search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    150 பெண்களின் நிர்வாண புகைப்படத்தை உருவாக்கிய 3 வாலிபர்கள் கைது
    X

    150 பெண்களின் நிர்வாண புகைப்படத்தை உருவாக்கிய 3 வாலிபர்கள் கைது

    • புகைப்படங்களை ஏ-ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண படங்களை உருவாக்கி இருக்கின்றனர்.
    • சிபின் லூகோஸ் மற்றும் அவரது நண்பர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது

    திருவனந்தபுரம்:

    செயற்கை நுண்ணறிவு (ஏ-ஐ தொழில்நுட்பம்) என்பது வளர்ந்துவரும் தொழில் நுட்பங்களில் ஒன்றாகும். மனிதனுக்கும் இயந்திரத்துக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு படைப்பாக்க திறன்.

    இந்த படைப்பாக்க திறன் கம்ப்யூட்டர் உள்ளிட்ட இயந்திரங்கள் மூலமாக சாத்தியப்படுமென்றால் அதுவே செயற்கை நுண்ணறிவு (ஏ-ஐ தொழில் நுட்பம்) என்று அழைக்கப்படுகின்றது. இந்த தொழில்நுட்பம் மூலமாக பல நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் இருக்கின்றன.

    ஏ-ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தயார் செய்து சமூக வலை தளங்களில் பதிவிடும் செயல்கள் சமீபகாலமாக அதிகளவில் நடக்கின்றன. சில புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பார்க்க ரசிப்பது போன்று இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு பிரச்சனையாகி விடுகிறது.

    கேரள மாநிலத்தில் ஏ-ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளம்பெண்களின் நிர்வாண படங்களை 3 வாலிபர்கள உருவாக்கியுள்ளனர். அவ்வாறு உருவாக்கிய நிர்வாண படங்களை இன்ஸ்டா கிராமில் பதிவிட்டு நண்பர்களை பார்க்க வைத்துள்ளனர். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் காசர் கோடு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிபின் லூகோஸ்(வயது21), ஐஸ்டின் ஜேக்கப்(21), எபின் டாம் ஜோசப்(18). நண்பர்களான இவர்கள் 3 பேரும் டிஜிட்டல் கேமராக்களை பயன்படுத்தி தங்களின் கிராமத்தை சேர்ந்த பெண்களின் புகைப்படங்களை பல்வேறு கோணங்களில் எடுத்திருக்கின்றனர்.

    குறிப்பாக கிராம பெண்கள் அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்று வரும்போதும், அங்குள்ள மலையில் பெண்கள் ஊர்வலமாக செல்லும்போதும் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்.

    பின்பு அவர்களின் புகைப்படங்களை ஏ-ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண படங்களை உருவாக்கி இருக்கின்றனர். அவ்வாறு உருவாக்கிய நிர்வாண படங்களை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

    அந்த நிர்வாண படங்களை இன்ஸ்டாகிராம் கணக்கில் உள்ள அவர்களது உறுப்பினர்கள் மட்டும் பார்க்க முடியும். இதனால் அந்த படங்களை வாலிபர்களின் நண்பர்கள் பார்த்து ரசித்திருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிபின் லூகோசின் வீட்டுக்கு அவரது கிராமத்தை சேர்ந்த நண்பர் ஒருவர் சென்றிருக்கிறார்.

    அப்போது சிபினின் செல்போனை அவர் பார்த்திருக்கிறார். அதில் ஏராளமான இளம் பெண்களின் நிர்வாண படங்கள் இருந்ததை பார்த்தார். மேலும் அவரது உறவுக்கார பெண்களின் நிர்வாண படங்களும் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவற்றை தனது செல்போன் மற்றும் தனது உறவினர்கள் சிலரது போனுக்கு சிபின் லூகோசினுக்கு தெரியாமல் அனுப்பினார்.

    நிர்வாண படங்கள் குறித்து சிபின் லூகோசிடம் நைசாக கேட்டார். அப்போது ஏ-ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பெண்களின் நிர்வாண படங்களை நண்பர்கள் இருவடன் சேர்ந்து உருவாக்கியதாக சிபின் லூகோஸ் தெரிவித்திருக்கிறார். அதனைக்கேட்ட அவர் சிபின் லூகோசை கண்டித்திருக்கிறார்.

    இதையடுத்து சிபின் லூகோஸ் மற்றும் அவரது நண்பர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சிபின் லூகோஸ், ஐஸ்டின் ஜேக்கப், எபின் டாம் ஜோசப் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது ஏராளமான இளம்பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இருந்தன. இதையடுத்து 3 பேரின் செல்போன்களையும் தடயவியல் பரிசோதனைக்கு சைபர் கிரைம் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    கைது செய்யப்பட்ட வாலிபர்கள் 3 பேரும் ஏ-ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தங்களது கிராமத்தை சேர்ந்தவர்கள், பள்ளி தோழிகள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் நிர்வாண படங்களை உருவாக்கியிருப்பது போலீசாரின விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அவர்கள் இளம்பெண்களின் நிர்வாண படங்களை உருவாக்கி பார்த்து ரசிக்க மட்டும் செய்தார்களா? அல்லது வேறு யாருக்கும் அனுப்பி விற்பனை செய்தார்களா? என்று விசாரண நடத்தப்பட்டு வருகிறது.

    சொந்த கிராம பெண்கள், உடன் படித்த தோழிகள் உள்ளிட்டவர்களின் நிர்வாண படங்களை வாலிபர்கள் உருவாக்கி பரப்பிய விவகாரம் அவர்களது கிராம மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

    Next Story
    ×