search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி மாணவன் மீது தாக்குதல்: தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரங்களை கிராமங்கள் தோறும் அரசு நடத்த வேண்டும்-  ஆம்ஸ்ட்ராங் வலியுறுத்தல்
    X

    நாங்குநேரி மாணவன் மீது தாக்குதல்: தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரங்களை கிராமங்கள் தோறும் அரசு நடத்த வேண்டும்- ஆம்ஸ்ட்ராங் வலியுறுத்தல்

    • அரசு இனி வருங்காலங்களிலாவது முனைப்புடன் செயல்படுத்தவேண்டும்.
    • தீண்டாமை என்னும் கொடியநோயை முதலில் இந்த நாட்டை விட்டு ஒழிப்போம் என அனைவரும் உறுதி ஏற்கவேண்டும்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி பொது மக்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:

    ஆங்கிலேயர்களிடம் நம் முன்னோர்கள் போராடி இந்த மண்ணுக்கு பெருமைமிகு சுதந்திரம் கிடைத்ததென்றாலும், அதை நிம்மதியாக அனுபவிக்க முடியாமல் சமூக ஏற்றத்தாழ்வுகளுடனும் சாதிய முரண்பாடுகளுடனும் தொடர்ந்து நாள்தோறும் நாம் போராடி கொண்டே இருக்கிறோம். இந்திய திருநாடு பல்வேறு தியாகசீலர்களின் ஈடுஇணையற்ற தியாகத்தால் சுதந்திரத்தை பெற்றது. இப்பெருமைமிகு சுதந்திர நாட்டில் நாம் சகோதரத்துவதோடு வாழ வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். ஆனால், சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும் நாட்டில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தும்கூட இதனை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கையோ முயற்சியோ யாரும் மேற்கொண்டபாடில்லை. தீண்டாமையின் கோரப்பசிக்கு தொடர்ந்து இந்த நாடே பலியாகி கொண்டிருக்கிறது.

    அந்த வரிசையில் தற்போது, நாங்குநேரியில் 12 - ம் வகுப்பு படிக்கின்ற பட்டியலின மாணவன் சின்னத்துரையை அவருடன் படித்த சக மாணவர்களே சாதிய வன்மத்தோடு வீடு புகுந்து வெட்டிய சம்பவம் மனதை பத பதைப்புக்குள்ளாக்கியுள்ளது. பள்ளி மாணவர்கள் மனதிலே எப்படி இந்த அளவு சாதிய வன்மம் ஊறிப்போனது என்று எண்ணும்போது இந்த நாட்டின் எதிர்காலம் குறித்த கவலை மேலும் அச்சமளிக்கிறது.

    மாணவர்கள் சக மாணவன் ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்யும் அளவிற்கு போகும் அளவுக்கு அவர்களிடையே சாதியவன்மம் இருந்ததை ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் கவனிக்க தவறியதும் அவற்றை களைவதற்கு நடவடிக்கை எடுக்காததும் கண்டனத்திற்குரியது. சமூக கல்வி இல்லாத எந்த கல்வியும் எதிர்காலத்தலைமுறையை மோசமானதாகத்தான் உருவாக்கும் என்னும் பாடத்தை எல்லா கல்வி நிறுவனங்களும் இந்த சம்பவத்திலிருந்து கற்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டமானது தீண்டாமை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை கிராமங்கள்தோறும் அரசு நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. ஆனால், அத்தகைய பிரச்சாரங்கள் இங்கு நடைபெறுவதேயில்லை. அதை அரசு இனி வருங்காலங்களிலாவது முனைப்புடன் செயல்படுத்தவேண்டும்.

    மேலும் இந்த நிலைமாற, இது போன்ற சம்பவங்கள் தொடரா வண்ணம் தடுக்க தீண்டாமை என்னும் கொடியநோயை முதலில் இந்த நாட்டை விட்டு ஒழிப்போம் என அனைவரும் உறுதி ஏற்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×