search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த சிறுவனின் கண்களை தானமாக வழங்க பெற்றோர் முடிவு
    X

    ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த சிறுவனின் கண்களை தானமாக வழங்க பெற்றோர் முடிவு

    • மார்பிலும், தோளிலும் தூக்கி வளர்த்த பிள்ளையை பறிகொடுத்து விட்டோமே என்ற பெற்றோரின் கதறல் கண்போர் கண்களை குளமாக்கியது.
    • குடும்பத்துடன் ஜல்லிக்கட்டு பார்க்க செல்லும் பெற்றோர் குழந்தைகளை தங்களது கவனத்திலிருந்து தவறவிட்டால் என்ன மாதிரியான துயரங்கள் நேரும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அதியமான் தலைமை ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் தடங்கம் ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி 2-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடங்கம் தனியார் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

    வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறி பாய்ந்தபடி வந்தன. காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். பல காளைகள் தங்களை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களுக்கு சவால் விட்டு பிடிபடாமல் அசுர வேகத்தில் ஓடின.

    காளைகள் முட்டியதில் 68 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் மூலம் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் 10 பேர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்நிலையில் பாலக்கோடு திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூக்கடை வியாபாரி சீனிவாசன் என்பவர் தனது குடும்பத்துடன் ஜல்லிக்கட்டை பார்க்க வந்துள்ளார்.

    அவரது மகன் கோகுல் (வயது 14) பார்வையாளர் கேலரியில் நின்று காளைகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் காளைகளை அருகில் சென்று பார்க்கும் ஆர்வத்தில் பார்வையாளர் கேலரியிலிருந்து இறங்கிய கோகுல் காளைகளை வாகனத்தில் ஏற்றும் இடத்திற்கு சென்று வேடிக்கை பார்த்தார்.

    அப்போது திடீரென ஒரு மாடு மிரண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கோகுலை முட்டியது. இதில் வயிற்றில் கொம்பு குத்தி படுகாயம் அடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவனது உடலை பார்த்து தந்தை சீனிவாசன், தாய் கவுரம்மாள் ஆகியோர் கதறி அழுதனர். மார்பிலும், தோளிலும் தூக்கி வளர்த்த பிள்ளையை பறிகொடுத்து விட்டோமே என்ற அவர்களது கதறல் கண்போர் கண்களை குளமாக்கியது.

    இந்நிலையில் சிறுவனின் தந்தை சீனிவாசன் கூறுகையில் ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை. 108 ஆம்புலன்ஸ் கூட அங்கு இல்லை.

    மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 1 மணி நேரம் தாமதமானதால் எனது மகனை இழந்துவிட்டேன். முறையான முன்னேற்பாடுகள் செய்யப்படாமல் இந்த போட்டி நடத்தப்பட்டதால் எனது மகன் உயிர் பறிபோனது என கூறினார்.

    இதையடுத்து கனத்த இதயத்துடன் சிறுவன் கோகுலின் கண்களை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர்.

    குடும்பத்துடன் ஜல்லிக்கட்டு பார்க்க செல்லும் பெற்றோர் குழந்தைகளை தங்களது கவனத்திலிருந்து தவறவிட்டால் என்ன மாதிரியான துயரங்கள் நேரும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

    Next Story
    ×