search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மு.க.ஸ்டாலினால் கவுன்சிலர்களை கூட கட்டுப்படுத்த முடியவில்லை- டி.டி.வி.தினகரன்
    X

    மு.க.ஸ்டாலினால் கவுன்சிலர்களை கூட கட்டுப்படுத்த முடியவில்லை- டி.டி.வி.தினகரன்

    • சென்னை மாநகராட்சியில் பெண் கவுன்சிலர்கள் வேலை பார்ப்பதில்லை.
    • தி.மு.க.வை வீழ்த்த கூட்டணிக்கு தயாராக உள்ளோம்.

    ராயபுரம்:

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் தேர்தல் நேரத்தில் வெளியிட்ட அறிவிப்புகளை தி.மு.க. நிறைவேற்றாததை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் அளித்து சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. தற்போது மதம், ஜாதியை வைத்து அரசியல் செய்கிறது.

    இது வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் மக்கள் வாக்களிப்பதில்லை.

    சமூக நீதி பேசி வரும் தி.மு.க.வினர் மற்றும் அமைச்சர்கள் மக்களை பார்த்து ஓ.சி. பஸ் என்றும் பட்டியலினத்தவரை பார்த்து ஜாதி குறித்தும் பேசுகிறார்கள். மக்கள்தான் எஜமானார்கள். அவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள்.

    தி.மு.க.வினர் திருந்தி இருப்பார்கள் என்று மக்கள் மீண்டு வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் திருந்தவில்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டசபை கூட்டத் தொடரில் நிதி நிலை அறிக்கையின் போது தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்து விட்டு அமைச்சர்கள் மீது கவர்னரிடம் முறைகேடு புகார் அளித்தனர்.

    நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த உடன் தற்போது நிதி நிலையை காரணம் காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கிறார்கள்.

    அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் சுயம்பாக தோன்றிய தலைவர்கள். ஆனால் தி.மு.க.வில் தலைவர்கள் திணிக்கப்படுகிறார்கள்.

    தற்போது உள்ள அமைச்சர்களின் நடவடிக்கையால் தூக்கம் இல்லாமல் இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்கள் தூங்க மாட்டார்கள்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. நான் ஏற்கனவே கூறியது போல் 2024-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன், செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, அமைப்பு செயாளர் தட்சிணாமூர்த்தி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் குட்வில் குமார், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. அம்பத்தூர் எஸ்.வேதாசலம், பொறியாளர் அணி செயலாளர்கள் மா.கரிகாலன், அமைப்புச் செயலாளர் நேதாஜி கணேசன், மாவட்ட செயலாளர்கள் சி.பி.ராமஜெயம், ஏ.ஆர்.பழனி, பி.ஆனந்தன், எல்.ராஜேந்தி ரன், ஹஜ் கே.முகமது சித்திக், வி.சுகுமார் பாபு, கே.விதுபாலன், எஸ்.வேதாச்சலம், இ.லக்கிமுருகன், பரணி குருக்கள், அய்யப்பா வெங்கடேசன், முகவை ஜெயராமன், சூளைமேடு கங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சியில் பெண் கவுன்சிலர்கள் வேலை பார்ப்பதில்லை. அவர்களது கணவர்கள் பணி செய்கிறார்கள். அவர்கள் பொதுமக்களை மிரட்டுகிறார்கள். முதல்-அமைச்சர் மீது யாருக்கும் பயம் இல்லை.

    முதல்-அமைச்சரால் அமைச்சர்களை மட்டுமல்ல கவுன்சிலர்களை கூட கட்டுப்படுத்த முடியாது. ஜெயலலிதாவால் அமைச்சர்கள் தூக்கம் இல்லாமல் இருந்தனர். தற்போது முதல்-அமைச்சருக்கோ அமைச்சர்களால் தூக்கம் இல்லை.

    எங்களை வெளியேற்றியதால் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் தனி இயக்கம் கண்டுள்ளோம். இனிமேல் நாங்கள் ஒன்றாக இணைவது எங்களுக்கும் நல்லது அல்ல. அவர்களுக்கும் நல்லது அல்ல என்று நான் நினைக்கிறேன். தி.மு.க.வை வீழ்த்த கூட்டணிக்கு தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×