search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • தீபாவளி நேரத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருவதால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
    • மின்ஊழியர்கள் மின்வெட்டை சீரமைத்து தரவேண்டும் என வணிகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் நகர்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான வணிகர்கள், தையல் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், சிறுதொழில் செய்பவர்கள் என ஏராளமானோர் உள்ளனர். தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க கடைவீதிக்கு வருகின்றனர். இதனால் வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருவதால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வணிகர்கள் தங்கள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும் வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொசுக்கடியால் தூக்கத்தை இழந்து அவதியடைந்து வருகின்றனர்.

    தினசரி 4 மணிநேரத்திற்கும் மேலாக மின்வெட்டு உள்ளது. இதுகுறித்து முறையான பதில் கிடைக்கவில்லை. எனவே மின்ஊழியர்கள் மின்வெட்டை சீரமைத்து தரவேண்டும் என வணிகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அகமலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 225 பயனாளிகளுக்கு ரூ.7.21 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • தொடர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்று ஏதும் ஏற்பட்டிருப்பின் சுகாதார நிலையத்தினை அணுகி உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என பேசினார்.

    தேனி:

    தேனி மாவட்டம், போடிஅருகே அகமலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 225 பயனாளிகளுக்கு ரூ.7.21 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி முன்னிலையில் வழங்கினார்.

    முகாமில் கலெக்டர் பேசியதாவது,

    அனைத்துத் துறை அலுவலர்களும் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கு தீர்வுகாணும் வகையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றது.

    பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகள் ஆரம்ப கல்வி, உயர்கல்வி, மேல்நிலை கல்வி பயில்வதில் உறுதியாக இருக்க வேண்டும். 3 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் ஆரம்ப கல்வி முறையினை கற்பதற்கும், சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்வதற்காகவும் அங்கன்வாடி மையத்தில் சேர்க்க வேண்டும்.

    குழந்தை திருமணங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சிறுவயதில் கர்ப்பம் அடைதல், குறைவான எடையில் குழந்தை பெற்றெடுத்தல் ஆகியவற்றை தவிர்க்க குறிப்பிட்டுள்ள 18 வயது பூர்த்தி அடைந்த பின்னர், பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் உறுதி கொள்ள வேண்டும்.

    பல்வேறு தொழில் கடன், வேலைவாய்ப்பு கடன், சுயதொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை வங்கிகளின் மூலம் பெற்றவர்கள் அதனை முறையாக குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தினால் வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

    மழைக்காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் நீர் நிலைகளை ஆக்கிரமித்து சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. முடிந்தவரை பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தற்பொழுது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். தொடர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்று ஏதும் ஏற்பட்டிருப்பின் சுகாதார நிலையத்தினை அணுகி உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என பேசினார்.

    • அணையில் இருந்து மதுரை குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5787 மி.கன அடியாக உள்ளது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 128.40 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணைக்கு கடந்த 1 வாரத்துக்கும் மேலாக பெய்த கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. அணையின் நீர் மட்டம் 67 அடியை எட்டியதும் முதல் எச்சரிக்கையும், 68 அடியை எட்டியதும் 2-ம் எச்சரிக்கையும் விடப்பட்ட நிலையில் நேற்று 69 அடியை நெருங்கியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    வழக்கமாக அணையின் நீர் மட்டம் 69 அடியை எட்டியதும், அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்து விடப்படும். ஆனால் மதுரை மாவட்டம் மேலூர், பேரணை, கள்ளந்திரி பகுதி பாசனத்துக்காக நாளை (10-ந்தேதி) முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

    இதன் காரணமாக உபரி நீரை வெளியேற்றாமல் நீர் மட்டத்தை அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 69.85 அடியாக உள்ளது. வரத்து 2705 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5787 மி.கன அடியாக உள்ளது.

