search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருசநாடு அருகே யானைகஜம் பகுதியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் பலி
    X

    வருசநாடு அருகே யானைகஜம் பகுதியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் பலி

    • கடமலைக்குண்டு போலீசார் மற்றும் மயிலாடும்பாறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • நீண்ட நேரம் போராடி பாறை இடுக்குகளுக்கு இடையே சிக்கி இருந்த தங்கபாண்டியை பிணமாக மீட்டனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் தங்கபாண்டி (வயது18). இவர் உசிலம்பட்டியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வந்தார்.

    விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். உப்புத்துரை பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு உணவு தயாரிக்கும் பணிக்காக தங்கபாண்டி தனது நண்பர்களுடன் சென்றார். வேலை முடிந்ததும் அனைவரும் யானைகஜம் பகுதிக்கு குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் மூழ்கிய தங்கபாண்டி உதவி கேட்டு அலறினார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதனால் கடமலைக்குண்டு போலீசார் மற்றும் மயிலாடும்பாறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் வந்து நீண்ட நேரம் போராடி பாறை இடுக்குகளுக்கு இடையே சிக்கி இருந்த தங்கபாண்டியை பிணமாக மீட்டனர். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறிய காட்சி சோகத்தை ஏற்படுத்தியது. சதுரகிரி மலைக்கு செல்லும் வழியில் யானைகஜம் அமைந்துள்ளது. குளிர்ச்சியான நீர்வீழ்ச்சி என்றபோதும் பெருமளவில் ஆபத்துக்கள் உள்ளன. இந்த யானைகஜம் பகுதியில் வருடத்திற்கு சராசரியாக 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு நீர்வீழ்ச்சியின் ஆழமான பகுதி மற்றும் பாறை இடுக்குகள் தெரிவதில்லை. இதனால் தொடர்ந்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    எனவே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் பாதுகாப்பை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×