search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற மாடி ரெயில் தடம் புரண்டது- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
    X

    மாடி ரெயில் தடம் புரண்ட இடத்தில் மீட்பு பணி நடப்பதை படத்தில் காணலாம்.

    சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற மாடி ரெயில் தடம் புரண்டது- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

    • ரெயிலின் பின்பக்கத்தில் இருந்து 2-வது பெட்டியின் 2 சக்கரம் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது.
    • தடம்புரண்ட ரெயில் பெட்டி பிரிக்கப்பட்டு பாதிக்கப்படாத முன்பகுதி ரெயில் பயணிகளுடன் பங்காருபேட்டை நோக்கி புறப்பட்டு சென்றது.

    பெங்களூரு:

    சென்னை - பெங்களூரு இடையே மாடி ரெயில் (டபுள் டக்கர்) இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று இந்த ரெயில் (வண்டி எண் 22625) நேற்று காலை 7.25 மணி அளவில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

    அந்த ரெயில் காலை 11.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் குப்பத்தை தாண்டி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காருபேட்டை அருகே பிசநத்தம் ரெயில் நிலைய பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது ரெயிலின் பின்பக்கத்தில் இருந்து 2-வது பெட்டியின் 2 சக்கரம் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது. அதனால் அந்த ரெயில் பெட்டி குலுங்கியது. இதனை சுதாரித்து கொண்ட என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. யாருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

    இதுபற்றி உடனடியாக பெங்களூருவில் உள்ள மூத்த ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீட்பு ரெயிலுடன் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து தடம்புரண்ட ரெயில் பெட்டி பிரிக்கப்பட்டு பாதிக்கப்படாத முன்பகுதி ரெயில் பயணிகளுடன் பங்காருபேட்டை நோக்கி புறப்பட்டு சென்றது. தடம் புரண்ட பெட்டியில் இருந்த பயணிகள், மற்ற பெட்டிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அதனைதொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரெயில் பெட்டியை மீட்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

    இந்த சம்பவத்தின் காரணமாக ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. பெங்களூரு-சென்னை சென்டிரல் மாடி ரெயில் (வண்டிஎண் 22626) மதியம் 2.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நேற்று 2 மணி நேரம் தாமதமாக மாலை 4.30 மணிக்கு புறப்பட்டது.

    பெங்களூரு-சென்னை சென்டிரல் பிருந்தாவன் அதிவிரைவு ரெயில் (12640) மதியம் 3.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நேற்று 4 மணி நேரம் தாமதமாக இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதேபோல வேறு சில ரெயில் சேவைகளிலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

    Next Story
    ×