search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் அங்குள்ள வனப்பகுதியில் தொடர்ந்து அதிர்வேட்டு வெடிக்கப்படுகிறது.
    • தற்போது மீண்டும் மக்னா யானை தொழிலாளியை தாக்கியுள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் பண்ணைப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 65), இவர் கேரளாவை சேர்ந்த ரவீந்திரநாத் என்பவரது தோட்டத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தினமும் தோட்ட வேலையை பார்த்து விட்டு, வீட்டுக்கு செல்வார். அப்போது தேவையான உணவு பொருட்களை வாங்கிவிட்டு, மீண்டும் இரவு தோட்டத்திற்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு ராமு தோட்டத்திற்கு செல்வதற்காக, பண்ணைப்புரம் சங்கப்பன்குளம் பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் இருந்து வந்த ஒற்றை மக்னா யானை ராமுவை பலமாக தாக்கியது. இதில் அவர் பக்கத்தில் உள்ள முள்வேலியில் சிக்கி பலத்த காயமடைந்தார். வேலிக்குள் விழுத்து கிடந்ததால், மக்னா யானை அப்படியே விட்டுவிட்டு சென்றது. உயிர் தப்பிய ராமுவை இன்று அக்கம் பக்கத்தினர் மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

    தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் அங்குள்ள வனப்பகுதியில் தொடர்ந்து அதிர்வேட்டு வெடிக்கப்படுகிறது. இதனால் அங்குள்ள யானைகள் இடம்பெயர்ந்து தேனி விளை நிலங்களுக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் மக்னா யானை தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மீண்டும் மக்னா யானை தொழிலாளியை தாக்கியுள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் யானைகள் புகுவதை தடுக்க வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முல்லை பெரியாற்று பகுதியை கடக்க முயன்ற போது பிரபு தேவா திடீரென மாயமானார்.
    • பிரபுதேவா உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத காட்சி அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே ஆங்கூர் பாளையம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 80 வயது மூதாட்டியிடம் சாமாண்டிபுரத்தை சேர்ந்த விஜயகுமார் தவறாக நடக்க முயன்றார். இதுகுறித்த புகாரின்பேரில் கூடலூர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    விஜயகுமாரை அடையாளம் காட்ட அதேகிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் முகிலன், கிருஷ்ணன், அருண்பாண்டி, பிரபுதேவா (வயது 28) ஆகியோரை கூடலூர் போலீசார் சாமாண்டிபுரத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது முல்லை பெரியாற்று பகுதியை கடக்க முயன்ற போது பிரபு தேவா திடீரென மாயமானார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விஜயகுமாரை தேடுவதை விட்டுவிட்டு திரும்பியுள்ளனர். நீண்டநேரமாகியும் பிரபுதேவா வீடு திரும்பாததால் கம்பம் மெயின்ரோடு காந்திசிலை அருகே மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து சென்ற போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரபுதேவாவை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    முல்லை பெரியாற்றில் நீர் திறப்பை குறைத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பிரபுதேவாவை தேடி வந்தனர். இந்த நிலையில் 2 நாட்களுக்குப் பின்னர் இன்று காலை சுருளிபட்டி முல்லை பெரியாற்று பகுதியில் பிரபுதேவா பிணமாக மீட்கப்பட்டார்

    உயிரிழந்த பிரபுதேவாவிற்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு பெண்குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பிரபுதேவா உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத காட்சி அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

    • வைகை அணை நீர்மட்டம் 65.16 அடியாக உள்ளது. வரத்து 1796 கன அடி. திறப்பு 669 கன அடி.
    • மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55.80 அடி. வரத்து 138 கன அடி. திறப்பு 90 கன அடி.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியிலும் கடந்த மாதம் பரவலாக கனமழை பெய்தது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த நிலையில் கடந்த மாதம் 24-ந்தேதி அணை நீர்மட்டம் 136 அடியை எட்டியது. இதனையடுத்து முதல் கட்ட எச்சரிக்கை இடுக்கி மாவட்டத்துக்கு விடப்பட்டது.

