search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாடு தொகுதியை ராகுல்காந்தி தக்க வைக்க கேரள காங்கிரஸ் முயற்சி
    X

    வயநாடு தொகுதியை ராகுல்காந்தி தக்க வைக்க கேரள காங்கிரஸ் முயற்சி

    • வயநாடு தொகுதி ராகுலின் இதயத்திற்கு நெருக்கமானது.
    • வயநாடு தொகுதி மக்களுடன் ராகுல் காந்தி நெருங்கிய தொடர்பில் உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக பணியாற்றினார். தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் அவர் வயநாட்டில் களமிறங்கி வெற்றி பெற்றார். அதே நேரம் அவர் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் வென்றுள்ளார்.

    எனவே 2-ல் ஒரு தொகுதி எம்.பி. பதவியை அவர் விரைவில் ராஜினாமா செய்ய உள்ளார். இதில் வயநாடு தொகுதியை தான் ராகுல்காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை வயநாடு மாவட்ட மற்றும் கேரள காங்கிரசார் மறுத்துள்ளனர். இது தொடர்பாக வலியுறுத்த ராகுல் காந்தியை சந்திப்பதற்காக 2 பேர் கொண்ட குழு டெல்லி சென்றுள்ளது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காக ராகுல்காந்தி இன்று வயநாடு செல்கிறார். இதற்காக காலை 10.30 மணிக்கு மலப்புரம் மாவட்டம் வந்த அவருக்கு எடவண்ணா பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வயநாடு தொகுதியை தக்க வைக்க அவரை வலியுறுத்த உள்ளதாக ராகுல்காந்தியின் தேர்தல் குழு ஓருங்கிணைப்பாளர் அனில் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    வயநாடு தொகுதி ராகுலின் இதயத்திற்கு நெருக்கமானது. ரேபரேலி தொகுதி அவரது குடும்பத்துடன் நெருக்கமாக உள்ளது. நாங்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள். அவர்கள் மத்தியில் தவறான எண்ணம் இருக்க கூடாது. எனவே ராகுல் காந்தி, வயநாடு தொகுதியை தக்க வைக்க வலியுறுத்துவோம். இல்லாத பட்சத்தில் அவருக்கு மாற்றாக பிரியங்கா போட்டியிடுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

    வயநாடு தொகுதி மக்களுடன் ராகுல் காந்தி நெருங்கிய தொடர்பில் உள்ளார். வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்த விவசாயிகளின் வீடுகளுக்கு, மாநில மந்திரிகள் செல்வதற்கு முன்பாகச் சென்று ஆறுதல் கூறினார். தற்போது அவர் ஒருபுறம் மேல்தட்டு பரம்பரைக்கும் மறுபுறம் முழுக்க முழுக்க பாசத்துக்கும் இடையில் சிக்கி இறுக்கமான இடத்தில் உள்ளார். அவர் வயநாடு தொகுதியை தக்க வைக்க தொடர்ந்து முயற்சிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×