search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவல்லிக்கேணியில் மாடு முட்டி தூக்கி வீசியதில் காயம் அடைந்த முதியவர் உயிரிழப்பு
    X

    திருவல்லிக்கேணியில் மாடு முட்டி தூக்கி வீசியதில் காயம் அடைந்த முதியவர் உயிரிழப்பு

    • திருவல்லிக்கேணி பகுதியில் மட்டும் மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவங்கள் 4 இடங்களில் நடை பெற்றுள்ளன.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் சாலையில் சுற்றி திரியும் மாடுகள், நடந்து செல்பவர்களை முட்டி தூக்கி வீசும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

    இது தொடர்பாக போலீசாரும் மாநகராட்சி அதிகாரிகளுடன் தீவிர விசாரணை நடத்தி ரோட்டில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து வருகிறார்கள். இருப்பினும் ரோட்டில் சுற்றும் மாடுகளை கட்டுப்படுத்துவது சவாலாகவே இருந்து வருகிறது.

    இதன் காரணமாக திருவல்லிக்கேணி பகுதியில் மட்டும் மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவங்கள் 4 இடங்களில் நடை பெற்றுள்ளன. அந்த வகையில் கடந்த 18-ந் தேதி திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில் மாட வீதியில் சுந்தரம் என்ற 80 வயது முதியவரை மாடு முட்டி தூக்கி வீசியது. இதில் வாய் பேச முடியாத அவர் பலத்த காயம் அடைந்தார்.

    ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் முதியவர் சுந்தரம் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 10 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்த முதியவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை மாநகரில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் தொடர்ச்சியாக ரோட்டில் செல்பவர்களை முட்டி தூக்கி வீசிய சம்பவத்தில் சிறுமி உள்பட பலர் காயத்து டன் உயிர் தப்பி இருக்கும் நிலையில் முதியவர் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத் தொடர்ந்து ரோட்டில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×