    அதன் பிறகு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை மேலும் அணையில் இருந்து கூடுதலாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் வரை அணையில் இருந்து 1500 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் முல்லைப்பெரியாற்றில் வாலிபர் ஒருவர் தவறி விழுந்ததால் அவரை தேடுவதற்காக சனிக்கிழமை இரவு முதல் அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 511 கன அடியாக குறைக்கப்பட்டது.

    இதனால் அணையின் நீர் மட்டம் மீண்டும் 136 அடியை எட்டியுள்ளது. இன்று காலை நிலரப்படி அணையின் நீர் மட்டம் 136.20 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1846 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6168 மி.கன அடியாக உள்ளது.

    இந்த ஆண்டு 2-வது முறையாக அணையின் நீர் மட்டம் 136 அடியை எட்டியுள்ளதால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெரியாறு, வல்லக்கடவு, சப்பாத்து ஆகிய பகுதிகளுக்கு முதல் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாத நிலையில் செயற்கையாக 136 அடிக்கு நீர் மட்டத்தை உயர்த்தி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள செயலுக்கு 5 மாவட்ட விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    வைகை அணை நீர்மட்டம் 65.16 அடியாக உள்ளது. வரத்து 1796 கன அடி. திறப்பு 669 கன அடி. இருப்பு 4666 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55.80 அடி. வரத்து 138 கன அடி. திறப்பு 90 கன அடி. இருப்பு 451.75 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.54 அடி. வரத்து மற்றும் திறப்பு 127 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

    • தோட்டத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தர் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் பாலாஜி(19). இவர் ஈரோட்டில் உள்ள மோட்டார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். சென்னையை சேர்ந்த பாலகுமார் தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியங்குடி பகுதியில் தென்னந்தோப்பு வைத்துள்ளார்.

    அந்த தோப்பிற்கு மோட்டார் பொருத்தும் பணிக்காக பாலாஜி மற்றும் பரமேஸ்வரன்(42) , பிரவீன்குமார்(20) ஆகிய 3 பேரும் வந்தனர். கடந்த சில நாட்களாக மோட்டார் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று பணி முடிந்த பின்னர் 3 பேரும் சாப்பிட சென்றனர். பின்னர் பரமேஸ்வரன் மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் திரும்பினர். ஆனால் பாலாஜி திடீரென மாயமானார்.

    இதனால் தோட்டத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் மீன் வளர்க்கும் தொட்டியில் பாலாஜி தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசார் மற்றும் கம்பம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பாலாஜியின் உடலை கைப்பற்றி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தர் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.50 அடியாக உள்ளது. அணைக்கு 1222 கன அடி நீர் வருகிறது.
    • கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் திண்டுக்கல், தேனி மாவட்ட மஞ்சளாற்று கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் தொடர்ந்து பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    குறிப்பாக கொட்டக்குடி, குரங்கணி பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்றும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதனால் வைகை அணையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. நேற்று 62.73 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 63.62 அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நீர்வரத்து 1327 கன அடியில் இருந்து 3795 கன அடியாக உயர்ந்துள்ளது.

    நேற்று வரை பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 669 கன அடியாக குறைக்கப்பட்டது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.50 அடியாக உள்ளது. அணைக்கு 1222 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேலும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு, கண்டமனூர் பகுதியில் பெய்த கனமழையால் மூல வைகையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.60 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 293 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 552 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் திண்டுக்கல், தேனி மாவட்ட மஞ்சளாற்று கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.80 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 220.58 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் 37-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வருசநாடு அருகே உள்ள மேகமலை அருவி, கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, போடி அருகே உள்ள அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சி உள்பட அனைத்து அருவிகளுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை வித்துள்ளனர்.

