search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி அருகே டாஸ்மாக் பாரில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை
    X

    திருச்சி அருகே டாஸ்மாக் பாரில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

    • வீ.துறையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாபுவுடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.
    • தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாபுவை சரமாரியாக வெட்டினர்.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூைர அடுத்த சமயபுரம் அருகேயுள்ள சேனியகல்லுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் பாபு (வயது 28). மலேசியாவில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு கொரோனா பெருந்தொற்று காலத்தில் அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்தார்.

    மீண்டும் மலேசியா செல்ல விரும்பாத அவர் திருமணம் செய்துகொண்டு சமயபுரம் கோவில் பகுதியில் உள்ள ஒரு கடையில் பூக்கள் கட்டி விற்பனை செய்தல், கிடைத்த கூலி வேலைக்கு செல்லுதல் என்று பிழைப்பு நடத்தி வந்தார்.

    இதற்கிடையே கோவிலில் உள்ள சிலரிடம் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு வெளியூர்களில் வருகை தரும் பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் அனுப்பி வைப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார்.

    இதன் மூலம் திருவிழா காலங்களில் பாபுவுக்கு அதிக அளவில் வருமானம் கிடைத்தது. அதே வேளையில் அருகிலுள்ள வீ.துறையூர் கிராமத்தை சேர்ந்த சிலருக்கும், பாபுவுக்கும் சமயபுரம் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு தரிசனத்துக்கு அனுப்பி வைப்பதில் முன்விரோதம் இருந்து வந்தது.

    தினமும் பணி முடிந்ததும் பாபு சமயபுரம் நால் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசுக்கு சொந்தமான இரண்டு டாஸ்மாக் கடைகளுக்கு செல்வது வழக்கம். இந்த இரண்டு கடைகளிலும் பார் இயங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு பாபு அங்குள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது, சமயபுரம் அருகே உள்ள வீ. துறையூரை சேர்ந்த சிலர் அங்கே மது அருந்தி கொண்டிருந்தனர்.

    பின்னர் பாபு டாஸ்மாக் பாரில் இருந்து பாபு வீட்டுக்கு புறப்பட தயாரானார். அப்போது வீ.துறையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாபுவுடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். இந்த தகராறு ஒரு சில விநாடிகளில் மோதலாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பை சேர்ந்தவர் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாபுவை சரமாரியாக வெட்டினர். இதனை சற்றும் எதிர்பாராத பாபு பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைப்பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். உடனே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாபுவை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பாபுவிற்கும், கொலையாளிகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை கோவிலுக்குள் அழைத்துச் செல்வதில் விரோதம் இருந்தது உறுதியானது.

    தங்களுக்கு வருமானம் குறைந்ததால் பாபுவை கொலை செய்ய திட்டமிட்டு அதனை டாஸ்மாக் பாரில் வைத்து அரங்கேற்றி இருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    அதேபோல் வெளியூரிலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களிடம் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாலும் அந்த பகுதியில் அடிக்கடி தகராறு, மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு மதுவிற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×