search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டை அருகே வாலிபர் கொலையில் திருப்பம்: கணவரை கொலை செய்ய கூலிப்படைக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்த மனைவி
    X

    சுரண்டை அருகே வாலிபர் கொலையில் திருப்பம்: கணவரை கொலை செய்ய கூலிப்படைக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்த மனைவி

    • திருமணத்திற்கு முன்பு முத்துமாரி வேறு ஒருவரை காதலித்துள்ளார்.
    • திருமணம் முடிந்த பின்னும் அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இது நாளடைவில் வைரவசாமிக்கு தெரிய வந்தது.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வென்றிலிங்கபுரத்தை சேர்ந்தவர் வைரவசாமி (வயது 30). இவரது மனைவி முத்துமாரி (வயது 23).

    கணவன்-மனைவி இரண்டு பேரும் சுரண்டை அருகே உள்ள வீரசிகாமணியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    அவர்கள் வீரசிகாமணி அருகே நடுவக்குறிச்சி சமத்துவபுரம் அருகே காட்டுப்பகுதியில் சென்ற போது அந்த வழியாக காரில் வந்த ஒரு மர்ம கும்பல் முத்துமாரி அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். இதனை வைரவசாமி தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை கல்லால் தாக்கி கொலை செய்தனர்.

    இதுதொடர்பாக சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முத்துமாரி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது முத்துமாரியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றது தெரிய வந்தது.

    வைரவசாமியும், முத்துமாரியும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்ததால் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    ஆனால் திருமணத்திற்கு முன்பு முத்துமாரி வேறு ஒருவரை காதலித்துள்ளார். திருமணம் முடிந்த பின்னும் அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இது நாளடைவில் வைரவசாமிக்கு தெரிய வந்தது.

    இதனால் மனைவி மற்றும் அந்த வாலிபரை அவர் கண்டித்துள்ளார். எனினும் அவர்கள் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.

    கணவன் உயிரோடு இருந்தால் தங்களால் பழக முடியாது எனக்கருதி அவரை கொலை செய்ய முத்துமாரி திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் கள்ளக்காதலனுடன் இணைந்து கூலிப்படையை ஏவி கொலை செய்ய கூறி உள்ளார்.

    இதையடுத்து போலீசார் முத்துமாரியை கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நான் பள்ளியில் படிக்கும் போதே வீரசிகாமணி வடக்கு தெருவை சேர்ந்த இசக்கிமுத்து (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கல்லூரியை கடந்தும் தற்போது வரை நீடித்து வருகிறது.

    எனது திருமணத்திற்கு பின்னும் இசக்கிமுத்துவிடம் பழகி வந்தேன். இது எனது கணவருக்கு தெரிந்து விட்டது. இதனால் அவர் எங்களை கண்டித்தார்.

    எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக இசக்கிமுத்துவின் உதவியை நாடினேன். நான் வேலை பார்க்கும் நிதி நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் கடன் தொகையை இசக்கிமுத்துவிற்கு வாங்கி கொடுத்தேன்.

    பின்னர் வைரவசாமியை கொலை செய்ய திட்டமிட்டோம். நான் எனது கணவருடன் வழக்கமாக மோட்டார் சைக்கிளில் வேலை முடிந்து வீடு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் செல்லும் போது அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்.

    அதன்படி இசக்கிமுத்து மற்றும் வீரசிகாமணி வடக்கு தெருவை சேர்ந்த காளிராஜ் (25), அங்கராஜ் (24) ஆகியோர் நடுவக்குறிச்சி சமத்துவபுரம் அருகே தயாராக நின்றனர்.

    அவர்களிடம் என் மீது மயக்க ஸ்பிரே தெளித்துவிட்டு நகையை பறிக்க முற்படுவது போல் எனது கணவரை கொலை செய்ய முடிவு செய்தோம்.

    சம்பவத்தன்று என்னிடம் நகையை பறிக்க முயன்றபோது அதனை தடுக்க வந்த எனது கணவரை, இசக்கிமுத்து உள்ளிட்ட 3 பேர் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அதே காரில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    தகவலறிந்து வந்த போலீசாரிடம் எனது நகையை பறிக்க வந்த போது கணவர் தடுத்ததால் அவரை மர்ம கும்பல் கொலை செய்து விட்டதாக தெரிவித்தேன். ஆனால் என் மீது சந்தேகம் அடைந்த போலீசார் நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து இசக்கிமுத்து உள்ளிட்ட 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டனர். அந்த கும்பல் சென்னைக்கு தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் விக்கிரவாண்டி சென்னை இடையே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது இசக்கிமுத்து உள்ளிட்ட 3 பேர் போலீசாரிடம் சிக்கினர். போலீசார் அவர்களை கைது செய்து சுரண்டை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வைரவசாமியை கொலை செய்ய அவரது மனைவி முத்துமாரி, தனது கள்ளக்காதலன் இசக்கிமுத்துவுடன் சேர்ந்து திட்டம் தீட்டி உள்ளார்.

    இதற்கு உடந்தையாக இசக்கிமுத்துவின் நண்பர்கள் 2 பேரையும் அவர்கள் அழைத்துள்ளனர். பின்னர் கொலை செய்வதற்கான இடத்தை அவர்கள் விவாதித்துள்ளனர்.

    அப்போது, தான் வழக்கம் போல் கணவருடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது வைரவசாமியை கொலை செய்ய முத்துமாரி யோசனை வழங்கி உள்ளார். அதன்படி அந்த கும்பல் நிதி நிறுவனம் செயல்பட்டு வரும் வீரசிகாமணி முதல் அவர்கள் வீடு உள்ள வென்றிலிங்கபுரம் வரை உள்ள சாலையில் தங்களுக்கு சாதகமான இடத்தை ஆராய்ந்துள்ளனர்.

    இதற்காக அவர்கள் அந்த பகுதியில் எங்கு எங்கெல்லாம் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என பார்த்துள்ளனர். அப்போது வைரவசாமி கொலை செய்யப்பட்ட நடுவக்குறிச்சி சமத்துவபுரம் காட்டுப்பகுதியில் கேமிராக்கள் இல்லாததால் அங்கு வைத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    அதன்படி அவர்கள் அந்த வழியாக வரும் போது தங்களது திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர்.

    போலீசார் கொலையாளிகளை கண்டறிவதற்காக பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டனர். அதன்படி சம்பவம் நடைபெற்ற இடங்களை சுற்றி உள்ள செல்போன் டவர்களில் அதிக நேரம் பேசிய எண்களை குறித்து அதன்மூலமும் விசாரணை நடத்தினர்.

    இதில் முத்துமாரி, இசக்கிமுத்து ஆகியோர் செல்போன் மூலம் நீண்ட நேரம் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதன்மூலம் போலீசார் துப்புதுலக்கி கொலையாளிகளை கைது செய்துள்ளனர்.

    Next Story
    ×