    மேலும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பெரியாறு 7, தேக்கடி 6.8, கூடலூர் 1.2, உத்தமபாளையம் 1, சண்முகாநதி அணை 1.4, போடி 50, வைகை அைண 63.2, மஞ்சளாறு 92, சோத்துப்பாறை 36, பெரியகுளம் 40.4, வீரபாண்டி 3.6, அரண்மனைபுதூர் 84, ஆண்டிபட்டி 60.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • கும்பக்கரை அருவியிலும் இன்று 36-வது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
    • சண்முகாநதி அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அந்த அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் பரவலாக கனமழை பெய்தது. போடி, பெரியகுளம், தேவதானப்பட்டி ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் சாலையில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    குரங்கணி பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. இதனால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கும்பக்கரை அருவியிலும் இன்று 36-வது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    சண்முகாநதி அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அந்த அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.60 அடியாக உள்ளது. வரத்து 784 கன அடி. திறப்பு 1500 கனஅடி. இருப்பு 6017 மி.கன அடி. வைகை அணை நீர்மட்டம் 62.73 அடி. வரத்து 1327 கன அடி. திறப்பு 1639 கன அடி. இருப்பு 4146 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.40 அடி. வரத்து 149 கன அடி. திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.37 அடி. வரத்து மற்றும் திறப்பு 48 கன அடி.

    பெரியாறு 15.4, தேக்கடி 20, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 1.8, சண்முகாநதி அணை 2.6, போடி 62, சோத்துப்பாறை 14 மி.மீ. மழை அளவு பதிவானது.

    • வைகை அணையின் நீர்மட்டம் 63.35 அடியாக உள்ளது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.10 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணை நீர்மட்டம் கடந்த மாதம் 9-ந் தேதி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனைத்தொடர்ந்து 10-ந் தேதி அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    தொடர்ந்து கடந்த மாதம் 15-ந் தேதி திருமங்கலம் பிரதான கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து திருமங்கலம் பிரதான கால்வாயில் கடந்த மாதம் 25-ந் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இருந்தபோதும் பெரியாறு பிரதான கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி கடந்த மாதம் 23-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை மொத்தம் 7 நாட்களுக்கு ராமநாதபுரம் வைகை பூர்வீக பாசன பகுதி 1க்கு வைகை அணையில் இருந்து ஆற்றில் 1504 மி.கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை 5 நாட்களுக்கு சிவகங்கை வைகை பூர்வீக பாசன பகுதி 2க்கு அணையில் இருந்து வைகை ஆற்றில் மொத்தம் 619 மி.கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    தற்போது வைகை அணையில் இருந்து இன்று முதல் வருகிற 8-ந் தேதி வரை மொத்தம் 3 நாட்களுக்கு மதுரை வைகை பூர்வீக பாசன பகுதி 3க்கு வைகை ஆற்றில் மொத்தம் 343 மி.கன அடி திறக்கப்படுகிறது. அணையில் இருந்து வைகை ஆற்றில் இன்றும் நாளையும் வினாடிக்கு 1500 கன அடி வீதமும், வெள்ளிக்கிழமை வினாடிக்கு 970 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படும் என்று வைகை அணை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 63.35 அடியாக உள்ளது. வரத்து 1291 கன அடி. நேற்று வரை 1334 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 2169 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4276 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.10 அடியாக உள்ளது. வரத்து 884 கன அடி. நேற்று வரை 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 6143 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.20 அடி. வரத்து 114 கன அடி. திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடி. வரத்து மற்றும் திறப்பு 64 கன அடி.

    வைகை அணையில் இருந்து 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் தேனி, மதுரை மாவட்ட வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.20 அடியாக உள்ளது.
    • தேக்கடியில் 0.2, போடியில் 12, சோத்துப்பாறையில் 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 10-ந்தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனையடுத்து மதுரை, சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்த நிலையில் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஆனால் தற்போது மழை குறைந்ததாலும், பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

    இருந்தபோதும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை மாவட்ட 2-ம் பூர்வீக பாசனத்துக்காக இன்று காலை முதல் வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 7 சிறிய மதகுகள் மூலம் 5 நாட்களுக்கு 619 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தின் 10531 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாக திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர் மட்டம் 64.86 அடியாக உள்ளது. வினாடிக்கு 1492 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2669 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4600 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.20 அடியாக உள்ளது. வரத்து 1016 கன அடி. திறப்பு 1000 கன அடி. இருப்பு 6128 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. வரத்து மற்றும் திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.54 அடி. வரத்து மற்றும் திறப்பு 154 கன அடி.