    அணையின் நீர் மட்டம் 70 அடியை எட்டியுள்ளதால் இன்று எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் திறக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் 7 மதகுகள் வழியாக வெளியேற்றப்படும். ஏற்கனவே வைகை கரையோரமுள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கரையோரம் உள்ள பாதுகாப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 128.40 அடியாக உள்ளது. வரத்து 2230 கன அடி. திறப்பு 105 கன அடி. இருப்பு 4352 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 52.20 அடி, வரத்து 232 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 379 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 127 அடி. அணைக்கு வரும் 243 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கனஅடியாக உள்ளது.

    பெரியாறு 7, தேக்கடி 14.2, கூடலூர் 8.4, உத்தமபாளையம் 7.8, சண்முகாநதி அணை 21.6, போடி 22, வைகை அணை 25.6, மஞ்சளாறு 32, சோத்துப்பாறை 32, பெரியகுளம் 21, வீரபாண்டி 42.5, அரண்மனைப்புதூர் 23.2, ஆண்டிபட்டி 76.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன.
    • போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து வீட்டில் ஏதேனும் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தினர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வரப்பட்டு தேனி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுவதுடன் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் கடத்திச்செல்லப்படுகிறது.

    இதனைதடுக்க மாவட்ட எஸ்.பி பிரவீன்உமேஷ் டோங்கரே தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா வியாபாரிகளிடமிருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்களின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    மேலும் கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு எஸ்.பி தனிப்படை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ஆண்டிபட்டி சப்-இன்ஸ்பெக்டர் சவரியம்மாள்தேவி தலைமையிலான போலீசார் மறவபட்டி செல்லும் மெயின்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது மணியகாரன்பட்டி கிழக்குதெருவை சேர்ந்த முருகன்(54), அதே ஊரை சேர்ந்த செல்லபாண்டி(35), அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் ஒரு ஆட்டோவில் ஆந்திராவில் இருந்து வாங்கி வந்த 4.200 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து வீட்டில் ஏதேனும் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தினர்.

    அப்போது வீட்டிற்குள் 12 மோட்டார் சைக்கிள்கள், 2 ஆட்டோக்கள், 31 ஆன்ட்ராய்டு செல்போன்கள், 2 சாதா வகை செல்போன்கள், 2 டேப்லட் செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கஞ்சா விற்பனையில் வைத்திருந்த ரூ.42 ஆயிரம் பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

    இந்த வாகனங்களை கஞ்சா வியாபாரிகள் அடகில் வாங்கி வைத்திருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் இந்த வாகனங்கள் அனைத்தும் கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் ஒரு லாரியில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    கைதான 3 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் தயார் படுத்தி வருகின்றனர்.

    • தூய்மை பணியாளர்கள் சம்பளம் வழங்கினால் மட்டுமே பணிகளை மேற்கொள்வோம் என திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் பெரியகுளம் நகராட்சியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் நகராட்சியில் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தபணியாளர்களாக 60 பேர் நியமனம் செய்யப்பட்டு பெரியகுளம் நகர் பகுதியில் தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வில்லை. இது குறித்து பலமுறை அவர்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை. இதனால் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். சம்பளம் வழங்கினால் மட்டுமே தூய்மை பணிகளை மேற்கொள்வோம் என அவர்கள் கோஷமிட்டனர்.

    இதனால் அங்கு பரபர ப்பான சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததால் தூய்மை பணி யாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று 64-வது ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
    • மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தில் பகவதியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று 64-வது ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

    இந்த மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. மாடுகளையும், மாட்டு வண்டியை ஓட்டிச்சென்ற சாரதிகளையும் உற்சாகப்படுத்தும் வகையில் சாலையின் இருபுறமும் ஏராளமானோர் நின்று கைதட்டி ஆராவாரம் செய்தனர்.

    இந்த பந்தயத்தில் தேன்சிட்டு, பூஞ்சிட்டு, நடுமாடு, கரிச்சான்மாடு, பெரியமாடு என 5 வகையான பிரிவுகளில் 70-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு சாலையில் 8 கி.மீ தூரம் இந்த பந்தயம் நடைபெற்றது.

