search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து தாய்-மகள் மரணம்: தற்கொலைக்கு தூண்டியவர் கந்து வட்டி சட்டத்தின் கீழ் கைது
    X
    அடைக்கலம்

    விஷம் குடித்து தாய்-மகள் மரணம்: தற்கொலைக்கு தூண்டியவர் கந்து வட்டி சட்டத்தின் கீழ் கைது

    • கடனுக்கு பால் விற்று கழித்து வந்த போதிலும் மேலும் மேலும் பணம் கேட்டு அடைக்கலம் தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் கடனுக்கு ஈடாக தோட்டத்து பத்திரத்தையும் பெற்றுக்கொண்டார்.
    • இதனால் மன உளைச்சலில் இருந்த ஆண்டிச்சியம்மாள் கடந்த மாதம் 26-ந் தேதி தனது மகளுக்கும் மகனுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு சாந்திபுரத்தைச் சேர்ந்த நல்லுமனைவி ஆண்டிச்சியம்மாள் (வயது 35). இவர்களுக்கு காவ்யா (17), கிருஷ்ணகுமார் (15) ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக ஆண்டிச்சியம்மாள் தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் பூசனூத்து கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். மாடுகள் வளர்த்தும் பால் பண்ணை நடத்தியும் வந்துள்ளார். இதற்காக அதே பகுதியைச் சேர்ந்த அழகுமலை மகன் அடைக்கலம் (29) என்பவரிடம் கடன் வாங்கி இருந்தார்.

    கடனுக்கு பால் விற்று கழித்து வந்த போதிலும் மேலும் மேலும் பணம் கேட்டு அடைக்கலம் தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் கடனுக்கு ஈடாக தோட்டத்து பத்திரத்தையும் பெற்றுக்கொண்டார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த ஆண்டிச்சியம்மாள் கடந்த மாதம் 26-ந் தேதி தனது மகளுக்கும் மகனுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றார். இதில் அதிர்ஷ்டவசமாக கிருஷ்ணகுமார் உயிர் பிழைத்தார்.

    தாய் மற்றும் மகள் இறந்த பிறகும் ஆண்டிச்சியம்மாளின் தந்தை மொக்கைச்சாமியிடம் சென்ற அடைக்கலம் உனது மகள் வாங்கிய கடனை நீதான் அடைக்க வேண்டும். இல்லையெனில் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மொக்கைச்சாமி மற்றும் பேரன் கிருஷ்ணகுமார் ஆகியோர் சேர்ந்து மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவின் பேரில் வருசநாடு போலீசார் அடைக்கலம் மீது கந்து வட்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதே போல கந்து வட்டி கொடுமை நடப்பதால் போலீசார் கிராமங்களில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிக வட்டி வசூலிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×