    தேக்கடியில் 0.2, போடியில் 12, சோத்துப்பாறையில் 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. கனமழை நின்ற பிறகும் கும்பக்கரை அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் அங்கு குளிக்க இன்று 29-வது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    • எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் காந்திய ஆதரவாளர்கள் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தேரடி என்ற இடத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் நின்ற நிலையில் உள்ள சிலை உள்ளது. இந்த சிலைக்கு காந்தி ஜெயந்தி, சுதந்திரதினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். இந்த சிலையை சுற்றி தற்காலிக கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் காந்தியின் சிலையை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

    கைத்தடி ஊன்றியது போல இருந்த சிலையின் பாகம் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்றும் அதில் சிலையை உடைத்த நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் சோதனை செய்து வருகின்றனர்.

    இதனிடையே காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் த.மா.கா. முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் காந்திய ஆதரவாளர்கள் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிலையை சேதப்படுத்திய கும்பலை உடனடியாக கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்ததால் கம்பத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

    • கால்வாயில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலூர்:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் விக்கி (வயது 35). தச்சு வேலை பார்த்து வரும் இவருக்கு திருமணமாகி ரூபிணிதேவி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் விக்கி தனது வீட்டின் அருகே உள்ள நண்பர்களுடன் அழகர்கோவில் அருகே உள்ள கள்ளந்திரி பெரியாறு கால்வாயில் குளிக்க சென்றார். வைகை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கால்வாயில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்தது.

    இதனை உணராமல் விக்கி மற்றும் நண்பர்கள் கால்வாயில் குளித்தனர். கால்வாயில் நடுப்பகுதிக்கு சென்ற விக்கி நீண்ட நேரமாகியும் வெளியே வர வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் மற்றும் அங்கிருந்த சிலர் கால்வாயில் நீந்தி விக்கியை தேடி பார்த்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இதுகுறித்து அப்பன் திருப்பதி போலீசாருக்கும், தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அபி கோவிந்தராஜ், தீயணைப்பு நிலைய அலுவலர் காதர் பாட்சா தலைமையிலான தீயணைப்பு மற்றும் கமாண்டோ படை வீரர்கள் சம்பவ இடம் வந்து விக்கியை தேடினர். ஆனால் அதற்குள் இருட்டிவிட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இன்று காலை வீரர்கள் தேடும் பணியை தொடங்கினர். அப்போது கள்ளந்திரி கால்வாயில் இருந்து சில மீட்டர் தொலைவில் புதருக்கு இடையே விக்கி உடல் சிக்கி இருந்தது தெரியவந்தது. வீரர்கள் உடலை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 500 கிலோ நெய் கொப்பரையில் ஊற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகளை செய்து மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
    • பின்னர் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே உள்ள பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில் மலை மேல் அமைந்துள்ளது. இக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. இதையொட்டி 500 கிலோ நெய் கொப்பரையில் ஊற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகளை செய்து மகா கார்த்திகை தீபம் அர்ச்சகர் கீர்த்தி வாசகன் ஏற்றி வைத்தார்.

    அதன் பின்னர் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கைலாசநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. டி.எஸ்.பி. கீதா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். இதில் கோவில் செயல்அலுவலர் ஹரிஷ்குமார், அ.தி.மு.க. மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மகன்கள் இருந்தபோதும் தன்னை கவனிக்க யாரும் இல்லை என புலம்பி வந்தார்.
    • மன உளைச்சலுக்கு ஆளானவர் விஷம் குடித்து மயங்கினார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே அன்னை இந்திராநகரைச் சேர்ந்தவர் முத்துக்காளை (வயது 61). இவரது முதல் மனைவி இறந்து விட்டார். 2-வது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டார். இவருக்கு மகன்கள் இருந்தபோதும் தன்னை கவனிக்க யாரும் இல்லை என புலம்பி வந்தார். இதனால் மது போதைக்கு அடிமையானார்.

    இதன் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டது. மன உளைச்சலுக்கு ஆளான முத்துக்காளை விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்காளை உயிரிழந்தார். இது குறித்து க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×