search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில் இன்று கடையடைப்பு போராட்டம்- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    X

    விழுப்புரத்தில் இன்று கடையடைப்பு போராட்டம்- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    • வணிக நிறுவனங்கள், உணவகங்கள், எலக்ட்ரானிக் அங்காடிகள், இரும்பு கடைகள், பெயிண்ட் அங்காடிகள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டிருந்தன.
    • நகரத்தின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் அங்கு பணி செய்யும் ஊழியர் இப்ராகிம் (வயது 45) கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை கடை ஊழியர்கள் மடக்கிப் பிடித்து விழுப்புரம் மேற்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் நெஞ்சை உலுக்கும் வகையில் பரவியது.

    விழுப்புரம் மேற்கு போலீசார் 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் விழுப்புரத்தைச் சேர்ந்த பழக்கடை உரிமையாளர் ஞானசேகர் மகன்கள் ராஜசேகர் (33), வல்லரசு (24) என்பது தெரியவந்தது.

    மேலும், இந்த 2 வாலிபர்களின் தந்தை ஞானசேகருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்தது. இது தொடர்பாக அந்தப் பெண்ணை கேட்டபோது, அதை தடுத்த இப்ராகிமை கத்தியால் குத்தி கொலை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.

    இந்த 2 வாலிபர்களும் கஞ்சா போதையில் கொலை செய்ததாக சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் வாலிபர்கள் கஞ்சா போதையில் இல்லை என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து விழுப்புரம் வணிகர் சங்கம் இன்று ஒரு நாள் கடையடைப்பு அழைப்பு விடுத்தது.

    அதன்படி இன்று காலை விழுப்புரம் புதுவை சாலை, விழுப்புரம் மகாத்மா காந்தி சாலை, விழுப்புரம் புதிய பஸ் நிலைய சாலை என அனைத்து இடங்களிலும் பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்டு இருந்தன.

    குறிப்பாக வணிக நிறுவனங்கள், உணவகங்கள், எலக்ட்ரானிக் அங்காடிகள், இரும்பு கடைகள், பெயிண்ட் அங்காடிகள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் நகரத்தின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. விழுப்புரம் நகரில் ஒரு சில பெட்டிக்கடைகள், டீக்கடைகள் மற்றும் சலூன் கடைகள் மட்டுமே திறந்திருந்தன.

    மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், வணிகர் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் உள்ள வணிகர்கள் மற்றும் வணிக நிறுவன ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் மனு அளித்தனர்.

    Next Story
    ×