    • பெரியகுளம் தென்கரை போலீசார் கைலாசபட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
    • சோதனையில் கஞ்சா விற்றவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் தென்கரை போலீசார் கைலாசபட்டி பகுதியில் ரோந்து சென்ற னர். அப்போது அங்கு கஞ்சா விற்ற நாகராஜபிரபு (23), முருகேசன் (29), சிவதேசிங்கு (25), கவிதா (39) ஆகிய 4 பேரை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    ஆண்டிபட்டி அருகே கொண்டம நாயக்க ன்பட்டி யை சேர்ந்தவர் சரவணன் (38). இவர் தொப்பம்பட்டி முத்தாலம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார். ரோந்து சென்ற ராஜதானி போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் அமர்மேக்தே (24). இவர் தேனி மாவட்டம் குள்ளப்புரத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். க.விலக்கு அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தபோது வாலிபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் சின்னவேலு மகன் காவியா (14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவ த்தன்று பள்ளிக்கு செல்ல வில்லை. யாருடனும் பேசா மல் இருந்த அவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகே அல்லிநகரத்தை சேர்ந்தவர் மணி மனைவி அய்யம்மாள் (வயது45). கடன் தொல்லை யால் மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் அரளி விதையை அரைத்து குடித்து மயங்கிய அய்ய ம்மாளை தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தேனி அல்லிநகரம் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    போடியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் கார்த்திக் (35). பெற்றோரை இழந்ததால் சற்று மனநிைல பாதிக்கப்பட்டார். அவரது உறவினர் மருந்து மாத்திரை வாங்கி கொடுத்து பரா மரித்து வந்தார். இந்த நிலையில் விஷம் குடித்து கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்னர்.

    • தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • வார்டு பகுதியில் அடிப்படை பணிகள் எதுவும் இதுவரை நடக்கவில்லை என்றும் மாதந்தோறும் நகராட்சி கூட்டம் நடத்தவில்லை என்பதை கண்டித்து கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    தேனி:

    தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற கூட்டம் தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. துணைத்த லைவர் செல்வம், நகராட்சி ஆணையாளர் (பொ) பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் பால முருகன், கடவுள், நாராயண பாண்டியன், விஜயன், ராஜ்குமார், தினேஷ்குமார், மணிகண்டன், சந்திரமோகன், கிருஷ்ண குமாரி, ஆனந்தி, சரஸ்வதி, சங்கீதா மற்றும் சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், நகர அமைப்பு அலுவலர் சலார் அப்துல் நாசர் உள்பட கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர் நாகராஜ், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படு த்தாத வகையில் காலதாமதம் இன்றி வரிகளை விதிக்க பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    அதுபோல கவுன்சிலர்கள் நாராயண பாண்டியன், ராஜ்குமார் மற்றும் பெரு ம்பாலான கவுன்சிலர்கள் பேசுகையில், தேனி நகரில் உள்ள வாரச்சந்தை குத்தகை ஏலம் குறைந்த தொகைக்கு ஏலம் போயிருப்பதால் அந்த தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சங்கீதா, சரஸ்வதி, கிருஷ்ணபிரபா, பாப்பா, கிருஷ்ணவேணி மற்றும் பா.ஜ.க கவுன்சிலர் ஆனந்தி ஆகியோர் வார்டு பகுதியில் அடிப்படை பணிகள் எதுவும் இதுவரை நடக்கவில்லை என்றும் மாதந்தோறும் நகராட்சி கூட்டம் நடத்தவில்லை என்பதை கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இதனை அடுத்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடிப்படை பணிகளை நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ள வேண்டுமென பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் நகராட்சி துணைத்தலைவர் செல்வம் மற்றும் நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பாலமுருகன், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நகராட்சி பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 3 பேரை கத்தியால் குத்திய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் போடி தாலுகாவிற்கு உட்பட்ட புதூரை சேர்ந்தவர் அறிவழகன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது முளைப்பாரி எடுத்துச் சென்ற பெண்களை மது போதையில் கேலி செய்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவா மற்றும் அவரது நண்பர்களான கண்ணன், ராமன் ஆகிய 3 பேரும் ரகளையில் ஈடுபட்ட அறிவழகனை தடுத்து நிறுத்தி தட்டி கேட்டுள்ளனர். இதனால் அறிவழகனுக்கும் சிவா மற்றும் அவரது நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் சிவா மற்றும் அவரது நண்பர்களான கண்ணன் மற்றும் ராமன் ஆகிய 3 ேபரையும் அறிவழகன் கத்தியால் குத்தியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதனைத் தொடர்ந்து காயமடைந்த 3 பேரும் போடி தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு நிறைவுற்று அறிவழகன் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு 3 பேரையும் கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிபதி சுரேஷ் தீர்ப்பு வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து அறிவழகன் மதுரை மத்திய சிறையில் அடைக்க ப்பட்டார்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கூடலூர்

