search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கார்கே மகனுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியதில் ஊழல் - பா.ஜ.க. குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி
    X

    கார்கே மகனுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியதில் ஊழல் - பா.ஜ.க. குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி

    • குற்றசாட்டுகளுக்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது.
    • பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மைசூரு நகர்புற மேம்பாட்டு ஆணையத்தின் (மூடா) இட ஒதுக்கீடு விவகாரத்தில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவிடம் விசாரணை நடத்த கவர்னர் உத்திரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசாரும், முதலமைச்சர் பதவியிலிருநது சித்தராமையா பதவி விலக கோரி பா.ஜனதாவினரும் போட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சனை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு நிலமோசடி புகார் எழுந்துள்ளது.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் ராகுல் கார்கே. இவர் சித்தார்த் விகார் என்ற பெயரில் ஒரு கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளைக்கு எஸ்.சி. இட ஒதுக்கீட்டின் கீழ் பெங்களூரு விமானவியல் பூங்காவில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.பி. லஹர் சிங் சிரேயோ கர்நாடக தொழில்துறை பகுதிகள் மேம்பாட்டு வாரியத்தால் ராகுல் தலைமையிலான அறக்கட்டளைக்கு அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி நிலம் ஒதுக்கியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். இந்த குற்றசாட்டுகளுக்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது.

    இது குறித்து கர்நாடக தொழில்துறை மந்திரி எம்.பி. பாட்டீல் கூறியதாவது:-

    சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே இந்த நிலம் ஒதுக்கப்பட்டது. ராகுல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை அமைப்பதாக கூறியுள்ளார்.

    அவர் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதனால் அவருக்கு நிலம் ஒதுக்கியுள்ளோம். கர்நாடக தொழில் மேம்பாட்டு வாரிய தொழிற்பேட்டையில் பல்வேறு நோக்கங்களுக்கு நிலம் ஒதுக்கப்படுகிறது. அதாவது ஆஸ்பத்திரி, பெட்ரோல் விற்பனை நிலையம், வங்கி, உணவகம், வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்கு அனுமதி அளிக்கிறோம். நாங்கள் ராகுல் கார்கேவுக்கு எந்த சலுகையும் வழங்கவில்லை.

    முந்தைய பா.ஜனதா ஆட்சியில் சாணக்கியா பல்கலைக்கழகத்திற்கு 116 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதனால் அரசின் கருவூலத்திற்கு ரூ.137 கோடி இழப்பு ஏற்பட்டது. லஹர் சிங் எம்.பி. இதுகுறித்து பேச வேண்டும். முன்பு தொழில் மேம்பாட்டு வாரியமே நிலத்தை ஒதுக்கும். ஆனால் இப்போது நாங்கள் நிலம் ஒதுக்க மாநில தொழில் துறை ஒப்புதல் அளித்து ஒற்றைச்சாளர குழுவுக்கு வழங்கியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×