search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளங்கோவன், கார்த்தி கருத்துக்களால் காங்கிரசுக்குள் வெடித்த மோதல்
    X

    இளங்கோவன், கார்த்தி கருத்துக்களால் காங்கிரசுக்குள் வெடித்த மோதல்

    • கார்த்தி சிதம்பரம் கூட்டணிக்கு வேட்டு வைக்கப் பார்க்கிறார்.
    • மோதல் சமூக வலைத்தளங்களில் விசுவரூபம் எடுத்து வருகிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரசுக்குள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கார்த்தி ப.சிதம்பரம் ஆகியோரது கருத்துக்களால் மோதல் வெடித்துள்ளது. இருவருக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளதால் கட்சியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    புதுக்கோட்டையில் நடந்த காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்தில் கார்த்தி ப. சிதம்பரம் எம்.பி. பேசிய போது, கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக எந்த பிரச்சனையையும் கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது. மக்கள் பிரச்சனைகளை சுட்டிக் காட்ட வேண்டும். தேர்தலுக்காகத் தான் கூட்டணி. நமது பலத்தையும் நாம் நிரூபிக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதிலடி கொடுத்து முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறும்போது, `தி.மு.க. கூட்டணி இல்லாவிட்டால் கார்த்தி ப.சிதம்பரத்தால் டெபாசிட் கூட வாங்கி இருக்க முடியாது.

    தேர்தலுக்கு முன்பு தனது கருத்தை சொல்லி இருக்க வேண்டியதுதானே? உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தொண்டர்கள் சிலருக்கு பதவி கிடைப்பதை தடுக்க பார்க்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

    இளங்கோவன் கட்சியை அடகு வைக்க பார்க்கிறார் என்றும் கார்த்தி ப. சிதம்பரம் கூட்டணிக்கு வேட்டு வைக்கப் பார்க்கிறார் என்றும் தொண்டர்கள் காரசாரமாக விமர்சிக்கிறார்கள்.

    இந்த மோதல் சமூக வலைத்தளங்களில் விசுவ ரூபம் எடுத்து வருகிறது. மாறி மாறி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    இந்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்களால் காங்கிரசில் பரபரப்பு நிலவுகிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளரும், மாநில துணை தலைவருமான பொன். கிருஷ்ணமூர்த்தி கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கிறார். அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளை வழங்கியபோது கூடுதலாக தாருங்கள் என கார்த்தி சிதம்பரம் ஏன் கேட்க வில்லை?

    நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கவில்லை என்று கூறும் கார்த்தி சிதம்பரம் முதல்வரை சந்தித்து வலியுறுத்தி இருக்கலாமே.

    ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்து கொண்டு எதிர்கட்சி தலைவர் அண்ணாமலை கேட்கும் கேள்விகளை கார்த்தி கேட்பதில் லாபம் என்ன? காமராஜர் ஆட்சி அமைப் போம் என ஒரு வார்த்தை பேசிவிட்டு, கூட்டணி கட்சியை விமர்சித்து விட்டு மேடையை விட்டு இறங்கினால் காமராஜர் ஆட்சி அமைந்து விடுமா? காங்கிரஸ்தான் வளர்ந்து விடுமா? தி.மு.க. கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வகையில் பேசி வரும் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதேபோல் இளங்கோவன் ஆதரவாளரான மயிலை அசோக் கூறும்போது, கூட்டணி என்பதை விட நம் வலிமை என்ன என்பதையும் நாம் உணர வேண்டும். இளங்கோவனை இழிவாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

    காங்கிரஸ் பொது செயலாளர்களில் ஒருவரான விஜய இளஞ்செழியன் கூறியதாவது:-

    எங்கள் கூட்டணியில் தி.மு.க.தான் பெரிய கட்சி என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அவர்கள் துணையோடுதான் வெற்றியும் பெற்றோம் என்பது உண்மை என்பதை சுட்டிக் காட்டிய கார்த்தி சிதம்பரம் அதே நேரம் இந்த வெற்றிக்கு காங்கிரசின் பங்களிப்பும் முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது.

    பா.ஜ.க.வுக்கு எதிராக சிறுபான்மையினரின் வாக்குகளை திரட்டிக் கொடுத்தது காங்கிரஸ் என்பதை மறுக்க முடியுமா? என்பதைதான் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கார்த்தி சிதம்பரம் பேசினார். அவர் பொதுக் கூட்டத்தில் பேசவில்லை. இந்த கருத்துக்களை ஊழியர்கள் கூட்டத்தில் பேசாமல் எங்கு பேசுவது? இந்த யதார்த்த நிலவரங்களை சொன்னால்தானே தொண்டர்கள் உற்சாகம் அடைவார்கள்.

    தி.மு.க.வினர் காங்கிரசாரை மதிப்பதில்லை என்ற ஆதங்கம் எப்போதுமே இருப்பதுதான். 2021 சட்ட மன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசச் சென்ற கே.எஸ். அழகிரி அறிவாலய வாசலிலேயே கண் கலங்கியது மறந்து விட்டதா?

    தி.மு.க.வினர் மதிக்கவில்லை என்று தொண்டர்கள் மத்தியிலும் கண்கலங்கினாரே. அவ்வளவு ஏன், இதே இளங்கோவன் பொறுப்பில் இருந்தபோது நாங்கள் சந்தைமடமா நடத்துகிறோம். ஆட்சியில் பங்கு கேட்க எங்களுக்கு உரிமை இல்லையா என்று கேட்டவர்தானே.

    இப்போது கார்த்தி சிதம்பரம் என்ன சொல்கிறார்? நாங்கள் எம்.பி., எம்.எல்.ஏ. ஆகிவிட்டோம். உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசை கை விட்டு விடக்கூடாது. கூடுதல் இடங்கள் கேட்டு வாங்க வேண்டும். தொண்டர்கள் நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். அதற்கு நாம் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். நமது பலத்தை கூட்ட வேண்டும் என்று தானே கூறுகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது?

    காங்கிரசை வளர்க்கவும் கூடாது. உரிமைகளை கேட் கவும் கூடாது என்று நினைக்கும் இளங்கோவனை போன்றவர்களால்தான் தருவதை பெறும் நிலையில் காங்கிரஸ் இருக்கிறது என்றார்.

    காங்கிரஸ் துணைத் தலைவர் இமயா கக்கன் கூறியதாவது:-

    டெபாசிட் வாங்க முடியாது என்றால் என்ன காரணம்? கட்சி பலமில்லை என்பது தானே. எனவே கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற கார்த்தியின் கருத்திலும் தப்பில்லை.

    கூட்டணியை கலந்துதான் பல செயல்கள் செய்ய வேண்டி இருப்பதால் கட்சியை வளர்ப்பதில் தொய்வு ஏற்படுகிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணிக்கு கை கொடுப்போம். அது லட்சியத்தை அடைய உதவும். மற்ற நேரங்களில் காங்கிரசை வளர்க்க வேண்டும். பலப்படுத்த வேண்டும்.

    2014 தேர்தலில் தனித்து நின்ற தி.மு.க.வும் வெற்றி பெற முடியவில்லை. காங்கிரசும் வெற்றி பெற முடியவில்லை. இதுதான் கட்சிகளின் நிலை என்பதை மறந்து விடக்கூடாது.

    Next Story
    ×