search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி வாரசந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை
    X

    போச்சம்பள்ளி வாரசந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    • வாரசந்தையில் இன்று மட்டும் ஆட்டு சந்தையில் மட்டும் 3 மணிநேரத்தில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக தெரிகிறது.
    • ஆடுகள் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்பதால் ஆட்டு இறைச்சியின் விலை அதிகரித்து விற்பனை செய்தனர்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரசந்தை தமிழகத்தின் 2-வது பெரிய வாரசந்தையாகும். இந்த வாரசந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரையில் விற்பனை செய்யப்படும் முக்கிய சந்தையாகும்.

    இந்த சந்தையானது ஞாயிற்றுகிழமை தோறும் கூடுவதால் இந்த சுற்றுவட்டார கிராம மக்கள் தங்களுடைய விளை நிலங்களில் வளர்க்கப்படுகின்ற தானியங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவைகளை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

    இந்நிலையில் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் இந்த வார சந்தைக்கு தனி மவுசு உண்டு. இதில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பெரும்பாலான விவசாயிகள், வியாபாரிகள் வர்த்தக ரீதியாக ஆடு, மாடு, கோழிகளை விற்பனைக்காக கொண்டு வந்து இங்கு விற்பனை செய்வது வழக்கம்.

    தற்போது இந்த வாரசந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக இன்று கொண்டு வந்துள்ளனர்.

    செம்மறியாடு, வெள்ளாடு, மறிக்கை என சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக வியபாரிகள் கொண்டு வந்துள்ள நிலையில் அதிகாலை தொடங்கிய வார சந்தை தற்போது விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

    தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, பொள்ளாச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர்.

    ஒரு கிடா ஆடு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் பெண் ஆடுகள் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரையிலும் விற்பனையானதால் ஆடு வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வாரசந்தையில் இன்று மட்டும் ஆட்டு சந்தையில் மட்டும் 3 மணிநேரத்தில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக தெரிகிறது.

    ஆடுகள் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்பதால் ஆட்டு இறைச்சியின் விலை அதிகரித்து விற்பனை செய்தனர்.

    வழக்கமாக ஒரு கிலோ 750 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில் தற்போது பண்டிகை காலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

    சராசரியாக தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

    இந்த சந்தைக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அசம்பாவிதம் ஏற்படாத வகையில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் சந்தை வளாகம் சுற்றிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×