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த 1 வாரத்துக்கும் மேலாக தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது.

    நேற்று மாலை 6 மணிக்கு அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக இருந்த நிலையில் இன்று காலையில் அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து 3 முறை சங்குகள் ஒலிக்கப்பட்டு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 2693 கன அடி நீர் வருகிறது. தற்போது அணையில் இருந்து 69 கன அடி மட்டும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5562 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியவுடன் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும்.

    இதன் காரணமாக வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே கரையோரம் இருந்த மக்கள் அகற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அணையில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டால் வெள்ளப்பெருக்கு உருவாகும் என்பதால் கால்நடைகளையும் அங்கிருந்து அகற்றுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். 

    கனமழை காரணமாக வருசநாடு அருகே உள்ள மேகமலை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.

    கனமழை காரணமாக வருசநாடு அருகே உள்ள மேகமலை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.

    இதே போல் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 126.85 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 127.55 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1855 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீர் தேவைக்காக மட்டும் 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4169 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.60 அடியாக உள்ளது. வரத்து 122 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 368.39 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.67 அடியிலேயே நிற்கிறது. இதனால் அணைக்கு வரும் 299 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    தொடர்மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் இன்று 6-ம் நாளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் சுருளி அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அணைப்பிள்ளையார் அருவி, மேகமலை அருவியிலும் தண்ணீர் அதிக அளவு செல்வதால் அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மழை பெய்வதால் மலைச்சாலையில் விபத்து ஏற்படுவதைத் தடுக்க வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

    பெரியாறு 1, கூடலூர் 11.4, உத்தமபாளையம் 6.2, சண்முகாநதி அணை 14, போடி 2.3, வைகை அணை 30.4, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 10, பெரியகுளம் 12, வீரபாண்டி 3.8, அரண்மனைப்புதூர் 26.8, ஆண்டிபட்டி 3 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • கம்பத்தில் பிரசித்திபெற்ற பகவதியம்மன் கோவில் திருவிழாவில் மஞ்சள் நீராடல் நடந்தது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

    கம்பம்:

    கம்பத்தில் பிரசித்திபெற்ற பகவதியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் காமுகுல ஒக்கலிகர்(காப்பு) சமுதாய த்தின் சார்பில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 15 நாட்க ளுக்கு முன்பு சாற்றுதலுடன் விழா தொடங்கியது.

    இன்று மஞ்சள்நீராட்டு விழா நடைபெற்றது. விழாக்குழுவினர் மாலை மரியாதையுடன் ஊர்வல மாக அழைத்து வரப்பட்ட னர். நூற்றுக்கணக்கான டிரம்களில் மஞ்சள் பொடி கலந்த தண்ணீர் நிரப்பப்பட்டு மஞ்சள் நீராட்டு ஊர்வலம் நடந்தது.

    கம்பம் பார்க் திடலில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. விழாவில் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு மஞ்சள் நீரை ஊற்றினார்.இன்று மாலை பகவதியம்மன் அழைப்பு, மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நாளை முளைப்பாரி ஊர்வலம் மற்றும் வண்டி வேசம் ஆகியவை நடைபெறுகிறது.

    ×