search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளதால் திருப்பூர் பா.ஜ.க.,வினர் உற்சாகம்
    X

    பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளதால் திருப்பூர் பா.ஜ.க.,வினர் உற்சாகம்

    • மற்றொரு நாள் கண்டிப்பாக நடைபயணம் திட்டமிட்டப்படி நடைபெறும் என அண்ணாமலை உறுதியளித்தார்.
    • பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதுடன் அதில் பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளதால் திருப்பூர் பாஜக நிர்வாகிகள் மகிழ்ச்சியில் ஆழந்துள்ளனர்.

    திருப்பூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பாதயாத்திரை திருப்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி நடைபெற இருந்தது. திருப்பூர் தெற்கு, வடக்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து திருப்பூர் மாநகர் மாவட்ட பா.ஜ.க.வினர் அண்ணாமலையை வரவேற்று பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை வழிநெடுக கட்சி கொடி, தோரணங்கள் கட்டினர். பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட டிஜிட்டல் பேனர்களும் வைத்தனர். திருப்பூர் அருகே உள்ள பல்லடம் சட்டமன்ற தொகுதியில் அக்டோபர் மாதம் 19-ந்தேதி நடை பயணம் மேற்கொண்ட அண்ணாமலை 20-ந்தேதி திருப்பூரில் நடைபயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார்.

    இந்தநிலையில் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு காரணமாக 20-ந்தேதி நடைபெற இருந்த நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது. அண்ணாமலையை வரவேற்றும் பாத யாத்திரையை வெற்றி பெற செய்யவும் தடபுடலாக ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது திருப்பூர் பா.ஜ.க.வினரை கவலையில் ஆழ்த்தியது.

    இதையடுத்து மற்றொரு நாள் கண்டிப்பாக நடைபயணம் திட்டமிட்டப்படி நடைபெறும் என அண்ணாமலை உறுதியளித்தார். ஆனால் சென்னை, தென் மாவட்ட மழை காரணமாக அண்ணாமலை நடைபயணம் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டது. இதனால் திருப்பூரில் நடைபயணம் எப்போது நடைபெறும் என நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.


    இதனிடையே கடந்த 19-ந்தேதி கேலோ இந்தியா போட்டியை தொடங்கி வைக்க வருவதாக இருந்த பிரதமர் மோடி, அன்றைய தினம் திருப்பூரில் புதிதாக கட்டப்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை திறப்பு விழா மற்றும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த திருப்பூர் பா.ஜ.க.வினர் அதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தி பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தொடங்க இருந்தனர்.

    இந்தநிலையில் திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படாததால், திறப்பு விழா அன்று பொதுக்கூட்டம் நடத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி திருப்பூரில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இதனால் நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர். ஆனால் அந்த நடை பயணமும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திருப்பூரில் அண்ணாமலை நடைபயணம் தொடர்ந்து 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால் திருப்பூர் பா.ஜ.க.வினர் ஏமாற்றமடைந்தனர். இந்தநிலையில் அவர்கள் உற்சாகமடையும் வகையில் திருப்பூரில் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதுடன் அதில் பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளதால் திருப்பூர் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆழந்துள்ளனர். மேலும் தமிழகமே உற்றுபார்க்கும் வகையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் மாநகர பா.ஜ.க. நிர்வாகிகள் கூறுகையில், திருப்பூரில் நடைபெற இருந்த அண்ணாமலை நடைபயணம் 2 முறை ஒத்திவைக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தோம். தற்போது பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டமே நடைபெற உள்ளதால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளோம். தி.மு.க., அ.தி.மு.க. மாநாடுகளை வெல்லும் வகையில் பிரம்மாண்ட மாநாடு போல் பொதுக்கூட்டத்தை நடத்தி காட்டுவோம். அதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். தற்போது பாராளுமன்ற தேர்தலையொட்டி பல்லடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இது மேலும் மேலும் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

    Next Story
    ×