search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் டி.கே.டி. மில் நால்ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்
    X

    போக்குவரத்து நெரிசலை சீர் செய்த ஆட்டோ டிரைவர்கள். 

    திருப்பூர் டி.கே.டி. மில் நால்ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்

    • பனியன் நிறுவனங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதி.
    • நான்கு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    வீரபாண்டி :

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் டி.கே.டி. மில் பஸ் ஸ்டாப்பில் நால்ரோடு சந்திப்பு உள்ளது. பனியன் நிறுவனங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் நால்ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் நிறைந்து எந்நேரமும் பரபரப்பாக காணப்படும்.

    இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:- நால்ரோட்டில் எப்பொழுதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று காலை முதல் மதியம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எரிவாயு குழாய் பதிக்க நால்ரோட்டில் மீண்டும் குழி தோண்டி உள்ளார்கள். இரவில் பணி செய்ய வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்த நிலையில் நேற்று பகலிலே எரிவாயு குழாய் பதிக்க குழி தோண்டியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நான்கு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.மேலும் ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கி கொண்டது. எரிவாயு குழாய் பதிக்க பகலிலே தோண்டியதாலும் புதிதாக சிக்னல் அமைக்கப்பட்டு 6மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் செயல்படுவதில்லை.

    ஏற்கனவே நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில் இவை மேலும் கூடுதல் நெரிசலை ஏற்படுத்துகிறது. நான்கு பக்கமும் இருந்து வாகனங்கள் தாறுமாறாக வருவதால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து போலீஸ் ஆகவே மாறிவிட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக போக்குவரத்து போலீசாரை நியமிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை இரவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×