search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் மறியல் போராட்டம்
    X

    திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் மறியல் போராட்டம்

    • எஸ்ஏபி.யில் இருந்தும், குமார் நகரில் இருந்தும் 60 அடி ரோட்டுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் ஒரே வழியாக அனுமதிக்கப்பட்டன.
    • குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு குழந்தைகளை பள்ளியில் கொண்டு விடுவதற்கு முடியவில்லை.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யும் வகையில் மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சில மாதங்களுக்கு முன்பு புஷ்பா சந்திப்பு பகுதியில் 'பிரீ சிக்னல்' முறையை அமல்படுத்தினர். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    அதேபோல் தற்போது குமார் நகரில் சோதனை முறையில் போக்குவரத்து மாற்றத்தை போலீசார் மேற்கொள்ள நேற்று அமல்படுத்தினர். அதில் வளையங்காட்டில் இருந்து குமார் நகருக்கு வரும் வாகனங்களை தீயணைப்புத்துறை அலுவலகம் சிக்னல் அருகே திரும்பி செல்லும் (யூ டர்ன்) வகையிலும் அவிநாசி ரோட்டில் இருந்து வளையங்காடு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லவும் அனுமதிக்கப்பட்டது.

    அதேபோல் எஸ்ஏபி.யில் இருந்தும், குமார் நகரில் இருந்தும் 60 அடி ரோட்டுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் ஒரே வழியாக அனுமதிக்கப்பட்டன. அங்கேரிபாளையம் ரோட்டை ஒரு வழிபாதையாகவும் மாற்றியுள்ளனர். இந்தநிலையில் அங்கேரிப்பாளையம் சாலையை ஒரு வழிபாதையாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள்- பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கேரிபாளையம் சாலையில் 3 முக்கிய பள்ளிகள் செயல்படுவதாகவும் அங்கு படிக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகளை பெற்றோர்கள் தான் தங்களது வாகனங்களில் கொண்டு விட்டுச்செல்கின்றனர்.

    தற்போது ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டதால் மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும், குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு குழந்தைகளை பள்ளியில் கொண்டு விடுவதற்கு முடியவில்லை. எனவே அங்கேரிப்பாளையம் சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரியிடம் பேசி மாற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் இன்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×