் ரூ.5000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். என்றென்றும் ஏழை மக்களுக்கு அ.தி.மு.க. உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×