என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஈரோடு இடைத்தேர்தல்: பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பு- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை
- பணப்பட்டுவாடா பற்றி புகார் வந்தால் உடனே அங்கு செல்லும் வகையில் பறக்கும் படையினர் தயாராக இருப்பார்கள்.
- இன்னும் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொள்ளும்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடு குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு "மாலைமலர்" நிருபருக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்திருந்தாரே? அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
பதில்:- இந்த புகார் மீது விசாரணை மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் அறிக்கை கொடுத்துள்ளார். அதில் வாக்காளர் பட்டியலில் சரியாக இருப்பதாக கூறி உள்ளார்.
தேர்தல் கமிஷனில் 5 வாக்குச்சாவடிகளை குறிப்பிட்டு புகார் சொல்லப்பட்டிருந்தது. இதனால் அந்த 5 வாக்குச்சாவடிகளின் வாக்காளர் பட்டியலை சரி பார்த்ததில் அனைத்தும் சரியாகவே உள்ளது.
கேள்வி:- தேர்தல் பிரசாரத்தில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக இறங்கி உள்ள நிலையில் 3 தேர்தல் பார்வையாளர்கள் தான் ஈரோட்டுக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். கூடுதலாக பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்களா?
பதில்:- இதுவரை 3 தேர்தல் பார்வையாளர்கள் வந்துள்ளனர். பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், தேர்தல் செலவினை பார்வையாளர் கவுதம்குமார், காவல் துறை சம்பந்தமான பார்வையாளர் சுரேஷ்குமார் சந்தேவ் அங்கு உள்ளனர்.
கேள்வி:- ஈரோட்டில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கண்காணிப்பு கேமரா அமைக்க திட்டம் உள்ளதா? சென்னையில் இருந்தபடி அனைத்து 'பூத்'களையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படுமா?
பதில்:- 238 வாக்குச்சாவடிகளில் எந்தெந்த வாக்குச்சாவடிகளுக்கு கண்காணிப்பு கேமரா வைக்கிறார்களோ அதை சென்னையில் இருந்து கண்காணிக்கலாம். மற்ற வாக்குச்சாவடிகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும். அதற்கான ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்படும்.
கேள்வி:- ஓட்டு போடுவதற்கு என்னென்ன ஆவணங்களை காண்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டதா?
பதில்:- கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 11 வகையான ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணத்தை காண்பிக்கலாம். வாக்காளர் அடை யாள அட்டை இருந்தால் அதையும் காண்பிக்கலாம்.
கேள்வி:- வாக்குப்பதிவு நேரத்தில் மாற்றம் இருக்குமா?
பதில்:- ஏற்கனவே உள்ள நேரம்தான். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம்.
கேள்வி:-80 வயது நிரம்பியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதா?
பதில்:- ஆமாம். 80 வயது நிரம்பியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க அங்குள்ள தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம். அந்த பணிகளும் நடந்து வருகிறது.
கேள்வி:- ஈரோடு தொகுதியில் இதுவரை எவ்வளவு பணம் பிடிபட்டு உள்ளது.
பதில்:- இதுவரை 25 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
கேள்வி:- பறக்கும் படை கண்காணிப்பு எந்த அளவில் உள்ளது?
பதில்:- தொகுதியில் தினமும் வாகன சோதனை நடந்து வருகிறது. சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டு வருகிறது. 6 பறக்கும் படையினர் 3 ஷிப்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.
கேள்வி:- வேட்பாளருக்கு ஏதாவது மிரட்டல் புகார்கள் வந்துள்ளதா?
பதில்:- இதுவரை எங்களுக்கு அது போன்ற புகார்கள் வரவில்லை.
கேள்வி:- இடைத்தேர்தல் என்றாலே பணம் விளையாடும். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை இந்த தேர்தலில் எப்படி தடுப்பீர்கள்?
பதில்:- நாங்கள் ரொம்ப தீவிரமாக கண்காணிக்கிறோம். இப்போது அங்கு விஜிலன்ஸ் டீம், வருமான வரித்துறை அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை பெரிய அளவில் புகார்கள் வரவில்லை. அங்குள்ள நிலைமைகளை தேர்தல் பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பணப்பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்வுகளை தேர்தல் பார்வையாளர்களே 'அறிக்கை'யாக தயாரித்து இந்திய தேர்தல் கமிஷனுக்கு கூட அனுப்பலாம். இதில் தேர்தல் கமிஷன் இறுதி முடிவு எடுக்க தேர்தல் பார்வையாளர்களே பரிந்துரைக்க முடியும்.
கேள்வி:- வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் என்னென்ன கண்காணிப்பில் ஈடுபடுகிறது?
பதில்:- பொதுவாக ரோடுகளில் தடுப்பு அமைத்து வாகன சோதனை நடத்துவார்கள். சோதனை சாவடிகள் பலப்படுத்தப்படும்.
குறிப்பாக பணப்பட்டுவாடா பற்றி புகார் வந்தால் உடனே அங்கு செல்லும் வகையில் பறக்கும் படையினர் தயாராக இருப்பார்கள். இன்னும் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொள்ளும்.
கேள்வி:- நீங்கள் ஈரோடு தொகுதிக்கு சென்று வரும் உத்தேசம் உள்ளதா?
பதில்:- தேர்தல் கமிஷனில் இருந்து வரும் உத்தரவை பொறுத்துதான் அது அமையும். பொதுவாக இடைத்தேர்தலுக்கு நாங்கள் செல்வது இல்லை. தேர்தல் பார்வையாளர்களே பார்த்து முடிவு செய்வார்கள். அவர்களே கமிஷனுக்கு தேவையான தகவல்களை அறிக்கையாக தயாரித்து கொடுப்பார்கள்.
தேர்தல் பார்வையாளர்கள் கூடுதலாக தேவைப்பட்டால் தேர்தல் ஆணையம் முடிவு செய்து அனுப்பி வைக்கும்.
இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
1. கடவுச்சீட்டு, 2. ஓட்டுநர் உரிமம், 3. மத்திய-மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட பணியாளர் அடையாள அட்டை, 4. புகைப்படத்துடன் கூடிய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம், 5. மத்திய அரசு வழங்கும் நிரந்தர கணக்கு எண் அட்டை, 6. தேசிய மக்கள் பதிவேடு அடையாள அட்டை, 7. தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அட்டை, 8. தொழிலாளர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட காப்பீட்டு அட்டை, 9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், 10 சட்டசபை, பாராளுமன்றம் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலர் அடையாள அட்டை, 11. ஆதார் அட்டை.
இந்த 11 வகை ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்களிப்பதற்கு அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்