search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரைப்பாலம் சீரமைக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு
    X

    தரைப்பாலம் சீரமைக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு

    • ஓடையின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது.
    • காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உலகுடையார்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் அருகில் கீழ்பவானி பாசன உபரி நீர் செல்லும் ஓடை உள்ளது. இந்த ஓடையின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது.

    நத்தக்காடையூர் - திருப்பூர் சாலையில் சிவசக்திபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து உலகுடையார்பாளையம் செல்லும் கிராம பொதுமக்கள் இந்த தரைப்பாலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டும். இந்த தரைப்பாலம் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்தநிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள சூழலில் உலகுடையார்பாளையம் கிராம பொதுமக்கள் தரைப்பாலத்தை சீரமைக்காத காரணத்தால் தேர்தலை புறக்கணிப்பதாக காங்கயம் - நத்தக்காடையூர் பிரதான சாலையில் வெள்ளியங்காடு பஸ் நிறுத்தத்தில் அறிவிப்பு பதாகை வைத்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி சதீஸ்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் போலீசார் உதவியுடன் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பதாகையை அப்புறப்படுத்தினர். மேலும் இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×