search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழவேற்காடு அருகே 2 ஆண்டாக நடக்கும் மேம்பால பணி விரைந்து முடிக்கப்படுமா?- கிராம மக்கள் எதிர்பார்ப்பு
    X

    மேம்பாலம் பணிகள் நடைபெறுவதை படத்தில் காணலாம்

    பழவேற்காடு அருகே 2 ஆண்டாக நடக்கும் மேம்பால பணி விரைந்து முடிக்கப்படுமா?- கிராம மக்கள் எதிர்பார்ப்பு

    • பணி மிகவும் மந்தமாக நடைபெறுவதால் மேம்பாலம் கட்டி முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
    • கிராமமக்கள், மாணவர்கள் என அனைவரும் ஏரியை கடந்துதான் சென்று வருகிறன்றனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட பசியாவரம் எடமணி, எடமணி காலனி, ரகமத்நகர், தாங்கள் பெரும்புலம் ஊராட்சிக்குட்பட்ட சாட்டாங்குப்பம், ஆகிய கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பெரும்பாலானோர் இறால் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களை சுற்றி பழவேற்காடு உப்பங்கழி ஏரி காணப்படுவதால் தனித்தீவாக காணப்படுகின்றன. அவர்கள் பழவேற்காடு, மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளுக்கு செல்வதற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தண்ணீரில் நடந்து ஏரியை கடந்து சென்று வருகின்றனர்.

    அங்குள்ள தரை பாலத்தை கடந்து செல்ல வேண்டுமானால் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு காணப்படும்போது தரைப் பாலத்தில் கடந்து செல்ல முடியாமல் படகில் பயணம் செய்யும் நிலை நீடித்து வருகிறது.

    இதையடுத்து பசியாவரம், பழவேற்காடு ஏரி பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து ரூ.18 கோடியே 20 லட்சம் மதிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஆனால் பணி மிகவும் மந்தமாக நடைபெறுவதால் மேம்பாலம் கட்டி முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    கிராமமக்கள், மாணவர்கள் என அனைவரும் ஏரியை கடந்துதான் சென்று வருகிறன்றனர். மாற்றுப் பாதையில் செல்ல வேண்டுமானால் இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து செல்லும் நிலை உள்ளது. சாலையும் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    மழைக்காலங்களில் ஏரியில் தண்ணீர் அதிகமாக காணப்படுவதால் படகில் செல்லும் நிலை உள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மேம்பால கட்டிடப் பணிகளை விரைந்து முடித்து பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×