search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்புலர் பிரண்ட் சென்னை அலுவலகத்துக்கு சீல்- தமிழக அரசு அதிரடி நடவடிக்கை
    X

    பாப்புலர் பிரண்ட் சென்னை அலுவலகத்துக்கு சீல்- தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கும் அதன் 8 துணை அமைப்புகளுக்கும் விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து தேசிய புலனாய்வு முகமையும், அமலாக்கத்துறையும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் செயல்பாடுகளை கண்காணித்து வந்தன. அப்போது அந்த அமைப்புக்கு வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா அடிப்படையில் ரூ.120 கோடி திரட்டப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதையும் புலனாய்வு அமைப்புகள் உறுதிபடுத்தின. இதையடுத்து கடந்த 22-ந்தேதி 15 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து "ஆபரேசன் ஆக்டோபஸ்" என்ற பெயரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    93 இடங்களில் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகங்களிலும், அதன் நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாடு முழுவதும் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் கடந்த மாதம் 27-ந்தேதி 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கைதானார்கள்.

    2 தடவை நடந்த சோதனையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் பணபரிமாற்றங்கள் தொடர்பாக ஆவணங்கள் சிக்கியது. அந்த ஆவணங்களை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆய்வு செய்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இது தொடர்பாக ஆய்வு செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி இரவு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்ட விரோதமான அமைப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாப்பு லர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ரீகேப் இந்தியா பவுண்டேஷன், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா, ஆல் இந்திய இமாம் கவுன்சில், மனித உரிமை கழக தேசிய கூட்டமைப்பு, தேசிய பெண்கள் முன்னணி, ஜூனியர் பிரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன், ரீகேப் பவுண்டேஷன் கேரளா ஆகிய 8 துணை அமைப்புகள் இருக்கின்றன. அந்த 8 அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கும் அதன் 8 துணை அமைப்புகளுக்கும் விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளன.

    அந்த அமைப்பின் டுவிட்டர் மற்றும் சமூக வலைதளங்களின் தொடர்புகள் அனைத்தும் தடுக்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்புகளின் அலுவலகங்களை மூட மத்திய அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

    தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சென்னை புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் தலைமை அலுவலகம் உள்ளது. அங்கிருந்து தான் தமிழகத்தின் இதர பகுதிகளில் உள்ள கிளை அலுவலகங்களுக்கு ஆவணங்கள், பொருட்கள் அனுப்பப்பட்டு வந்தன.

    தமிழக பாப்புலர் பிரண்ட் ஆப் நிர்வாகிகள் இந்த அலுவலகத்தில் அமர்ந்து தான் ஆலோசனை செய்வார்கள். மத்திய அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து இந்த அலுவலகத்தை மூடுவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது.

    இதற்கான நடவடிக்கைகள் இன்று காலை எடுக்கப்பட்டன. சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். காலை 7 மணியளவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைமை அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    அதோடு அந்த அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த கொடிக்கம்பத்தையும் அகற்றினார்கள். பெயர் பலகையும் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தமிழக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டதால் அதன் உறுப்பினர்கள் கடும் அதிருப்தியும், வேதனையும் அடைந்து உள்ளனர். இதையடுத்து அந்த தலைமை அலுவலகம் பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    தமிழகம் போலவே கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டு முடக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×