search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்தில் பாலாஜி விவகாரம்: கவர்னர் ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் அரசாணை வெளியிட முடிவு?
    X

    செந்தில் பாலாஜி விவகாரம்: கவர்னர் ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் அரசாணை வெளியிட முடிவு?

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் அனுப்பி வைத்த கடிதம் தொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்தை கேட்டறிந்தார்.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த இலாகாக்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமியிடம் பகிர்ந்தளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து கவர்னருக்கு நேற்று கடிதம் அனுப்பினார். அதில் மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மது விலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் அளிப்பதாக பரிந்துரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த பரிந்துரையை கவர்னர் ஏற்று அதற்கான உத்தரவை பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    அனால் அந்த பரிந்துரையில் செந்தில் பாலாஜி என்ன காரணத்துக்காக கைது செய்யப்பட்டார்? என்ற விவரம் இல்லாததால் அதை குறிப்பிடும்படி அரசுக்கு அதை திருப்பி அனுப்பிவிட்டார். இதன் காரணமாக அமைச்சர்களின் இலாகா மாற்றமும் ஏற்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கவர்னர் கேட்ட விளக்கத்துக்கு என்ன மாதிரியான பதில் தெரிவிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உரிய விளக்கங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

    அதில் நீங்கள் (கவர்னர்) கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் துரதிருஷ்டவசமானவை. கடிதத்தை திருப்பி அனுப்பியது அரசியல் சட்டத்துக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது. அமைச்சர்களின் இலாகாக்களை பிரித்துக் கொடுக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் அரசமைப்பு சட்டத்தை பின்பற்றியே தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த கடிதம் நேற்றிரவே கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.

    இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் அனுப்பி வைத்த கடிதம் தொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்தை இன்று கேட்டறிந்தார்.

    செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர அனுமதித்து கையெழுத்து போடலாமா? என்பது பற்றி முடிவு செய்து இன்று அறிவிக்க உள்ளார்.

    இந்த நிலையில் கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுக்கும் பட்சத்தில் நிர்வாக வசதிக்காக அமைச்சர்களின் இலாகா மாற்றத்துக்கு தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

    அவ்வாறு அரசாணை வெளியிடும் பட்சத்தில் அதை வைத்து அதிகாரிகள் துறைரீதியாக முடிவெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×