search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தி.மு.க.வின் செயல்பாடுகளை பின்பற்ற சந்திரசேகர ராவ் முடிவு
    X

    தி.மு.க.வின் செயல்பாடுகளை பின்பற்ற சந்திரசேகர ராவ் முடிவு

    • தமிழகத்தில் தி.மு.க. ஆழமான கட்டமைப்பை பெற்றுள்ளது.
    • சந்திரசேகர ராவ் பின்னடைவை சந்திப்பதால் அவருடைய கட்சி நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போகிறது.


    தெலுங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்த பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து ஆட்சியை பறி கொடுத்தார்.

    அதற்கு பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்தார். பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி தனித்துப் போட்டியிட்ட சந்திரசேகரராவ் கட்சிக்கு தொடர்ந்து தெலுங்கானாவில் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

    அவருடைய கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலர் ஆளுங்கட்சியான காங்கிரசில் சேர்ந்து வருகின்றனர்.

    சந்திரசேகர ராவின் மகள் கவிதா மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சந்திரசேகர ராவ் பின்னடைவை சந்திப்பதால் அவருடைய கட்சி நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போகிறது.

    கட்சியை எப்படி வலுப்படுத்துவது என வழி தெரியாமல் சந்திரசேகர ராவ் திண்டாடி வருகிறார். இந்த நிலையில் அவருடைய பார்வை தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வின் பக்கம் திரும்பி உள்ளது.

    கருணாநிதி மறைவிற்குப் பிறகு கூட தி.மு.க. மாபெரும் வெற்றியை தேர்தலில் சந்தித்து வருகிறது.


    தி.மு.க.வின் கட்சி கொள்கை, செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அதனை பின்பற்ற சந்திரசேகரராவ் முடிவு செய்துள்ளார்.

    இதற்காக அவருடைய கட்சியின் முக்கிய தலைவர்களான முன்னாள் எம்.பி. பால்க சுமன், முன்னாள் விளையாட்டு ஆணைய தலைவர் ஆஞ்சநேயலு கவுட், ரவீந்தர் ரெட்டி ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 11 மற்றும் 12-ந் தேதிகளில் சென்னை திருவள்ளூர் உட்பட தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க.வின் கட்சி செயல்பாடுகள் கட்டமைப்புகளை ஆய்வு செய்தனர்.

    தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட தி.மு.க. தலைவர்களிடம் அமைப்பு மற்றும் பலம் குறித்து கேட்டறிந்தனர்.

    தி.மு.க. மற்றும் பி.ஆர்.எஸ். ஆகிய இரு கட்சிகளும் மாநில அளவில் தனி கொள்கை, கலாச்சாரம் மொழிகளை மேம்படுத்து வது போன்ற ஒற்றுமைகளை கொண்டுள்ளன.

    தி.மு.க.வில் கருணாநிதியைப் போல பி.ஆர்.எஸ். கட்சிக்கு சந்திரசேகர ராவ் பலமான தலைவராக உள்ளார்.

    இதனால் தி.மு.க.வின் செயல்பாடுகளை பின்பற்றி எளிதில் தெலுங்கானாவில் கட்சியை வலுப்படுத்த முடியும் என சந்திரசேகர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் ஆய்வு செய்த சந்திரசேகர ராவ் கட்சி முக்கிய தலைவர்கள் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. ஆழமான கட்டமைப்பை பெற்றுள்ளது. தி.மு.க.வில் கிராமம், தொகுதி, மாவட்டம் மற்றும் மாநில அளவில் கிட்டத்தட்ட 2 கோடி உறுப்பினர்கள் மற்றும் குழுக்கள் உள்ளன. குழு உறுப்பினர்கள் மாவட்டத்திற்கு 2 அல்லது 3 முறை தொடர்பு கொள்கிறார்கள்.

    கட்சி நிகழ்ச்சிகளை திறம்பட ஏற்பாடு செய்கிறார்கள். உள்ளூர் பிரச்சனைகளை விவாதிக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிளைகள் உள்ளன. இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மாணவர் பிரிவுகள் மகளிர் அணி என கிராமங்கள் தோறும் கமிட்டிகள் உள்ளன.

    மாநிலத்தில் 38 மாவட்டங்கள் இருந்தாலும் தி.மு.க. கிட்டத்தட்ட 70 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வின் செயல்பாடுகளை பின்பற்றி அடிமட்டத்தில் இருந்து பி.ஆர்.எஸ். கட்சியை வலுப்படுத்த விரும்புகிறோம்.

    தி.மு.க. செயல்பாடுகள் குறித்து அறிக்கை தயார் செய்து வருகிறோம். இதனை எங்களுடைய கட்சி செயல் தலைவர் கே.டி.ராமராவிடம் சமர்ப்பிப்போம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×