search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய ரெயில்களை எதிர்பார்த்து காத்திருக்கும் தென்காசி மாவட்ட மக்கள்-கூடுதல் ரெயில்கள் அறிவிக்கப்படுமா?
    X

    புதிய ரெயில்களை எதிர்பார்த்து காத்திருக்கும் தென்காசி மாவட்ட மக்கள்-கூடுதல் ரெயில்கள் அறிவிக்கப்படுமா?

    • நெல்லையில் இருந்து வியாழக்கிழமை தோறும் தென்காசி வழியாக சென்னைக்கு நிரந்தர ரெயில் இயக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தென்காசிக்கு, சென்னை தவிர வேறு ஊர்களுக்கு ரெயில்களே இல்லாத நிலைதான் நிலவுகிறது.

    தென்காசி:

    தென்காசி ரெயில் நிலையமானது நெல்லை-தென்காசி, விருதுநகர்- தென்காசி-கொல்லம் வழித்தடங்களின் மிக முக்கியமான சந்திப்பு ஆகும்.

    இதில் கொல்லம்-தென்காசி-அம்பை-நெல்லை வழித்தடமானது கடந்த 1904-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையாக அமைக்கப்பட்டு கொல்லத்தில் இருந்து சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2012-ம் ஆண்டு அந்த பாதையானது அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு தற்போது ரெயில்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றன.

    தென்காசி-ராஜ பாளையம்-விருதுநகர் வழித்தடமானது கடந்த 1927-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையாக அமைக்கப்பட்டு பின்னர் 2004-ல் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. அந்த தடத்தில் தற்போது பொதிகை, சிலம்பு, கொல்லம், மெயில் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் தென்காசி மாவட்ட பொதுமக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், மத்திய அரசிடம் தமிழக எம்.பி.க்கள் அதிக அளவில் அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்கு புதிய வழித்தடங்களில் ரெயில்கள் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கோரிக்கையாக உள்ளது. அதே நேரத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க தேவையான அடிப்படை கட்டமைப்புகள் என்னென்ன தேவை என்பது குறித்து ரெயில் பயணிகள் சங்கத்தினர் விளக்கி உள்ளனர்.

    செங்கோட்டை-தென்காசி இடையே இரட்டை அகல ரெயில் பாதை அமைத்தல், தென்காசி ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகளை பராமரிக்கும் வசதிகளை ஏற்படுத்தி டெர்மினல் ரெயில் நிலையமாக மாற்றுதல், நெல்லையில் இருந்து அம்பை, ராஜபாளையம் வழியாக செல்லும் ரெயில்களுக்கு என்ஜின் மாற்றாமலேயே பைபாசில் செல்லும் வகையில் தென்காசி ரெயில் நிலையத்தில் பைபாஸ் லைன் அமைத்தல், பாவூர்சத்திரம், கடையம், அம்பை, சேரன்மகாதேவி ரெயில் நிலைய நடைமேடைகளின் நீளத்தை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டித்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு கோரிக்கைகள் பிரதான தேவையாக உள்ளது.

    புதிய ரெயில்கள்

    வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் நெல்லையில் இருந்து அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரெயிலை நிரந்தர ரெயி லாக மாற்றுதல், பிலாஸ்பூர் ரெயிலின் காலிப்பெட்டி களை கொண்டு நெல்லையில் இருந்து வியாழக்கி ழமை தோறும் தென்காசி வழியாக சென்னைக்கு நிரந்தர ரெயில் இயக்குதல், பாவூர்சத்திரம் வழியாக செல்லும் செங்கோட்டை- தாம்பரம் வாரம் மும்முறை ரெயிலின் வேகத்தை அதிகரித்து தினசரி ரெயிலாக இயக்குதல் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசின் ரெயில்வே துறையிடம் வலியுறுத்த வேண்டும்.அதேபோல், நெல்லையில் இருந்து பாவூர்சத்திரம், தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூருக்கு தினசரி ரெயில் இயக்குதல், பாவூர்சத்திரம், தென்காசி, கொல்லம் வழியாக கர்நாடக மாநிலம் மங்களூருக்கு ரெயில் இயக்குதல், குருவாயூரில் இருந்து புனலூர் வரை இயங்கும் ரெயிலை தென்காசி, ராஜபாளையம் வழியாக மதுரைக்கு நீட்டிப்பு செய்தல், எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், தென்காசி, ராஜபாளையம் வழியாக வேளாங்கண்ணிக்கு வாரம் இருமுறை ரெயில், பாலருவி விரைவு ரெயிலை நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு நீட்டிப்பு செய்தல், மதுரையோடு நிற்கும் புதுடெல்லி - மதுரை சம்பர்க்கி ராந்தி ரெயிலை ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம் வழியாக நெல்லைக்கு நீட்டித்தல், ஈரோடு-நெல்லை ரெயிலை பாவூர்சத்திரம் வழியாக செங்கோட்டைக்கு நீட்டித்தல், நெல்லை- கொல்லம் இடையே நேரடி ரெயில்கள் இயக்குதல் உள்ளிட்டவை தென்காசி மாவட்ட மக்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ளது.

    மின்மயமாக்கல்

    விருதுநகர்- செங் கோட்டை- கொல்லம், தென்காசி-நெல்லை ஆகிய வழித்தடங்களில் ரெயில்வே மின்மயமாக்கல் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால் கூடுதல் ரெயில்களை இயக்குவதற்கு இவை சாதகமாக அமையும். இதுகுறித்து தென்காசி மாவட்ட ரெயில் பயணிகள் கூறுகையில், ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் அனைத்து ரெயில்களையும் விரைவில் ஒப்புதல் அளித்து இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தட்சிண காசி என்று அழைக்கப்படும் தென்காசிக்கு, சென்னை தவிர வேறு ஊர்களுக்கு ரெயில்களே இல்லாத நிலைதான் நிலவுகிறது.

    எனவே தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு பெங்களூரு, கோவை மற்றும் வட மாநிலங்களுக்கு தென்காசி வழியாக ரெயில்களை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×