search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • புதியதாக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டுகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்.
    • 14,542 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் புதியதாக தேர்வு செய்யப்பட்ட 14,542 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டுகளை கலெக்டர் ஷஜீவனா முன்னிலையில் வழங்கினார்.

    இதில் சரவணக்குமார் எம்.எல்.ஏ, மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது,

    தேனி மாவட்டத்தில் 15.09.2023 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தகுதியான பயனாளிகள் என தேர்வு செய்யப்பட்ட 2,04,281 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு, அதற்கான ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த ஒரு தகுதியான நபரும் விட்டுவிடக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் இத்திட்டத்தில் விடுபட்ட நபர்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கான வசதியினை ஏற்படுத்தினார்.

    அதன்படி, இத்திட்டத்தில் மேல்முறையீடு செய்த பயனாளிகளின் விண்ணப்பங்கள் குழு அமைத்து, கள ஆய்வு செய்து அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு, தகுதியான மனுக்கள் என தேர்வு பெற்ற 14,542 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு, அதற்கான ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டது.

    மேலும், மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் விசாரணை செய்யும் பணிகள் விரைவில் முடிவடைந்து, உரிமைத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பேசினார்.

    முன்னதாக முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விழாவின் நேரலை நிகழ்வினை புதியதாக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுடன் அமர்ந்து நிகழ்ச்சியினை பார்வையிட்டனர்.

    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
    • விரைவில் 130 அடியை எட்டிவிடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. அதன்படி இன்று காலை அணைக்கு நீர்வரத்து 1598 கனஅடியாக இருந்தது. தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 105 கனஅடிநீர் மட்டுமே திறக்கப்படுகிறது.

    அணையின் நீர்மட்டம் 129.70 அடியாக உள்ளது. விரைவில் 130 அடியை எட்டிவிடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

    வைகை அணை நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. நேற்று அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தபோதும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அணையின் நீர்மட்டம் 70.51 அடியாக உள்ளது. 1309 கனஅடிநீர் வருகிறது. மதுைர மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 769 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின்நீர்மட்டம் 53.50 அடியாக உள்ளது. 214 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.67 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 239.38 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    பெரியாறு 19, தேக்கடி 8.4, கூடலூர் 3.6, உத்தமபாளையம் 2.4, சண்முகாநதி அணை 7.3, போடி 2.4, வைகை அணை 5, மஞ்சளாறு 3.4, சோத்துப்பாறை 3, பெரியகுளம் 1, வீரபாண்டி 2.6, அரண்மனைப்புதூர் 2.2, ஆண்டிபட்டி 4.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • கதவை உடைத்து பார்த்தபோது சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கி போலீஸ்காரர் இறந்துகிடந்தார்.
    • பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையை அவரது இறந்தவரின் மனைவியிடம் எம்.எல்.ஏ வழங்கினார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகில் உள்ள காமாட்சிபுரம் மேற்குதெருவை சேர்ந்தவர் சின்னத்துரை(63). இவர் விருவீடு போலீஸ்நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். பின்னர் பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்டதால் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி சித்ரா மற்றும் 2 மகன்கள் தனியாக வசித்து வந்தனர்.

    நேற்று சின்னத்துரை வீடு நீண்டநேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது மகன் நிசாந்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டிற்கு வந்து கதவை தட்டியும் திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்து பார்த்தபோது சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கி சின்னத்துரை இறந்துகிடந்தார்.

    இதுகுறித்து பெரியகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே பெரியகுளத்தில் உள்ள சின்னத்துரை வீட்டிற்கு சென்ற சரவணக்குமார் எம்.எல்.ஏ அவரது மனைவி சித்ராவிற்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையை சித்ராவிடம் வழங்கினார். அப்போது பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், தாசில்தார் அர்ஜூணன், நகரச்செயலாளர் முகமது இலியாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • செல்வக்குமார் உசிலம்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2-ந்தேதி சரணடைந்தார்.
    • விசாரணைக்கு பிறகு மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் நகர தெற்கு தி.மு.க செயலாளராக இருந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி சுனோதா. இவர் கம்பம் நகர்மன்ற தலைவியாக உள்ளார். செல்வக்குமார் நியோமேக்ஸ் தனியார் நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்து கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் அதிகளவில் முதலீடுகளை பெற்றார்.

    மேலும் தனியார் பல்பொருள் அங்காடி, பேஷன்ஸ் கடை ஆகிய நிறுவனங்களையும் கம்பத்தில் நடத்தி வந்தார். இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து பெற்ற வைப்புத்தொகையை திருப்பித்தராமல் இழுத்தடிப்பு செய்வதாக தேனி, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.

