search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சித்தராமையா பதவி விலக கோரி பாஜக-மதசார்பற்ற ஜனதா தளம் நடைபயணம்
    X

    சித்தராமையா பதவி விலக கோரி பாஜக-மதசார்பற்ற ஜனதா தளம் நடைபயணம்

    • மூடா ஊழல் கர்நாடக அரசியலில் விசுவரூபம் எடுத்து உள்ளது.
    • வால்மீகி முறைகேடு தொடர்பாக அமைச்சராக இருந்த நாகேந்திர கவுடா பதவி விலகினார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் வால்மீகி வளர்ச்சி வாரியம், மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) முறைகேடுகள் நடந்து உள்ளது. கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதி, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் சட்டவிரோதமாக 14 வீட்டுமனைகளை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    வால்மீகி முறைகேடு தொடர்பாக அமைச்சராக இருந்த நாகேந்திர கவுடா பதவி விலகினார். மேலும் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில் மூடா ஊழல் கர்நாடக அரசியலில் விசுவரூபம் எடுத்து உள்ளது.

    இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஆப்ரகாம் என்பவர் அளித்த புகாரின் பேரில், கவர்னர் தாவர்சந்த் கெலாட், இந்த முறைகேடு புகாரில் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என கேள்வி எழுப்பி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கவர்னர் நோட்டீசு அனுப்பியதை கண்டித்தும், இந்த நோட்டீசை திரும்ப பெற வலியுறுத்தியும் மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் பற்றி கவர்னருக்கு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.


    இந்த விவகாரத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையாவுக்கு எதிராக விசாரணை நடத்த முடிவு எடுப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. அதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

    இதற்கிடையே மூடா ஊழல் தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா பதவி விலக கோரி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் இன்று முதல் நடைபயணம் தொடங்கப்படும் என்று அறிவித்தனர். அதன்படி இன்று கெங்கேரியில் நடைபயணம் தொடங்கியது. இதில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் ஊர்வலமாக சென்றனர். கெங்கேரியில் தொடங்கிய நடைபயணம் இன்று 16 கி.மீட்டர் தூரம் நடைபெறுகிறது. நாளை (4-ந் தேதி) பிடாதியில் உள்ள மஞ்சுநாதா கன்வென்ஷன் ஹாலில் தொடங்கி 22 கி.மீட்டர் வரை நடக்கிறது. தொடர்ந்து 5-ந் தேதி கெங்கல் கே.வி.கே. கன்வென்ஷன் ஹாலில் இருந்து 20 கி.மீட்டர் தூரமும், 6-ந் தேதி நிடகட்டா சுமித்ராதேவி மாநாட்டு அரங்கில் இருந்து 20 கி.மீட்டரும், 7-ந் தேதி மாண்டியாவில் உள்ள சஷிகிரண் கன்வென்ஷன் ஹாலில் இருந்து 16 கி.மீட்டரும், 8-ந் தேதி துபினகரே தொழிற்பேட்டை அருகே இருந்தும், ஆகஸ்டு 9-ந் தேதி ஸ்ரீரங்கத்தில் உள்ள மஞ்சுநாதா கல்யாண மண்டப வளாகத்தில் இருந்தும் நடைபயணம் தொடங்குகிறது. 10-ந் தேதி இந்த நடைபயணம் மைசூரு சென்றடைகிறது. சுமார் 140 கி.மீட்டர் தூரம் இந்த நடைபயணம் நடக்கிறது. பின்னர் மைசூருவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளனர். எதிர் கட்சிகளின் இந்த போராட்டத்தால் கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

    Next Story
    ×