search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்- 10 பேர் படுகாயம்
    X

    நத்தம் அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்- 10 பேர் படுகாயம்

    • ஜல்லிக்கட்டில் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும், காளைகளை மடக்கி பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிசுகளை வழங்கினார்.
    • பீரோ, சைக்கிள், குக்கர், மின்விசிறி, நாற்காலிகள், வேட்டி, துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி சங்கரன்பாறையில் உள்ள முத்துமாரியம்மன், பாலமுருகன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, புதுக்கோட்டை, அலங்காநல்லூர், பாலமேடு, தவசிமடை ,கொசவபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500 காளைகள் போட்டியில் பங்கேற்க அழைத்து வரப்பட்டன.

    அதனை கால்நடை மருத்துவக் குழுவினர் காளைகளை மருத்துவ பரிசோதனை செய்து வாடிவாசலுக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் அரசு மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு 150 மாடுபிடி வீரர்கள் 5 சுற்றுகளாக களமிறங்கினர்.

    இதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு திண்டுக்கல் ஆர். டி. ஓ.பிரேம்குமார், தாசில்தார் சுகந்தி ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். வாடிவாசல் முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் வாடிவாசலில் இருந்து முதலில் ஊர்கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து மற்ற காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

    அதில் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, திமிறிய தோள்களை கொண்ட காளையர்கள் அடக்கினர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க மல்லுக்கட்டினர். அவர்களிடமிருந்து சில காளைகள் பிடிபடாமல் ஓடியது. ஒரு சில காளைகள் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் நின்று எகிறியது. பார்வையாளர்கள் கோஷமிட்டு மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினார். ஜல்லிக்கட்டு போட்டியில் 10பேர் காயமடைந்துள்ளனர்.

    அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஜல்லிக்கட்டில் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும், காளைகளை மடக்கி பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிசுகளை வழங்கினார். பீரோ, சைக்கிள், குக்கர், மின்விசிறி, நாற்காலிகள், வேட்டி, துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டையொட்டி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி ஆகியோர் மேற்பார்வையில் 350க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த வருடம் நடைபெறும் கடைசி ஜல்லிக்கட்டு இது என்பதால் ஏராளமான ஜல்லிக்கட்டு வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×