search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவேன்: ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் பேட்டி
    X

    சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவேன்: ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் பேட்டி

    • பொதுமக்கள் தங்களது குறைகளுக்காக போலீஸ் நிலையங்களுக்கு வரும்போது அவர்களை கண்ணியமான முறையில் காவலர்கள் நடத்த வேண்டும்.
    • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த சங்கர் ஆவடி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். நேற்று காலையில் ஆவடியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்ட சங்கருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    புதிய கமிஷனர் சங்கர், ஆவடி பகுதியில் குற்றங்களை குறைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், சட்டம்-ஒழுங்கை காக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    ஆவடி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை சம்பவங்கள், செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். பொதுமக்கள் தங்களது குறைகளுக்காக போலீஸ் நிலையங்களுக்கு வரும்போது அவர்களை கண்ணியமான முறையில் காவலர்கள் நடத்த வேண்டும் என்றும், அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படி பொதுமக்களின் குறைகளை போக்கும் வகையில் காவலர்களின் செயல்பாடு இருக்கும்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் அனைத்தையும் விரைந்து முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை வாங்கி தருவோம். ஆவடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் உறுதியாக எடுக்கப்படும். இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி குற்றவாளிகளின் நடமாட்டத்தை குறைக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

    இவ்வாறு கமிஷனர் சங்கர் தெரிவித்தார்.

    Next Story
    ×