search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 ஆண்டுகளில் இல்லாத விலை ஏற்றத்தால் ஏக்கத்துடன் தவிப்பு- நடுத்தர ஏழை மக்களிடம் தங்குமா தங்கம்?
    X

    100 ஆண்டுகளில் இல்லாத விலை ஏற்றத்தால் ஏக்கத்துடன் தவிப்பு- நடுத்தர ஏழை மக்களிடம் தங்குமா தங்கம்?

    • தங்கத்தின் விலை நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏழைகளால் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு விண்ணை முட்டும் வகையில் உயர்ந்துள்ளது.
    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 முதல் 8 சதவீதம் அளவுக்கு தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து நடுத்தர மக்களின் இதயத்தில் இடியாக இறங்கி இருக்கிறது.

    நடுத்தர மற்றும் ஏழை மக்களின் அவசர தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் கை கொடுக்கும் ஒரு பொருள் வீட்டில் இருக்கிறது என்றால் அது தங்கமாக மட்டுமே இருக்க முடியும்.

    அந்த அளவுக்கு மிடில் கிளாஸ் குடும்பத்தினரின் மருத்துவ செலவாக இருந்தாலும் சரி கல்வி கட்டணமாக இருந்தாலும் சரி தங்கம் மட்டுமே அவர்களுக்கு கை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

    இதனால் நகைக்கடைகளில் மாதச் சீட்டு செலுத்தி சிறுக சிறுக சேமித்து 12 மாதங்கள் முடிந்த பிறகு தங்களது பெண் குழந்தைகளுக்கு தேவையான நகைகளை சேர்க்க வேண்டும் என்பதே மாதச் சம்பளம் வாங்கும் ஒவ்வொரு தந்தையின் கனவாகவே இருந்து வருகிறது.

    தங்களது வருமானத்துக்கு ஏற்ப ரூ. 500 முதல் ஐந்தாயிரம் வரை சேமிப்பவர்களும் உண்டு. இப்படி பெண் குழந்தை பிறந்த நாளிலிருந்து ஒவ்வொரு மாதமும் சீட்டு போட்டு நகை வாங்கி சேமித்து தங்களது ஆசை மகளுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் பலரே நடுத்தர வர்க்கத்தில் நிறைந்திருப்பார்கள்.

    இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்கப்பட்டு வீட்டில் இருக்கும் தங்க நகைகள் தான் அவசர தேவைக்கும் அருமருந்தாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தங்கத்தின் விலை நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏழைகளால் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு விண்ணை முட்டும் வகையில் உயர்ந்துள்ளது.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 முதல் 8 சதவீதம் அளவுக்கு தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து நடுத்தர மக்களின் இதயத்தில் இடியாக இறங்கி இருக்கிறது. கொரோனா காலத்துக்கு பிறகு மிகவும் குறைந்த இடைவெளியில் இதுபோன்று தங்கத்தின் விலை இவ்வளவு அதிகமாக அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது என்கிறார்கள் நகை வியாபாரிகள்.

    ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடுத்தடுத்து வரும் பண்டிகை காலங்கள் அமெரிக்காவில் வங்கிகளில் ஏற்பட்டுள்ள நஷ்டம் மற்றும் திவால் நடவடிக்கைகளால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். கடந்த 18-ந்தேதி அன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ஒரு ரூ.5,520 ஆக இருந்தது.

    நேற்று தங்கத்தின் விலை மேலும் அதிகரித்து ரூ.5,570 ஆக அதிகரித்து உள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.44 ஆயிரத்து 560 ஆக உள்ளது.

    கடந்த 3, 4 மாதங்களாக பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி, அமெரிக்க வங்கிகளின் திவால் போன்றவற்றால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாகவே கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்றும் கூறுகிறார் சென்னை தங்க, வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளரான சாந்தகுமார்.

    தங்கத்தின் விலை குறித்து அவர் மேலும் கூறும்போது, "அமெரிக்காவில் சிலிக்கான் வேலி என்கிற வங்கி உள்பட 4 வங்கிகள் திவால் ஆகி உள்ளன. மேலும் 8 வங்கிகள் இந்த வரிசையில் உள்ளன. அந்த வங்கிகளும் திவாலாகும் நிலை ஏற்பட்டால் தங்கத்தின் விலை இதைவிட மேலும் உயரும் ஆபத்து உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சென்னை மட்டுமின்றி மும்பையில் உள்ள நகை வியாபாரிகளும் இதனை எச்சரிக்கையாகவே தெரிவித்திருக்கிறார்கள். தங்கத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கோரிக்கையாக இருந்தாலும் வரும் காலங்களில் அது சாத்தியமா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது.

    வருகிற காலகட்டங்களில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ஆயிரத்தை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,100 முதல் ரூ.6,200 வரையிலும் உயரலாம் என்றும் கூறப்படுகிறது.

    அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் 10 கிராம் தங்கத்தை வாங்க வேண்டும் என்றால் ரூ.62 ஆயிரம் வரையில் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதுபோன்ற நிலை ஏற்பட்டு விட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் தங்கம் இனி தங்குமா என்பதும் பெரிய கேள்வியாகவே மாறி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டில் 10 கிராம் தங்கம் 30 ஆயிரத்து 900 ஆக இருந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 10 கிராம் தங்கத்தின் விலை 55 ஆயிரத்தை கடந்துள்ளது.

    இதன் மூலம் நான்கு ஆண்டுகளில் 10 கிராமுக்கு 25 ஆயிரம் அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் தங்கத்தின் விலை அதிகரித்தது.

    2020-21-ம் ஆண்டுகளில் 10 கிராம் தங்கத்தின் விலை 55 ஆயிரத்து 980 என்ற அளவில் இருந்தது. இதன் பின்னர் 2022-ம் ஆண்டு உக்ரைன்- ரஷியா போரின் போதும் தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது.

    இந்த ஆண்டு வங்கிகள் திவாலான காரணத்தால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 2 மடங்கு அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. தற்போது திருமண ஏற்பாடுகளை செய்துள்ளவர்கள் தாங்கள் திட்டமிட்டபடி நகைகளை வாங்க முடியாமல் அதிகப்படியான செலவினத்துக்கும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

    மாப்பிள்ளை வீட்டில் பேசியபடி நகைகளை போட வேண்டுமே என்கிற தயக்கத்துடன் கூடுதல் சுமையாகி போன தங்கத்தின் விலை உயர்வை எண்ணி பெண்ணைப் பெற்ற பெற்றோர் தவிக்கும் நிலையே காணப்படுகிறது.

    அதே நேரத்தில் வசதி படைத்த பெரும் பணக்காரர்கள் தங்கத்தில் லட்சங்களையும், கோடிகளையும் முதலீடு செய்வதும் அதிகரித்து காணப்படுகிறது. இப்படி தங்கத்தின் விலையேற்றம் ஏழை எளியவர்களுக்கும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்களைப் பெற்ற பெற்றோர்களுக்கும் பெரிய அளவில் கூடுதலாக குடும்பச்சுமையை ஏற்படுத்தி இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மையாகும்.

    இப்படி தாறுமாறாக உயர்ந்துள்ள தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வயிற்றில் பால் வார்க்குமா? இல்லை இதைவிட மேலும் விலை அதிகமாகி குடும்ப பாரத்தை மேலும் அதிகமாக்குமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    Next Story
    ×