search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்நிலை பாதுகாப்பு பணிகள் தீவிரம்- பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம்
    X

    நீர்நிலை பாதுகாப்பு பணிகள் தீவிரம்- பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம்

    • ‘பயோ மைனிங்’ முறையில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது.
    • பொது இடத்தில் குப்பைகளை தீ வைத்து எரித்தாலும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன.

    இந்த 2 இடங்களிலும் கடந்த 20 ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அங்கு மலைபோல் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு அபாயமும் உருவானது.

    இதற்கு தீர்வுகாணும் வகையில் 'பயோ மைனிங்' முறையில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. பெருங்குடியில் 34.02 லட்சம் கனமீட்டர் அளவில் குப்பைகள் குவிந்துள்ளன. இது ரூ.350.65 கோடியில் 'பயோ மைனிங்' முறையில் தரம் பிரிக்கப்படுகிறது.

    கொடுங்கையூரில் 350 ஏக்கர் பரப்பளவில் 70 லட்சம் கனமீட்டர் அளவில் குப்பைகள் குவிந்துள்ளன. இங்கு ரூ.700 கோடி செலவில் குப்பைகள் தரம் பிரிக்கப்படுகிறது. இதனால் சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் இங்கு நேரடியாக கட்டிட கழிவுகளை கொட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன்காரணமாக சென்னையில் பெரும்பாலானோர் நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள், கால்வாய்களில் கட்டிட கழிவுகளை கொட்டுகிறார்கள். இதனால் நீர்நிலைகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் சாலை ஓரங்களில் கொட்டுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.

    இந்நிலையில் சென்னையில் நீர்நிலைகள், நீர் வழித் தடங்களான ஆறுகள், கால்வாய்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.

    இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில் சென்னையில் நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் அதிகபட்சமாக ரூ.5000 வரை அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. 1 டன்னுக்கு மேல் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். 1 டன் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    பொது நிகழ்ச்சி நடத்தி சுத்தம் செய்யாமல் இருத்தல், பெரு நிறுவனங்கள் குப்பையை தரம் பிரிக்காமல் போடுதல் ஆகியவற்றுக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    மீன், இறைச்சி கழிவுகளை பொது இடத்தில் கொட்டினாலும், பொது இடத்தில் குப்பைகளை தீ வைத்து எரித்தாலும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட உள்ளது.

    மேலும் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினால் போலீசார் வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை எடுப்பார்கள், வாகனங்களும் சிறைபிடிக்கப்படும். இந்த நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து எடுப்பார்கள்.

    மேலும் நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக சென்னையில் கட்டிட கழிவுகளை கொட்ட மண்டல வாரியாக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 15 மண்டலங்களிலும் இதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அந்தந்த வார்டு என்ஜினீயர்கள் அனுமதியுடன் பொதுமக்கள் கட்டிட கழிவுகளை கொட்ட வேண்டும்.

    இந்த விதிகளை மீறுவோர் மீது போலீசார் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்வார்கள் என்றும் மாநகராட்சி கூறியுள்ளது.

    Next Story
    ×