search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மணப்பாறை ஆட்டு சந்தை களை கட்டியது- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.80 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
    X

    மணப்பாறை ஆட்டு சந்தை களை கட்டியது- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.80 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

    • தீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மணப்பாறை கால்நடை சந்தை நேற்று காலை கூடியது.
    • பகல் முழுவதும் நடைபெற்ற மாட்டுச்சந்தை இரவிலும் விடிய, விடிய நீடித்தது. இதில் ரூ.1 கோடிக்கும் மேல் மாடுகள் விற்பனையானது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பறையில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தை உள்ளது. இந்த சந்தையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலையில் மாட்டு சந்தை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறும்.

    இதில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், விவசாயிகள் தங்களது ஆடுகள் மற்றும் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். இதேபோல் கால்நடை சந்தையின் ஒரு பகுதியில் புதன்கிழமை அதிகாலை தொடங்கி 10 மணி வரை ஆட்டு சந்தை நடைபெறும். இந்த சந்தையிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு வரும்.

    தீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மணப்பாறை கால்நடை சந்தை நேற்று காலை கூடியது. பகல் முழுவதும் நடைபெற்ற மாட்டுச்சந்தை இரவிலும் விடிய, விடிய நீடித்தது. இதில் ரூ.1 கோடிக்கும் மேல் மாடுகள் விற்பனையானது.

    இதையடுத்து இன்று அதிகாலை ஆட்டுச்சந்தை கூடியது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளது. ஆட்டின் விலை அதிகமாக இருந்ததோடு விற்பனை மிகவும் மந்தமான நிலையிலேயே காணப்பட்டது. வழக்கமாக இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் விற்று தீர்ந்துவிடும் ஆடுகள் எல்லாம் இன்று நீண்ட நேரமாக விற்பனையாகாமல் இருந்தது.

    வழக்கமாக தீபாவளிக்கு முன்பு நடைபெறும் சந்தையில் சுமார் ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெறும். ஆனால் இன்று நடைபெற்ற சந்தையில் ரூ.80 லட்சத்திற்கு மட்டுமே ஆடுகள் விற்பனை நடைபெற்றது. பலரும் ஆடுகளை மீண்டும் கொண்டு சென்றனர்.

    ஆனாலும் தொடர்ந்து வியாபாரிகள் சந்தைக்கு வந்த வண்ணம் இருப்பதால் ஆட்டுச்சந்தை களை கட்டியுள்ளது. கடந்த வாரம் மணப்பாறை ஆட்டு சந்தையில் ரூ.ஒரு கோடிக்கு மேல் விற்பனை நடைபெற்ற நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வார சந்தை ஏமாற்றத்தையே அளித்ததாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×