search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நயன்தாராவுக்கு உதவி செய்த மருத்துவமனை மீது நடவடிக்கை- மருத்துவ அதிகாரிகள் நாளை விசாரணை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நயன்தாராவுக்கு உதவி செய்த மருத்துவமனை மீது நடவடிக்கை- மருத்துவ அதிகாரிகள் நாளை விசாரணை

    • நடிகை நயன்தாராவுக்கு வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்று கொள்வதற்கு உதவி செய்த மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் மீது அனைவரது பார்வையும் திரும்பி உள்ளது.
    • நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் சென்னையில் உள்ள மிகப்பெரிய பிரபலமான தனியார் மருத்துவமனையில் பிறந்துள்ளன.

    சென்னை:

    நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது தடை செய்யப்பட்டிருப்பதாக நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த கருத்துக்கள் இந்த சர்ச்சைக்கு வித்திட்டது.

    வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சில சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும். குழந்தை பெற்றுக்கொள்ள தகுதியில்லை அல்லது விருப்பம் இல்லை என்பதை உரிய முறையில் தெரிவித்து இருக்க வேண்டும்.

    இந்த நடைமுறைகளுக்கு ஏற்ப இருந்தால் மட்டுமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி உண்டு. ஆனால் நடிகை நயன்தாரா இந்த விசயத்தில் அனைத்து விதிகளையும் மீறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    சமீபத்தில் இதுபற்றி சட்டப்பூர்வமான பிரச்சினைகள் எழுந்ததும் விசாரணை நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். இதையடுத்து இந்த சர்ச்சை பல்வேறு கோணங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

    சட்ட நிபுணர்கள் இதுவரை தெரிவித்த கருத்துக்கள் நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் உள்ளன. வாடகை தாய் சட்ட விசயத்தில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி ஏற்கனவே முன்பதிவு செய்திருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.

    இந்தநிலையில் நடிகை நயன்தாராவுக்கு வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்று கொள்வதற்கு உதவி செய்த மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் மீது அனைவரது பார்வையும் திரும்பி உள்ளது. நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் சென்னையில் உள்ள மிகப்பெரிய பிரபலமான தனியார் மருத்துவமனையில் பிறந்துள்ளன.

    அந்த மருத்துவமனையில் உள்ள சில டாக்டர்கள்தான் நடிகை நயன்தாராவுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் விசயத்தில் ஆலோசனைகள் வழங்கியதாக தெரியவந்துள்ளது. எனவே அவர்களிடம் விசாரணை நடத்துவது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் விவாதித்து வருகிறார்கள்.

    எனவே நயன்தாராவுக்கு உதவி செய்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக தமிழக மருத்துவ துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கு சென்னையில் உள்ள நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைதான் உதவி செய்து உள்ளது. அந்த மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் நடிகை நயன்தாராவிடம் முழு விவரங்களையும், சட்ட விதிகளையும் எடுத்து சொன்னார்களா? என்பது தெரியவில்லை.

    பொதுவாக ஒரு தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால் அவர்களுக்கு சட்ட விதிகளை விளக்கமாக எடுத்து சொல்ல வேண்டும். இது அந்தந்த மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்களின் கடமையாகும்.

    நடிகை நயன்தாரா விசயத்தில் டாக்டர்கள் அந்த சட்ட விதிகளை தெரிவித்தார்களா என்பது தெரியவில்லை. வாடகை தாய் விவகாரத்தில் 99 சதவீதம் பேருக்கு சட்ட விதிகள் நிச்சயம் தெரியாது. எனவே அதை தெரிவிக்க வேண்டிய கடமை மருத்துவமனைகளுக்கும், டாக்டர்களுக்கும்தான் உள்ளது.

    நயன்தாராவிடம் சட்ட விதிகளை டாக்டர்கள் தெரிவிக்கவில்லை என்று எங்களது விசாரணையில் தெரிய வந்தால் நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நயன்தாரா எப்போது மருத்துவமனைக்கு வந்தார்? வாடகை தாய் மூலம் குழந்தை பெற எப்போது முன்பதிவு செய்தார்? அவரிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதா? என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்யப்படும்.

    இதில் விதிமீறல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை பாயும். இது தொடர்பான விவரங்கள் தெரிவதற்கு சில நாட்கள் ஆகும். விசாரணை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படமாட்டாது. ஆனால் நாங்கள் நடவடிக்கை எடுப்பது உறுதி.

    இவ்வாறு அந்த மருத்துவ துறை அதிகாரி கூறினார்.

    வாடகை தாய் மூலம் விதிகளை மீறி குழந்தை பெற்றிருப்பது உறுதிபடுத்தப்பட்டால் அபராதம் ஏதேனும் விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு மருத்துவ துறை அதிகாரிகள் கூறுகையில், "விதி மீறல்கள் இருந்தால் உரிய அபராதம் விதிக்கப்படும்" என்றனர்.

    மருத்துவமனை நிர்வாகம் தவிர நடிகை நயன்தாராவுக்கும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நிபுணர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் சட்ட நிபுணர்கள் கூறுகையில், "நடிகை நயன்தாராவுக்கு அபராதம் விதிக்கவோ அல்லது அவர் மீது நடவடிக்கை எடுக்கவோ வாய்ப்புகள் மிக மிக குறைவு" என்று தெரிவித்தனர்.

    நயன்தாரா விவகாரத்தில் மருத்துவ துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை (வியாழக்கிழமை) விசாரணை தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விசாரணை எத்தனை நாட்களுக்கு நடக்கும் என்பது தெரியவில்லை. மருத்துவ துறையை சேர்ந்த 4 அதிகாரிகளை கொண்ட குழு நயன்தாராவிடம் விசாரணை நடத்த அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    Next Story
    ×