search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    139 அடியை எட்டிய முல்லைபெரியாறு அணை நீர்மட்டம்- தமிழக அதிகாரிகள் ஆய்வு
    X

    முல்லைபெரியாறு அணையில் தமிழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    139 அடியை எட்டிய முல்லைபெரியாறு அணை நீர்மட்டம்- தமிழக அதிகாரிகள் ஆய்வு

    • தொடர் மழையால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 139.10 அடியாக உள்ளது.
    • அணைக்கு 11,174 கனஅடிநீர் வருகிறது. இதில் தமிழக பகுதிக்கு 2194 கனஅடிநீரும், கேரள பகுதிக்கு 8980 கனஅடிநீரும் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 139 அடியை கடந்துள்ளது. பருவமழை தீவிரமடைந்த நிலையில் கேரளாவில் பெய்து வரும் தொடர்மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    142 அடிவரை தண்ணீர் தேக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் ரூல்கர்வ் விதிமுறைப்படி தற்போது 142 அடி வரை தண்ணீர் தேக்க முடியாது. இதனால் அணைக்கு வரும் நீர் கேரள பகுதிக்கு வீணாக திறந்துவிடப்படுகிறது. இது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர் மழையால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 139.10 அடியாக உள்ளது. அணைக்கு 11,174 கனஅடிநீர் வருகிறது. இதில் தமிழக பகுதிக்கு 2194 கனஅடிநீரும், கேரள பகுதிக்கு 8980 கனஅடிநீரும் திறக்கப்படுகிறது.

    அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மதுரை பெரியாறு-வைகை வடிநிலகோட்ட பருவநிலை ஆய்வு கண்காணிப்பு பொறியாளர் கிறிஸ்துநேசகுமார் தலைமையில் தமிழக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக பேபி அணை, கேலரி உபநீர் வழிந்தோடி மதகுகள், டிஜிட்டல் நீர்நிலைப்பதிவு, மதகுகள் இயக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இதில் பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம்இர்வின், பெரியாறு-வைகை கோட்ட செயற்பொறியாளர் அன்புச்செல்வன், உதவி செயற்பொறியாளர் குமார், மயில்வாகனன், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், முரளிதரன், நவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 69.32 அடியாக உள்ளது. 2701 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 3969 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 46 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 84 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் குடிநீருக்காகவும், மற்றவை உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    உத்தமபாளையம் 2.3, கூடலூர் 2.5, தேக்கடி 5.4, பெரியாறு 28.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×