search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் மல்லிகை பூ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை
    X

    மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ விற்பனை நடைபெற்ற காட்சி.


    மதுரையில் மல்லிகை பூ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

    • தொடர் மழை காரணமாக வரத்து குறைந்ததால் மதுரையில் மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.
    • மல்லிகை ரூ.3ஆயிரத்துக்கு விற்பதால் பூக்களை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மதுரை அருகே திருப்பரங்குன்றம், வலையன்குளம், கொடைரோடு, திருமங்கலம், திண்டுக்கல் நிலக்கோட்டை, விருதுநகர் காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மலர் விவசாயம் அதிக அளவில் இருந்தாலும் பூக்களின் மகசூல் வெகுவாக குறைந்துள்ளது.

    இதன் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து பாதியாக குறைந்துள்ளது. தற்போது கோவில் திருவிழாக்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் என்பதால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு பூக்களின் தேவையும் அதிகமாக உள்ளது.

    இதன் காரணமாக பூக்கள் வரத்து போதிய அளவு இல்லாததால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுரை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தியையொட்டி மல்லிகை பூக்கள் கிலோ 2000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

    அதற்கு முந்தைய வாரத்தில் 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூவின் இந்த விலை உயர்வு மக்களிடையே பெரும் தவிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மல்லிகை பூக்கள் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ மல்லிகை 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த விலை உயர்வு காரணமாக பொது மக்கள் மல்லிகையே விரும்பினாலும் வாங்க தயக்கம் காட்டுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோல மற்ற மலர்களின் விலையும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

    50 ரூபாய்க்கு விற்பனையாகும் சம்மங்கி இன்றைக்கு ரூ.300-க்கு விற்பனையாகிறது. 250 ரூபாய், 300 ரூபாய்க்கு விற்பனையாகும் பிச்சி, முல்லை பூக்கள் 1500 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்கும் பட்டன் ரோஸ் 250 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கனகாம்பரம் பூக்கள் 1,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    இந்த விலையேற்றம் காரணமாக வியாபாரம் மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×