search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு
    X

    முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு

    • வைகை அணையிலிருந்து திறக்கப்படும் பாசனத்திற்கான நீர் 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1180 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து 122.95 அடியாக உள்ளது.

    அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 456 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3212 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. வருசநாடு, அரசரடி, கண்டமனூர், கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர்மழையால் மூல வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் வைகை அணைக்கு நீர்வரத்து 1191 கனஅடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 59.68 அடியாக உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகர் பகுதியில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் கடும் அவதியடைந்தனர். இதனால் பாசனத்திற்கு தண்ணீர் தேவை குறைந்தது. இதன் காரணமாக வைகை அணையிலிருந்து திறக்கப்படும் பாசனத்திற்கான நீர் 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    குடிநீருக்காக 69 கனஅடியுடன் சேர்த்து 569 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3542 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 55 அடியில் நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 224 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 64.34 கனஅடி நீர் வருகிறது. குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 30 கனஅடியும், மற்றவை உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 7.2, தேக்கடி 20.4, கூடலூர் 8.2, சண்முகாநதி அணை 4.6, உத்தமபாளையம் 4.6, வீரபாண்டி 4.6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×