search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதம்பாக்கம்-ஆலந்தூரை இணைக்கும் வகையில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுமா?
    X

    ஆதம்பாக்கம்-ஆலந்தூரை இணைக்கும் வகையில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுமா?

    • மாநகராட்சி பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என பல பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
    • பல வருடங்களுக்கு முன்பு இரண்டு ரெயில்வே கேட்டுகளும் மூடப்பட்டன.

    ஆலந்தூர்:

    சென்னை மாநகராட்சி 12-வது மண்டலத்திற்கு உட்பட்ட ஆலந்தூர் பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

    அந்த பகுதியில் மேலும் மாநகராட்சி பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என பல பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

    50 வருடம் பழமையான ஆலந்தூர் மார்க்கெட்டும் உள்ளது. இதில் அரிசி மண்டி, காய்கறி மார்க்கெட், பழ மார்க்கெட், மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட், சமையல் மற்றும் எரிவாயு எண்ணைய் அங்காடிகள், ஜவுளி கடைகள் என பல்வேறு கடைகள் உள்ளது.

    இரண்டு பகுதிகளிலும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆதம்பாக்கம் மற்றும் ஆலந்தூரை இணைக்க முன்பு பரங்கிமலை ரெயில் நிலைய ரெயில்வே கேட் மற்றும் நிதி பள்ளி ரெயில்வே கேட் என இரண்டு ரெயில்வே கேட் இருந்தது. பல வருடங்களுக்கு முன்பு இரண்டு ரெயில்வே கேட்டுகளும் மூடப்பட்டன.

    அதில் பரங்கிமலை ரெயில் நிலைய கேட் நெடுஞ்சாலை துறை சார்பாக சுரங்க பாதையாக மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது இதில் கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.

    இந்த சுரங்கப்பாதை கீழ்கட்டளையில் இருந்து ஆலந்தூர் வழியாக கிண்டி செல்ல ஏதுவாக உள்ளது. தற்பொழுது இந்த சுரங்கபாதை பிரதான சுரங்க பாதையாக மாறி உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி, வேலை நேரமான காலை மற்றும் மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    அதிலும் குறிப்பாக ஆதம்பாக்கத்தில் இருந்து கருணீகர் தெரு வழியாக சுரங்கப்பாதை செல்வதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

    மேலும் மூடப்பட்டிருந்த நிதி பள்ளி ரெயில்வே கேட் எல்.சி.-15 வழியை பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால் அவ்வப்போது ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்தது.

    இதை அடுத்து ஆதம்பாக்கம் மற்றும் ஆலந்தூர் இரு பகுதி மக்களும் மூடப்பட்டிருந்த நிதி பள்ளி ரெயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2013-ம் ஆண்டு அப்போதைய சென்னை மாநகராட்சி இரு பகுதியை இணைக்க சுரங்கபாதை அமைக்க பூஜை போடப்பட்டது.

    இந்த பணி தொடங்குவதற்கு சென்னை மாநகராட்சி சார்பாக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 3 கோடி ரூபாய் ரெயில்வே துறைக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த பகுதியில் மெட்ரோ குடிநீர் ராட்சத பைப் இருப்பதால் சுரங்கபாதை அமைவதற்கு வாய்ப்பு இல்லை என குடிநீர் வாரிய மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து சுரங்கப்பாதை திட்டம் மாற்றப்பட்டு மேம்பாலம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மேம்பாலத்திற்கு சாய் தள மேம்பாலம் என்றும் பெயரிடப்பட்டது. இந்த மேம்பாலத்தில் இலகுரக வாகனங்களான ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் பயன்படுத்து வதற்காக கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் உட்பட அனைவரும் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒரு சில காரணங்களுக்காக மேம்பாலம் கட்டும் பணிகள் காலதாமத மானது. பின்பு 2016 அ.தி. மு.க. ஆட்சியில் சென்னை மாநகராட்சி உட்கட்டமைப்பு இல்லாததால் (கவுன்சிலர்கள் இல்லை) இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டது .

    தற்போது எல்.சி.-15 ரெயில்வே கேட் முழுவதுமாக மூடப்பட்டு ஆதம்பாக்கம் மற்றும் ஆலந்தூர் இரு பக்கத்திலும் சுமார் 12 அடி உயரத்திற்கு சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால் ரெயிலில் அடிபட்டு உயிரிழப்புகள் தடுக்கப்பட்டாலும் பொது மக்கள் மிகவும் சிரமமடைந்து உள்ளனர்

    ஆதம்பாக்கத்தில் இருந்து ஆலந்தூர் செல்ல ஒரே வழியான பரங்கிமலை சுரங்கப் பாதை வழியாக தான் செல்ல வேண்டும்.

    இதனால் ஆதம்பாக்கத்தில் இருந்து ஆலந்தூர் செல்ல குறைந்தது மூன்று கிலோ மீட்டரில் இருந்து அதிகபட்சம் ஐந்து கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதனால் இரு பகுதி மக்களும் சிறிய வாகனங்கள் செல்லும் சாய்தள மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கையை வைத்தனர். ஆனால் இலகுரக வாகனங்கள் இல்லாமல் பாதசாரிகள் மட்டும் செல்லும் மேம்பாலமோ, சுரங்கபாதையோ வேண்டாம் என்று பொது மக்கள் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    அதற்கு காரணம் பாத சாரிகள் மட்டும் பயன் படுத்தும் மேம்பாலம் அல்லது சுரங்கபாதையில் பிச்சைக்காரர்கள் மற்றும் சாலையில் வசிப்பவர்கள் அதன் இருபுறமும் ஆக்கிரமித்து விடுகின்றனர்.

    மேலும் மாலை நேரங்களில் பள்ளி மாணவிகள் உட்பட பெண்கள் தனியாக நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

    ஏனென்றால் ஏற்கனவே ஆலந்தூர் ஆசர்கானாவில் இருந்து ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் எதிரே உள்ள பேருந்து நிலையத்திற்கு செல்ல பாத சாரிகளுக்கான சுரங்கப்பாதை உள்ளது. அது தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குகையாக மாறி வருகிறது. இந்த சுரங்கப்பாதையில் பெண்கள் பகல் நேரங்களில் கூட தனியாக செல்வது இல்லை. இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக மிக குறைவு.

    அதனால் ஆதம்பாக்கம் -ஆலந்தூரை இணைக்கும் இந்த எல்.சி.15 ரெயில்வே கேட் பகுதியில் இலகுரக வாகனங்கள் செல்லும் வகையிலும் பொது மக்கள் ஓரமாக நடந்து செல்லும் வகையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இப்படி மேம்பாலம் அமைத்தால் அது மழைக் காலங்களிலும் பயனுள்ளதாக இருக்கும். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான இந்த கோரிக்கையை தற்பொழுது உள்ள அரசால் நிறைவேற்றப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

    Next Story
    ×