    இதனிடையே செல்வக்குமார் உசிலம்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2-ந்தேதி சரணடைந்தார். இவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நவம்பர் 8-ந்தேதி விசாரித்து வாக்குமூலம் பெற்று அதனடிப்படையில் கம்பத்தில் உள்ள அவரது வீட்டில் துணை கண்காணிப்பாளர் மணிஷா தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரூ.5.50 லட்சம் ரொக்கம், 46.200 கிராம் தங்கம், 139.800 கிராம் வெள்ளி ஆகியவற்றை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.5.80 லட்சமாகும். விசாரணைக்கு பிறகு மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • லோயர்கேம்ப்- மதுரை கூட்டு குடிநீர் திட்டத்துக்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • கார் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப்- மதுரை கூட்டு குடிநீர் திட்டத்துக்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சின்னமனூர் அருகே சீலையம்பட்டி பகுதியில் தேசிய நெஞ்சாலை ஓரம் குழாய் பதிக்கும் பணி நிறைவுபெற்றது.

    இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அவ்வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    • சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது மதுரை நோக்கி வந்த லாரி பயங்கரமாக மோதியது.
    • தூக்கிவீசப்பட்ட முதியவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே கீழபூலானந்தபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(70). விவசாயி. இவர் சாலையை கடக்க முயன்றபோது கம்பத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த திராட்சை லாரி பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட ஜெயக்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் லாரி டிரைவர் நாராயணதேவன்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்து மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.

    • மகரஜோதி வரை வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.
    • பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    தேனி:

    சபரிமலை அய்யப்பன் கோவில் கார்த்திகை முதல்நாள் முதல் மகரஜோதி வரை வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் தேக்கடியில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ், தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கார்த்திகை முதல் நாள் முதல் மகரஜோதி வரை அய்யப்பன் கோவில் வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்பதால் பக்தர்களின் வசதி மற்றும் பாதுகா ப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    வெளியூர் மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வரும் வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்தப்பட வேண்டும். மேலும் வாகனங்களில் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள வாகன எண் பலகைகளை மறைக்காத வண்ணம் புகைப்படங்கள் மற்றும் மாலைகளை அணி வித்திருக்க வேண்டும்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். வாடகை வாகனங்களில் அதிக அளவில் பக்தர்களை ஏற்றி செல்லக் கூடாது. பக்தர்கள் சாலை விதிகளை பின்பற்றி, குறிப்பிட்டுள்ள இடங்களில் மாற்று பாதைகளில் செல்ல வேண்டும்.

    மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் பசுமை சோதனை சாவடிகள் அமைக்கப்பட வேண்டும். பக்த ர்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு செல்ல அனு மதிக்க கூடாது. அவ்வாறு பக்தர்களால் கொண்டு வரப்படும் தடைசெய்ய ப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

    வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொரு ட்கள், மது, புகையிலை போன்ற பொ ருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க உரிய இடங்களில் விழிப்பு ணர்வு பதாகைகளை வைக்கப்பட வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பி ற்காக போதிய போலீசார் சுழற்சி முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

    குறுவனூத்து மற்றும் எரச்சல் பாலம் அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் பக்தர்களை குளிக்க அனுமதிக்க கூடாது. மேலும் பாலத்தின் இருபுறமும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட வேண்டும்.

    கம்பம் மற்றும் கூடலூர் நகராட்சி சார்பாக பக்தர்களுக்கு குடிநீர் வசதி, நடமாடும் கழிவறைகள் ஆகியன அமைக்கப்பட வேண்டும். தமிழக எல்லையில் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் சுண்ணாம்பு, பீனாயில் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி தக்க சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். பக்தர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வீசப்படும் குப்பைகளை உடனுக்குடன் சுத்தம் செய்வதற்கு சுழற்சி முறையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

    அவசர நிகழ்வுகளுக்காக சுகாதாரத்துறையின் மூலம் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பயிற்சி பெற்ற மீட்பு குழுவினர் தயார் நிலையில் பணியமர்த்தப்பட வேண்டும்.

    தமிழ்நாடு மற்றும் கேரளா வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை போலீசார் ஆகியோர் இணைந்து உரிய களப்பணி கள் மேற்கொண்டு முன்னே ற்பாடு பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

    இதில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீண் உமேஷ் டோங்கரே, துணை காவல் கண்காணி ப்பாளர் மதுகுமாரி, இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குரியாகோஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 2 நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இடைவிடாது பெய்த மழையினால் அணையின் நீர்மட்டம் 70 அடியை கடந்தது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53 அடி. வரத்து 280 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 395.37 மி.கன அடி.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் உள்ள வைகை அணை உள்ளது. இந்த அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது.

    தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் வைகை அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இதனால் அணையில் இருந்து முதல் மற்றும் 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    இருந்தபோதும் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தேனி மாவட்டத்தில் வெளுத்து வாங்கியது. இதனால் வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 4-ந்தேதி அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியபோது கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    அதன்பின்னர் 8-ந்தேதி அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    கடந்த 2 நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இடைவிடாது பெய்த மழையினால் அணையின் நீர்மட்டம் 70 அடியை கடந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70.31 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2596 கன அடி தண்ணீர் வருகிறது. நீர் இருப்பு 5908 மி.கன அடியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர்கள் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டனர். அதன்படி இன்று காலை முல்லைப்பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன நிலங்களுக்கு விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 45 நாட்களுக்கு 900 கன அடி வீதமும் அதன்பின்பு 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த அணை நீர் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 45041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர்கள் இ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் தண்ணீர் வெளியேறிய இடத்தில் விவசாயிகள் மலர்களைத்தூவி வழிபட்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர்கள் ஷஜீவனா (தேனி), சங்கீதா (மதுரை), பூங்கொடி (திண்டுக்கல்), எம்.எல்.ஏ.க்கள் மகாராஜன், வெங்கடேஷ், சரவணக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.10 அடியாக உள்ளது. வரத்து 1859 கன அடி. திறப்பு 105 கன அடி. இருப்பு 4504 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53 அடி. வரத்து 280 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 395.37 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.73 அடி. அணைக்கு வரும் 400 கன அடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருவதால் வராகநதிக்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    பெரியாறு 2, தேக்கடி 3.8, கூடலூர் 2.4, உத்தமபாளையம் 3.6, சண்முகாநதி அணை 2, போடி 72, வைகை அணை 32, மஞ்சளாறு 14, சோத்துப்பாறை 3, பெரியகுளம் 6, வீரபாண்டி 6.4, அரண்மனைபுதூர் 15.2, ஆண்டிபட்டி 23.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    தேனி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கும்பக்கரை, சுருளி, அணைப்பிள்ளையார் அருவிகளில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பு கருதி அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கள்ளக்காதலை கண்டித்ததால் வாலிபரை குத்தி கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
    • எஸ்.பி பிரிந்துரையின் பேரில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் டொம்பு சேரி கிழக்குதெருவை சேர்ந்தவர் ராஜா(33). இவர் கோவையில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவரது அண்ணன் மருத முத்துவின் மனைவிக்கும், டொம்புசேரியை சேர்ந்த பிரவீன்(24) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

    இதனை ராஜா கண்டித்து வந்துள்ளார். இருந்தபோதும் அவர்களது கள்ளத்தொடர்பு தொடர்ந்தது. இதனால் கடந்த 26.8.23-ந்தேதி ராஜாவுக்கும், பிரவீனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரவீன் கத்தியால் ராஜாவை குத்தி கொன்றார்.

    இதனையடுத்து பழனி செட்டிபட்டி போலீசார் பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பிரவீன் மீது குண்டர்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை கலெக்டர் ஏற்றுக்கொ ண்டதை தொடர்ந்து பிர வீன் குண்டர் தடுப்பு சட்ட த்தின்கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • கரையோரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • வேலப்பர் கோவிலை அடுத்துள்ள கூட்டாற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டத்தில் கடந்த 1 வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. தேனி மாவட்டத்துக்கு தற்போது மேலும் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் இடைவிடாது மழை கொட்டியதால் இன்று தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக வராக நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயமங்கலம், மேல்மங்கலம், வடுகபட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட வராகநதிக்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கரையோரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் நிலக்கடலை விவசாயம் செய்துள்ளார். நேற்று இரவு தனது தோட்டத்துக்கு காவலுக்கு சென்றார். அப்போது வேலப்பர் கோவிலை அடுத்துள்ள கூட்டாற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதில் முருகன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து ராஜதானி போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இரவு நேரமானதால் முருகனை மீட்க முடியவில்லை. இன்று காலை தடுப்பணையில் முருகன் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போடி மெட்டு மலைச்சாலையில் புலியூத்து அருவிக்கு கீழ் 7,8 வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது.
    • ஒரு மணிநேரத்திற்கு பிறகு தண்ணீர் வரத்து குறைந்ததால் மீண்டும் அந்த சாலை வழியாக வாகனங்கள் கடந்து சென்றன.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பிள்ளையார்கோவில் அருகில் உள்ள தடுப்பணையில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

    கொட்டக்குடி ஆற்றை கடந்து விவசாய நிலங்களுக்கு செல்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். மேலும் சிலர் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை போடிமெட்டு மலைச்சாலையை ஒட்டிய பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மலைச்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து அருவிபோல கொட்டியது.

    இந்த சாலையில் புலியூத்து அருவிக்கு கீழ் 7,8 வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது. இதனால் இப்பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. காட்டாற்று வெள்ளம் பாய்ந்த பகுதியை கடக்க முடியாமல் வாகன ஓட்டுனர்கள் ஆங்காங்கே தங்கள் வாகனங்களை நிறுத்தி இருந்தனர்.

    போடி முந்தல் சோதனைச்சாவடியில் வாகனங்களை நிறுத்துமாறு அவர்களை போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஒரு மணிநேரத்திற்கு பிறகு தண்ணீர் வரத்து குறைந்ததால் மீண்டும் அந்த சாலை வழியாக வாகனங்கள் கடந்து சென்றன.

    இதேபோல் கொடைக்கானலிலும் கடந்த 5 நாட்களுக்கு மேலாக பகல், இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் ஏரியில் படகுசவாரி முற்றிலும் நிறுத்தப்பட்டது. சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. கொடைக்கானல், செண்பகனூர், அப்சர்வேட்டரி, வில்பட்டி, பிரகாசபுரம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

    இதனால் வியாபாரிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இரவு நேரங்களில் பெரும்பாலான வீதிகளில் மக்களின் கூட்டம் அடியோடு குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

    • கண்காணிப்புக்குழு உத்தரவின்பேரில் பெங்களூரு நேசனல் இன்ஸ்டியூட் ஆப் ராக் மெக்கானிக்ஸ் குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.
    • இந்த ஆய்விற்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இதனைதொடர்ந்து இருமாநில தொழில்நுட்ப வல்லுநர்களையும் சேர்க்க அறிவுறுத்தியது. தற்போது இந்த ஐவர் குழுவின் தலைவராக மத்திய நீர்வளஆணைய தலைமை பொறியாளர் விஜயசரண் உள்ளார்.

    தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்சேனா, காவிரிதொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம், கேரளநீர்பாசனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் வேணு, நீர்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறி யாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.

    இவர்கள் கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர். கண்காணிப்புக்குழு உத்தரவின்பேரில் பெங்களூரு நேசனல் இன்ஸ்டியூட் ஆப் ராக் மெக்கானிக்ஸ் குழுவினர் தலைமை விஞ்ஞானி டாக்டர் ஸ்ரீபட்நாயக், விஞ்ஞானி பிரவீனாதாஸ், ஜெனிபர் ஆகியோர் தலைமையில் ஆய்வு செய்தனர்.

    நிலநடுக்க கருவி, அதிர்வு கருவிகள் ஆகியவற்றின் இயக்கம், கேலரி பகுதியில் கசிவுநீரை கண்காணிக்க வைக்கப்பட்டுள்ள வீநெட்ஜ் கருவிகளையும் ஆய்வு செய்தனர். மேலும் வானிலை கருவிகள் பயன்பாடுகள், மழைமானி அளவீட்டு கருவிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம்இர்வின் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    இந்த ஆய்விற்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், மத்திய நீர்வளஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை முல்லைபெரியாறு அணை பாதுகாப்பாகவும், திருப்திகரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    இந்தநிலையில் பெங்களூரை சேர்ந்த மத்திய சுரங்கத்துறை கீழ் வரும் தன்னாச்சிபெற்ற அமைப்பு இங்கு ஆய்வு நடத்தியது கண்டனத்துக்குரியதாகும். கோலார் தங்கவயலில் தங்கம் ேதாண்டி எடுக்கும் போது அதற்காக நிறுவப்பட்டது இந்த அமைப்பு. நாடு முழுவதும் சுரங்கம், நீர்மின்திட்டங்கள், அணுமின்திட்டங்கள், எரிவாயு சார்ந்த திட்டங்களுக்கு ஆலோசனையை வழங்கி வருகிறது.

    இவர்கள் திடீரென அணைப்பகுதிக்கு ஆய்வுக்கு வந்திருப்பதன் உள்நோக்கம் தெரியவில்லை. ஒவ்ெவாரு முறையும் அணையின் நீர்மட்டம் உயரும் போது இதுபோன்ற செயல்கள் அரங்கேறி வருகிறது. கேரள அரசு தொடர்ந்து நீர்மட்டத்தை உயர விடாமல் சதிதிட்டம் செய்கிறதோ என சந்தேகம் எழுகிறது.

    எனவே இதற்கு அதிகாரிகள் விளக்கம் அளிக்கவேண்டும். என்றார்.

    ×